கற்ற பெரியர் சொன்னாலும் உற்ற சிறியர் உளந்திருந்தார் - புன்மை, தருமதீபிகை,616

நேரிசை வெண்பா

கற்ற பெரியர் கலைஞானம் சொன்னாலும்
உற்ற சிறியர் உளந்திருந்தார் - சுற்றிநேர்
கட்டி நிமிர்த்தாலும் காயும் கொடுநாய்வால்
ஒட்டி நிமிருமோ ஓது. 616

- புன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: .

கல்வியறிவுடைய பெரியோர்கள் நல்ல உறுதி நலங்களைச் சொல்லியருளினாலும் புல்லர் உள்ளம் திருந்தாமல் நாயின் வால் போல் தீய வழிகளிலேயே சுருண்டு திரிவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அரிய பெருமைக்குக் கல்வி உரிமையாய் உள்ளமையால் கற்ற பெரியர் என அவர் பெற்ற பேறு தெரிய வந்தது. அந்தப் பெருமையை இழந்திருப்பது சிறுமையாய் நேர்ந்தது.

கல்வியும் கேள்வியும் அறிவை வளர்த்து மனிதனை மகிமைப்படுத்தி வருகின்றன. இந்த அறிவின் விளைவுகளை எவ்வழியும் செவ்வையாய் ஈட்டிக் கொள்ள வேண்டும். கண்ணும் காதும் போல் கல்வியும் கேள்வியும் மருவியுள்ளன. கல்வியை இழந்தவன் கண் இழந்த குருடனாய்க் கடைப்படுகின்றான். கேள்வியை இழந்தவன் காது இல்லாதவனாய்த் தீதுழந்து கெடுகின்றான்.

நல்லோர் வாய்ச்சொல் உள்ளத்தை உயர்த்தி உறுதி நலங்களை விளைத்தருளுகின்றது. அந்தச் செவி அமுதத்தை இழந்தவன் அறிவுநலம் குன்றிக் கொடியவனாகின்றான்.

காதகம் கேள்வி கனியான் கொடியதோர்.
காதகன் ஆவான் கடிது.

நல்லோர் சொல்லை நயந்து கேளாதவன் பொல்லாதவனாய் இங்ஙனம் புலையுறுகின்றான்.

காதகன் - கொலை பாதகன். இனிய அறிவு நலனை இழந்த பொழுது கொடிய செயல்களைச் செய்து மனிதன் நெடிய பாவி ஆகின்றான்.

நல்ல தன்மை குன்றவே பொல்லாத புன்மை பொங்கி எழுகின்றது. புலைநிலையில் தலை நிமிர்ந்துள்ளமையால் நல்லோர் சொல்லும் அறிவு நலங்களைப் புல்லர் உள்ளங் கொள்ளாமல் ஊனமாய்ப் போகின்றனர். அப் போக்கு ஈனமாகின்றது.

தானும் அறிவு கெட்டுப் பிறர் சொல்வதையும் கேளாமல் பிழை மண்டியிருத்தலால் அந்தப் பேதைகள் வாழ்வு ஏதங்கள் நிறைந்து யாண்டும் பாதகமாயிழிந்து படுகின்றது.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். 848 புல்லறிவாண்மை

புல்லரது புலை நிலையை நினைந்து வள்ளுவர் இவ்வாறு உள்ளம் வருந்திச் சொல்லியுள்ளார். தானும் தெரிந்து கொள்ளான்; நல்லோர் சொல்லும் புத்திமதியையும் கேளான்; அத்தகைய பேதை செத்து ஒழியும் வரையும் இந்த உலகிற்கு ஒரு கொடிய நோயேயாம் என்றதனால் புல்லனது பிறப்பும் இருப்பும் எவ்வளவு இழிவுடையன என்பது எளிதே தெளிவாம். அழிமதியாவார் வாழ்வு பழிதுயரங்கள் ஆதலால் அவர் ஒழிவது உலகிற்கு உவகையாயது.

‘உற்ற சிறியர் உளம் திருந்தார்’. கற்ற பெரியர் கலைஞானங்களைப் பரிவோடு இரங்கிப் போதித்தாலும் புன்மை நிறைந்த புல்லர் உள்ளம் திருந்தி உயர்ந்து கொள்ளார் என இது உணர்த்தியுள்ளது.

‘புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்’ எனப் போயிற்று. இராம பாணம் தாடகை நெஞ்சில் தங்காமல் ஊடுருவி வெளியே விரைந்து போனமைக்கு இது உவமானமாய் வந்துள்ளது. பேரறிவாளரான நம் கவிஞர் பிரான் புல்லர்களோடு சொல்லாடி அல்லலுழந்துள்ள அனுபவம் இந்தச் சொல்லுருவில் தோன்றி நிற்கிறது. வாய்மொழி வாழ்வின் விளைவாய் வருகிறது.

நாய் வால் நிமிருமோ? தீய புல்லர்க்குத் தூய நல்லவர் எவ்வளவு இத நலங்களைப் போதித்தாலும் அவர் திருந்தமாட்டார் என்பதற்கு இது உவமையாய் வந்தது. புல்லர் உள்ளம் திருந்தார்; புலையிலேயே அலைவார்.

நாய் வால் இயல்பாகவே கோணலுடையது; அதனை யாரும் நேராக்க இயலாது. உள்ளத்தில் கோட்டம் உடையராய்ப் புல்லர் உருவாகி யிருத்தலால் அவர் எவர் சொல்லையும் கேட்டுத் திருந்த மாட்டார்; கேடே பாடமாய்க் கிளர்ந்து திரிவார்.

இன்னிசை வெண்பா

அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வியகொ ளல்தேற்றா தாங்கு. 322

- புல்லறிவாண்மை, நாலடியார்

புலையர் சூழலில் தோலைத் தின்று வந்த நாய் பாலின் சுவையைத் தெரியாது; அதுபோல் ஈனப் பழக்கங்களில் இழிந்துள்ள புல்லர் உயர்ந்தோர் சொல்கிற நல்ல தரும நீதிகளை உவந்து கேளார் என இது உணர்த்தியுள்ளது.

நிலையான நீசம் தெரிய ‘புலையர் நாய்’ என்றது, பொல்லாத புல்லர் அல்லலான வழிகளிலேயே யாண்டும் அவாவி அலைவராதலால் அந்த இழிமக்களோடு யாதும் பழகலாகாது என்பது குறிப்பு.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

பழிமுதல் நாணார்; செய்வன தவிர்வ
..பார்த்திடார்; குடிப்பிறப்(பு) ஒழுக்கம்
எழில்வளர் கல்வி ஆதிகள் பேணார்;
..எவரையும் முறிக்கும்சொற் செயலார்
கழிமகிழ் வுடையார்; கெடுதிகொண்(டு) ஆக்கம்
..கைவிடு வார்;செல்வம் உறினும்
கொழிபயன் எய்தார்; பிறர்க்கலால் தமர்க்குக்
..கொடாரிவர் பேதையர் ஒழிக.

தன்னையெப் பொருளும் அறிந்தவ னாகத்
..தான்மிக மதிக்கும்புல் லறிவின்
வன்மையை யுடையான் உறுதிச்சொற் கேளான்;
..வல்லதல் லாதுங்கொண் டுரைத்துப்
புன்மையைத் தெரிப்பான், நவைபுரிந் துலகோர்
..போல்நடிப் பான்தனை யுணர்த்தும்
நன்மதி யினரை அறிவில ராக
..நாட்டுவன் இவனையும் நண்ணேல்! – விநாயக புராணம்

‘பேதைப் புல்லரைச் சேராதே’ எனத் தன் மகனுக்கு ஓர் அரசன் இன்னவாறு புத்தி போதித்திருக்கின்றான்.. இழிந்தவரோடு கூடுதல் ஈனமே ஆகுமாதலால் அவரை ஒட்டாமல் ஒதுங்கி வாழ்வதே எவ்வழியும் நல்லதாம்.

இன்னிசை வெண்பா

பூத்தாலுங் காயா மரமுமுள நன்றறியார்
மூத்தாலு மூவார்நூ றேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலு நாறாத வித்துள பேதைக்
குரைத்தாலுஞ் செல்லா(து) உணர்வு.22 சிறுபஞ்சமூலம்

நல்ல நீதிகளை உரைத்தாலும் பேதைக்கு உணர்வு தோன்றாது எனக் காரியாசான் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா விளம்)

உ’ய்’த்தனர் தேன்மழை உதவிப் போற்றினும்
கைத்திடல் தவிருமோ காஞ்சி ரங்கனி
அத்தகவு அல்லவோ அறிவு இலாதவன்
சித்தம துணர்வகை தெருட்டு கின்றதே. 163

சூரன் அமைச்சியற் படலம், மகேந்திர காண்டம், கந்த புராணம்

எவ்வளவு இனிமையாக உறுதி நலங்களைப் போதித்தாலும் புல்லறிவாளர் திருந்தார்; உள்ளம் போனபடியே களித்து நடந்து கெடுவர் என இது காட்டியுள்ள காட்சியைக் கருதிக் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-20, 5:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே