சந்தோசம் பூக்குமோ

சந்தோசம் பூக்குமோ
சந்தேகம் தீர்க்குமோ
சமகால சூழல் மாற்றி
துயர்கால நெஞ்சை தேற்றி
உயிர் மீது தேனை ஊற்றுமோ..
உயர் வாழ்க்கைத் தேரில் ஏற்றுமோ..(சந்தோசம்)
**
நடமாடும் மனிதப் பூவில்
உயிர் தேனை பருகிப் போகும்
கிருமி என்ன பட்டாம் பூச்சியோ..

சடமாகும் அவலத் தீயில்
உடன் வீழ்ந்து கருகிச் சாகும்
மனம் என்ன விட்டில் பூச்சியோ

சாதி மத பேதம் வாழும்
வீதிகளில் ஊர்வலம் போகவே
சமதர்ம தேராகி வந்த நோயிலே
எமதர்மன் சிலையாகி குந்தும் போதிலே
சந்தோசம் பூக்குமோ... (சந்தோசம் பூக்குமா)
**
வேர்விட்டச் செடிகள் மண்ணில்
நீரின்றிச் வாடும் என்றோ
விழியோரம் நதிகள் பாயுதோ

சீர்கெட்ட உலகில் இன்று
போர் செய்யும் நோயின் தொற்று
நீர்மேலே எழுத்தாய் மாயுமோ
**
பாதி சனம் வாழும் உலகில்
மீதிசனம் வாடும் நிலையை
ஊதித்தள்ள நோயாய் வந்த நீதியே
உயிர்பறித்து நடுத்தெருவில் போடும் போதிலே
சந்தோசம் பூக்குமா .
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Apr-20, 1:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : santhosam pookkumo
பார்வை : 178

மேலே