கார்ப்பரேட் கம்பெனியும் கந்தசாமியும்

கார்ப்பரேட் கம்பெனியும் கந்தசாமியும்

இயந்திரத்துக்கு மனிதாபிமானம் கிடையாது. அது ஆண், பெண், வயது, உறவுமுறை என்று எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாது. அது உடல்நிலை,சூழ்நிலை எதையுமே பார்க்காது. அதற்கு நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசம் தெரியாது. உயிரின் உன்னதம் வாழ்வின் வலி என்று எதுவுமே தெரியாது. அது கழுத்தை அறுக்கச் சொன்னால் உடனடியாக அறுத்துவிடும்.


கார்ப்பரேட் கம்பெனி ஒரு இயந்திரம். ஓய்வுபெற்ற அல்லது வேலை இழந்த மறுநாளே நீங்கள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும். ஆனால் நம் கதையில் வரும் கந்தசாமி கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யவில்லை. கதையும் கார்ப்பரேட் கம்பெனியைப் பற்றியதல்ல.

கந்தசாமிக்கு வயது எழுபதைத் தாண்டித் இருக்கும். நான் இந்தப் பள்ளிக்கூட விடுதியில் காப்பாளராகச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளில் அவர் ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்து நான் பார்த்ததில்லை. முழுநேரமும் பள்ளிக்கூடத்திலும் விடுதியிலும் தான் இருப்பார். மூன்று வேளையும் விடுதியில் தான் சாப்பிடுவார். அவர் தச்சு வேலை செய்பவர்.
பள்ளி வளாகத்தில் தான் விடுதியும் இருக்கிறது. இரண்டிலும் உடைந்த ஜன்னல், கதவு , மேசை, நாற்காலி போன்ற எதை சரி செய்ய வேண்டுமானாலும் அவரிடம்தான் செல்ல வேண்டும். அவரிடம் வேலை வாங்குவது மிகப் பெரிய போராட்டமாக இருக்கும். ஒரு சாதாரண வேலையைச் செய்ய குறைந்தது ஒரு வாரமாவது எடுத்துக்கொள்வார்.

கந்தசாமியிடம்,"ஹாஸ்டல்ல ஒரு ஜன்னல் ஒடஞ்சு இருக்கு, மூட முடியல, நைட் முழுக்க கொசு உள்ளே வருது. கொஞ்சம் வந்து சரி பண்றீங்களா" என்று கேட்டதற்கு " சரி நீங்க போங்க நான் வர்றே" என்று சொன்னார்.

ஒரு மணிநேரம் கழித்து மெதுவாக வந்தார். உடைந்த ஜன்னலைத் திறந்தும் மூடியும் பார்த்துவிட்டு "சரி நான் போய் சாமான் எல்லா எடுத்துட்டு வரேன்" என்று கூறிவிட்டுச் சென்றவர் மாலைதான் மெதுவாக வந்தார். உளி சுத்தியல் ஆகியவற்றை எடுத்து ஏதோ செய்தார். வயது எழுபதைத் தாண்டி இருந்ததால் அவரால் நன்றாக வேலை செய்ய முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த ஜன்னலை மூடிப் பார்த்தார் ஆனால் அது சரியாக மூடவில்லை. ஒரு கம்பியை எடுத்துக் கட்டிவிட்டு "சரி, நாளைக்குப் பாத்துக்கலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

எனக்குக் கோபம் வந்தது. "வாங்குற சம்பளத்துக்காகவாவது ஒழுங்கா வேலை பண்ண வேண்டாமா" என்று நினைத்துக்கொண்டேன். இரவு முழுவதும் அந்த ஜன்னலின் வழியே கொசுக்கள் வந்து கொண்டே இருந்தன, மாணவர்கள் யாரும் நன்றாகத் தூங்கவில்லை.

மறுநாள் காலை வெளியிலிருந்து ஒருவரைக் கூட்டி வந்து அந்த ஜன்னலைச் சரி செய்தேன். அவர் அதற்கு 300 ரூபாய் கூலியாகக் கேட்டார். பள்ளி அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொடுத்தேன்.

கந்தசாமியினால்தான் அந்த 300 ரூபாய் வீணாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். நாள் முழுவதும் இங்கு இருந்து கொண்டு, மூன்று வேளை சாப்பிட்டு விட்டு, சம்பளமும் வாங்கிக்கொண்டு வேலையும் செய்யாமல் இவர் இங்கே எதற்காக இருக்கிறார்? கந்தசாமி எப்படியாவது வேலையிலிருந்து தூக்கி விடவேண்டும் என்று நினைத்தேன்.

