மேளமேன் ராஜாங்கமேன் - நேரிசை வெண்பா

தில்லையிலே, சபாநாயகர் பிச்சாடன வடிவுடனேயே திருவீதி வலம் வருகின்றனர். அவருக்குமுன் எக்காளம் முழங்கு கின்றது. யானை அணிபுனைந்து செல்லுகின்றது. மேள வாத்தியங்களின் ஒலியும் இடியொலி போன்று எழுகின்றது. குடை கொடி முதலிய ராஜாங்க விருதுகளும் செல்கின்றன.

“பிச்சாடன மூர்த்தியே! பிச்சை எடுக்க தெரு வீதியிலே புறப்படுகிறவர் தாமே நீர்? உமக்கு ஏன் ஐயா இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள்?’ என்று கேட்பவரே போலக் கவிஞர் அந்த ஊர்வலக் காட்சியை வியந்து போற்றுகின்றார்.

நேரிசை வெண்பா

நச்சவரம் பூண்டதில்லை நாரதரே! தேவரீர்
பிச்சையெடுத்(து) உண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்க்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராஜாங்க மேன்? 98

- கவி காளமேகம்

பொருளுரை;

நஞ்சினைக் கொண்ட பாம்பினை அணியாகப் பூண்டிருக்கும் தில்லை நகர்க்கு உரிய தலைவரான எம்பிரானே! தேவரீர் பிச்சை எடுத்து உண்ணும் பொருட்டாகவே திருவீதியிலே எழுந்தருளியும், சிறப்புடையதான எக்காளம் எதற்காகவோ? யானையும் எதற்காகவோ? கருமையான கடலின் ஒலிபோல முழக்கமிடுகின்ற மேள வாத்தியங்கள் எதற்கோ? மற்றும் அரச விருதுகளும் எதற்காகவோ?

"பிச்சைக்குப் போகையிலேயும் நுமக்கு இவ்வளவு தடபுடல்கள் எதற்கப்பனே?” என்கிறார் கவிஞர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-20, 7:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே