196 பொல்லாங்கு எவைக்கும் பொய்யே பிறப்பிடம் - பொய் 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
இழுதைசொல்லி மறைக்கலாமெ னுந்திடத்தாற் பாதகங்கள்
..எல்லாந் தீயர்
பொழுதெலாம் புரிதலாற் குற்றங்கள் யாவுக்கும்
..பொய்பி தாவாம்
வழுதொன்றை நீக்கிடிற்றீ வினைகளெலா நீங்கிடுநல்
..வண்மை யொன்றே
முழுதுமுண ரறிஞர்க்குத் தோழனா மவர்க்கதனான்
..மோச முண்டோ. 2
-பொய்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பொய் சொல்லி தங்கள் செயல்களை மறைத்து விடலாமென்ற எண்ணத்தால் எல்லாப் பாவங் களும் தீயவர்கள் எப்பொழுதும் செய்கின்றனர். அதனால், நடைபெறும் குற்றங்கள் அனைத்திற்கும் பொய்தான் பிரதானமாகும். சொல்லும் பொய் ஒன்றை நீக்கிவிட்டால் தீமைகளெல்லாம் தாமே நீங்கிவிடும்.
நன்மை தரும் மெய் ஒன்றே எல்லாம் உணர்ந்த சான்றோர்க்கு நண்பனாகும். அவர்களுக்கு அதனால் கேடு ஏதும் உண்டோ” என்று கேட்டு பொய்தான் நடைபெறும் தவறுகளுக்கு எல்லாம் பிறப்பிடம் என்கிறார் இப்பாடலாசிரியர்.
இழுதை - பொய். திடம் – எண்ணம், வழுது - பொய். வண்மை - மெய்.