"இந்த ஏழு ஏக்கர் காம்பவுண்டுக்குள்ளே ஒரு ஊசி காணாமல்போன கூட என்னுடைய கவனத்துக்கு வரணும், புரிஞ்சுதா" இந்த வார்த்தைகள் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் தெரியும். அது "பெரியவரின்" வார்த்தைகள். அங்கு "பெரியவர்"தான் எல்லாம். அவர் சொல்வதே வேத வாக்கு. அவர் எதை சொன்னாலும் மறுப்போ எதிர்ப்போ இருக்காது. அவர் சொல்வது வார்த்தைகள் அல்ல கட்டளைகள். அதுவே விதிகளாக மாறும். பொதுவாக அவரிடம் யாரும் பிரச்சனைகளை எடுத்துச் செல்ல மாட்டார்கள். அதையும் மீறி யாராவது எடுத்துச் சென்றால் உடனடியாக பிரச்சனையை தீர்த்து வைத்துவிடுவார், பிரச்சினைத் தீரவில்லையெனில் மறுநாள் காலையில் பிரச்சினைக்கு காரணமான இருவரின் பெயரும் பதிவேட்டில் இருக்காது.

நான் விடுதி காப்பாளர் மட்டுமல்ல ஆசிரியராகவும் இருக்கிறேன்.
நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வேன் என்பதாலும், விடுதிக்கு வந்தபின் மாணவர்களை கட்டுப்படுத்தி நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறேன் என்ற காரணத்தினாலும் நான் பெரியவரின் புத்தகத்தில் நல்ல பக்கங்களில் இருக்கிறேன்.

பெரியவரிடம் சொல்லி ஒரு வேலையும் செய்யாத கந்தசாமியை வேலையைவிட்டு அனுப்பி விட வேண்டுமென்ற முடிவைச் செயல்படுத்த நினைத்தேன். அலுவலகத்திற்கு சென்று அனுமதிபெற்று பெரியவரைச் சந்தித்தேன். கந்தசாமி ஒரு வேலையும் செய்வதில்லை என்பதை விளக்கிக் கூறினேன். அவர் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டு விட்டு "சரி பார்க்கலாம்" என்றார்.

மாலையில் அவர் கந்தசாமியைக் கூப்பிட்டு
"என்ன ஒரு வேலையும் பாக்குறதில்லையாம், நீ என்ன அவ்வளவு பெரிய ....." திட்டினார். மறுநாள் காலையில் நிச்சயமாகக் கந்தசாமி வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை அவர் எப்பொழுதும் போல் அங்கேதான் சுற்றிக் கொண்டிருந்தார். சரி அடுத்த நாள் நடக்கும் என்று காத்திருந்தேன். நடக்கவில்லை. அடுத்த வாரம், அடுத்த மாதம் நாட்கள் மட்டுமே நகர்ந்துக் கொண்டிருந்தன. நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. கந்தசாமியை ஏன் வேலையை விட்டு நீக்கவில்லை என்பது எனக்குப் புதிராகவே இருந்தது.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு நாள் "பெரியவர்" வழியில் நடந்து கொண்டிருக்கும்போது என்னைக் கூப்பிட்டு " கந்தசாமி, இருபத்தஞ்சு வயசுல இந்த பள்ளிக்கூடத்த ஆரம்பிக்கும்போது வந்து சேர்ந்தான், நாப்பத்தஞ்சு வருஷமா இங்கதான் வேலை செஞ்சிட்டு இருக்கான். ஒருநாள் கூட லீவு எடுத்ததில்லை ஊருக்கு போனதில்லை. இங்க கட்டியிருக்கற கட்டிடங்கள்ல இருக்கிற எல்லா ஜன்னல், கதவு, மேசை, நாற்காலி எல்லாமே அவன் செஞ்சது தான். நீ ரிப்பேர் பண்ண சொன்ன அந்த ஜன்னல்கூட அவன் செஞ்சது தான். அவனுக்குக் கல்யாணம் கூட நான்தான் பண்ணி வச்சேன். அதோ அந்த ஓரத்தில நான் கொடுத்து சின்ன இடத்தில அவனே ஒரு வீடு கட்டி தங்கிட்டிருக்கான், குழந்தைங்க இல்ல", சிறிது நேரம் மவுனமாய் இருந்து விட்டு "அவனுக்கும் வயசாயிடுச்சு" , என்று சொல்லிவிட்டு மெதுவாகக் கடந்து சென்றார்.

அன்று "பெரியவர்" கந்தசாமியைக் கூப்பிட்டுத் திட்டியது என்னை திருப்தி படுத்துவதற்காகத்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
அதுவும் கந்தசாமிக்கு தெரிந்திருந்தது.

ஓய்வுபெற்ற மறுநாளே கந்தசாமி இருக்கும் இடத்தை யாரும் காலி செய்யச் சொல்லவில்லை.அவர் ஊருக்கும் அனுப்பப்படவில்லை.

நான் ஏற்கனவே கூறியது போல இந்த கதைக்கும் கார்ப்பரேட் கம்பெனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எழுதியவர் : சூரிய காந்தி (9-Apr-20, 10:18 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 121

மேலே