பத்தியம் காப்பாய் பயந்து ஒரு பாபஃது
வட்டிப் பணமெடுத்து வாழ்க்கை நடத்திடக்
குட்டிக ளீனும் கொடுமைபோல் – கட்டிப்
பிடிக்கும் கொரோனா பெருமளவு தொற்றித்
துடிக்கவிடு தன்றோ துணிந்து.
**
துணிந்துவருந் தொற்றைத் துரத்துதற் கென்று
அணியும் முகக்கவச அம்பால் – பிணிக்கோர்
தடையிட்டுக் கொள்ளுமுன் தற்பாது காப்பு
படைபோலக் காத்திடும் பார்.
**
பாரெங்கும் பல்கிப் பெருகிடும் நோய்த்தொற்றை
ஊரடங்கு மட்டும் ஒழிக்காது – நேரெதிர்
நின்றுற வாடும் நிலைதவிர்த்தும் கூட்டமாய்
ஒன்றா திருந்துமே ஓம்பு
**
ஓம்பு முயர்கொள்கை ஒவ்வோர் மனிதர்க்கும்
காம்பருகே முள்ளிருந்தும் காசினியர் – மேம்படப்
பூக்கும் கவனமதைப் பொக்கிசமாய்க் கொண்டமலர்
நோக்க மெனவாதல் நோன்பு
(நோன்பு – தவம்)
**
நோன்பிருக்கும் காலத்து நொந்துருகும் மெய்தாண்டி
தேன்பருகும் ஆன்மாவின் தெய்வீகம் – போன்றதெனத்
தானுனது சுத்தம் தகைமை பெறுதற்கு
வானளவு உன்னை வருத்து.
**
வருத்தித் தனித்திருந்து வாழப் பழகும்
ஒருவர் பலராய் உலவும் – திருநாட்டில்
தொற்றும் வழியற்றுத் தோல்வி தனைத்தழுவி
முற்றுப் பெரும்நோய் முறிந்து.
**
முறியாப் பிணிக்கு முடிசூட்டிப் பார்க்கும்
அறியா தவரறியு மாற்றல் – நெறியை
சரியாய்ப் புகட்டிச் சரிகட்டி விட்டால்
மரியாப் பிணிமாயு மிங்கு.
**
இங்கு தினந்தோறும் ஏழை படுபாட்டைத்
தங்கு தடையின்றித் தானறிந்தும் – எங்கும்
பரவும் கொரோனா படையெடுப்பை எட்டி
வரச்செய்ய லாமா வலிந்து.
**
வலிந்து பிணிவிரட்டி வாழா திருந்தால்
எலிக்கஞ்சும் பூனையென இன்று – மலியும்
மனிதம் தினமும் மரணத்தை மட்டும்
இனிகாண நேரும் இகத்து.
**
இகமாந்தர் தேடும் இதமான வாழ்க்கைச்
சுகவாரி நீந்திச் சுவைக்கத் – தகவாறு
சுத்தத் தொடுமுனது சொந்தத் தனிமையொடும்
பத்தியம் காப்பாய் பயந்து.
(*சுகவாரி –ஆனந்தசாகரம்)
*** *** ***