களிக்கும் காலம் எது

======================
நடமாட யாருமின்றி நாதியற்று வீதி.
=நடைபாதை யாவுமின்று நடைப்பிணமென் றாகித்
தடுமாறும் வாழ்வினையே தந்ததொரு பீதி
=தனிலிருந்து விடுபட்டித் தரைமீதிம் மாந்தர்.
புடமிட்டத் தங்கமெனப் புதுப்பொலிவு கொண்டு
=புத்தகத்துப் பாடமெனப் பட்டவையிற் கற்று
தடம்பதிக்கு மெழிற்கோலந் தாவிவந்து இங்கு
=தடம்புரண்ட நிலைமீண்டு தலைநிமிர்த்த வேண்டும்.
**
அடைபடுத்தக் கோழியென அறைகளுக்குள் முடங்கி
=அகப்பட்ட வுணவுதனை ஆசையின்றி விழுங்கி
படைசொல்லும் அறிவுரைகள் படிவாழும் நிலைக்குப்
=பழகிவிட்ட நிலையிதற்கோர் பரிகாரம் தேடி
விடைபகர முடியாத வேதனைக்குள் விழுந்து
=விடிந்தபின் னுமிருளினையே விரட்டவழி யற்றுத்
தடைகால மென்கின்ற தவத்துக்குள் கிடந்து
=தரகேட்கும் வரமென்று தான்வருமோ அறியோம்.
**
கண்ணுக்குத் தெரியாதக் கிருமியொன்று ஒன்று
=கண்ணிருக்கும் யாவரையும் குருடாக்கி வைத்து
மண்ணுக்கு லனுப்பிவைக்கும் மாயவித்தை என்று
=மலையேறு மெனத்தவிக்கும் மனமேங்கி நிற்க,
விண்மீது ஏவுகணை விட்டவர்கள் கூட

=விழிபிதுங்கி நின்றிருக்க வித்திட்டத் துன்பம்
கண்மூடித் திறப்பதற்குள் கடந்தோடிப் போகும்
=காலமிங்கு விரைந்துவந்து களிப்பூட்ட லென்றோ?
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Apr-20, 12:26 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 67

மேலே