தாதிதூ தோதீது

இதுவும் தகர வருக்கச் செய்யுள்தான். 'தூது’ என்ற சொல் பன்முறை வருமாறு பாடியுள்ளார். இங்ஙனம் பாடுமாறு ஒருவர் கேட்கக் கவிஞர் பாடியது.

நேரிசை வெண்பா

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி. 72

- கவி காளமேகம்

பொருளுரை:

அடிமைப் பெண்கள் சென்று உரைக்கும் தூதோ பயன்படாதது தீமை பயக்கும். கிளியோ போய்த் தூது உரைக்க மாட்டாது; தோழியின் தூதானது நாளைக் கடத்திக் கொண்டே போகும் தூதாயிருக்கும். தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் பயனற்றதாகும்;

(அதனால்) பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என்மேற் படர்ந்து மிகாது எனக்கு இனிமையான தான என் காதலனின் பெயரையே நான் ஓதிக்கொண்டிருப்பேனாக என்ற கருத்தமைத்துப் பாடினார் கவி காளமேகம்,

தலைவியின் இல்லத்தே தாய் தெய்வத்தை வழிபட்டுத் தன் மகளின் மனமாற்றத்தைத் தீர்க்குமாறு வேண்டுதற்கு ஏற்பாடு செய்ய, மகள், அதனை விலக்குமாறு இங்ஙனம் கூறினாளாகக் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-20, 7:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே