ஏய் கொரோனாவே
என்ன துணிச்சல் உனக்கு - நீ
என்னையே அச்சுறுத்த வந்திருக்கிறாய்...
இன்னும் அலைச்சல் எதுக்கு - நீ
பலரையும் வேரறுத்துச் சென்றிருக்கிறாய்...
யார் தந்த துணிச்சலோ?...
ஏன் இந்த அலைச்சலோ?...
ஓடிவிடு இல்லை ஒதுங்கிவிடு
சூரிய பார்வையால் சுட்டெரிப்பேன்...
உன்னைச் சூரிய பார்வையால் சுட்டெரிப்பேன்...
நீ விதைக்கவில்லை
நீர் தெளிக்கவில்லை
அறுவடை மட்டும் கேட்கிறாயே
நீ என்ன முதலாளி வர்க்கமா?...
கூட்டம் கூட்டிப் பரப்புகிறாய்
கூடும் பலத்தில் மிரட்டுகிறாய்
மக்களைப் பிரித்தும் வைக்கிறாயே
நீ என்ன அரசியல்வாதி வம்சமா?...
பயிர்களை நாசம் செய்வதாய்
உயிர்களை நாசம் செய்கிறாய்
நீ கண்ணுக்குத் தெரியாத
அந்தக் காட்டு யானையோ?...
அதீத பசி கொண்டு
மனிதர்களின் உயிர்ப்பாலைத்
தேடி தேடிக் குடிக்கின்ற
எந்த வீட்டுப் பூனையோ?...
தொடர் இருமல் தரும் கிருமியே
பல நாடு தாண்டி வருகிறாய்
பலர் கூடு தாண்ட முயல்கிறாய்
உயிர் சுவாசத்தையும் கெடுக்கிறாயே...
நீ சாதி மதம் பார்ப்பதில்லை
ஏழை பணக்காரன் எனப் பிரிப்பதில்லை
கருப்புச் சிவப்பு எனக் கண்டதில்லை
தீண்டாமை கொடுமையும் செய்வதில்லை...
அதனாலே கரிசனம் கிடைக்குமோ?...
கனவிலும் நினைக்காதே
அது ஒருநாளும் நடக்காது
உன் செயலுக்குத் தடையாய் இருப்பேன்...
சொல்வதைக் கேட்டிடு
கொல்வதை உடனே நிறுத்திடு
மருந்தில்லை என்றெண்ணி
விரும்பி இங்கேயே இருந்திடாதே...
மஞ்சளும் வேம்பும் உண்டு
மாட்டுச் சாணமும் உண்டு
உன்னைக் கொல்வதற்கல்ல
எதிர்த்து வெல்வதற்கே...
திரும்பிப் போக மாட்டேன்
இறப்புகள் இன்னும் கொடுப்பேன்
இதுதான் பிழைப்பே என்று
வாழ்வியல் வசந்தம் கெடுக்காதே...
சுத்தம் என்ற காலால்
உன்னை எட்டி உதைப்பேன்...
பிடித்துக் கொண்டால்,
சலவைக் கட்டியால்
உன் கொழுப்பைக் கரைப்பேன்...
ஊரடங்கு உத்தரவில்
பல தேசங்கள் தனித்திருக்கு
உன் பேரடங்கும் நாளோ?...
அருகில் தான் இருக்கு
அதுதான் புதிய கிழக்கு...
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..