குமரேச சதகம் - அந்த அந்த இனத்தில் உயர்ந்தவை - பாடல் 24
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தாருவில் சந்தனம் நதியினில் கங்கைவிர
தத்தினில் சோமவாரம்
தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்
தலத்தினில்சி தம்பரதலம்
சீருலவு ரிஷிகளில் வசிட்டர்பசு விற்காம
தேனுமுனி வரில்நாரதன்
செல்வநவ மணிகளில் திகழ்பதும ராகமணி
தேமலரில் அம்போருகம்
பேருலவு கற்பினில் அருந்ததி கதித்திடு
பெலத்தில்மா ருதம்யானையில்
பேசில்ஐ ராவதம் தமிழினில் அகத்தியம்
பிரணவம் மந்திரத்தில்
வாரிதியி லேதிருப் பாற்கடல் குவட்டினில்
மாமேரு ஆகுமன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 24
- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
மரங்களிலே சந்தன மரம், ஆறுகளிலே கங்கையாறு, நோன்புகளிலே திங்கட்கிழமை நோன்பு, பெருமை மிக்க நாடுகளிலே காஷ்மீரம், நகரங்களிலே சிதம்பரம்,
சிறப்புடைய ரிஷிகளிலே வசிட்டர், பசுக்களிலே காமதேனு, முனிவர்களிலே நாரதர், செல்வமாகிய ஒன்பது மணிகளில் விளக்கமான பதுமராகம், தேனையுடைய மலர்களில் தாமரை மலர்,
புகழ்பெற்ற கற்பரசிகளில் அருந்ததி, மோதி வரும் ஆற்றலிலே காற்று, யானைகளிற் சிறப்பித்துக் கூறும் ஐராவதம், தமிழ் நூல்களில் அகத்தியம், மந்திரங்களிலே பிரணவம்,
கடல்களிலே பாற்கடல், மலைகளில் மாமேரு மலை சிறப்புடையன ஆகும் அல்லவா?
விளக்கவுரை:
காமதேனு (வட): விரும்பியவற்றை அளிக்கும் பசு. இஃது இந்திரனுடையது.
அம்போருகம் - தாமரை, (நீரில் தோன்றுவது) அம்பு - நீர்.
அகத்தியம் தமிழிலே முற்காலத்தில் இருந்ததாகக் கருதப் பெறும் முத்தமிழிலக்கணம்.
கருத்து:
இங்குக் கூறப்பட்ட உயர்திணைப் பொருளும் அஃறிணைப் பொருளும் அவ்வவ்வினத்தில் உயர்ந்தவை.