26 தெய்வத் திருவடிகளைச் சேராதார் சேரிடம் இல்லார் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 10
அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் காய்ச்சீர் அருகி வரலாம்)
தோன்றக லிடம தென்னும்
= துன்பசா கரத்தி லத்தன்
தேன்தரு மலர்த்தாள் தெப்பம்
= சேர்கிலா தகன்று நிற்போர்
வான்றனைப் பிரிந்த புள்ளும்
= வாழுநீர் நீத்த மீனுங்
கான்றனை யகல்வி லங்கும்
= காவல்தீர் நகரு மொப்பார். 10
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”தோன்றுகின்ற விரிந்த உலகம் என்ற துன்பக்கடலில் நம் தந்தையாகிய கடவுளின் தேன் தரும் இனிமையான மலர் போன்ற, பெரும் துன்பப் பரப்பைக் கடக்கும் சாதனமாகிய திருவடிகளைச் சேராது விலகி நிற்பவர்கள், வானத்தைப் பிரிந்த பறவைக்கும், வாழ்கின்ற நீரைப் பிரிந்த மீனுக்கும், காட்டை விட்டகன்ற விலங்கிற்கும், காவல் இல்லா நகரத்திற்கும் ஒப்பாவார்கள்” என்று தெய்வத் திருவடிகளைச் சேராதார் சேரிடம் இல்லாதவர்கள் என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
தெப்பம் - புணை, பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம்