நாட்டுப்புறக் கலைகள் கவிஞர் இரா இரவி
நாட்டுப்புறக் கலைகள்
கவிஞர் இரா. இரவி.
******
நன்மைகள் தரும் நாட்டுப்புறக் கலைகள்
நல்ல சேதிகள் சொல்லும் சிறந்த கலைகள் !
கரகம் காவடி பொய்க்கால் குதிரை என
கலைகள் நூற்றுக்கு மேல் உள்ளன !
கரகக்கலை மிகவும் நுட்பமானது பழமையானது
கரகம் தலையிலிருந்து விழுந்து விடாமல் ஆடுவது !
இமைகளால் ஊக்கை எடுத்துக் காட்டுவதும் கரகக்கலை
இமைகளை மூடி கட்டி விட்டு வாழைக்காய் வெட்டுவது !
தலையில் தீ பந்தம் வைத்து சுற்றுவது கரகக்கலை
தவறி விழாமல் உருளைக் கட்டையில் ஆடுவது !
கரகக் கலையிலேயே பல வித்தைகள் உண்டு
கலைமாமணி விருதுகள் பெற்ற கலைஞர்கள் உண்டு!
கட்டைக்கால் என்று உயரமான ஆட்டம் உண்டு
கட்டை தடுக்கினால் ஆபத்தும் இதில் உண்டு!
பொய்க்கால் குதிரையிலும் கட்டைக்கால் உண்டு
பூமியில் நாட்டுப்புறக் கலைகள் பல உண்டு!
காவடி விழுந்து விடாமல் ஆடுவதும் கலை
காவடி வைத்துக் கொண்டு வித்தைகளும் செய்வர்!
குறவன் குறத்தி ஆடல் பாடல் கலைகள் உண்டு
கொஞ்சம் வசனத்தில் கிராமிய மனம் கமழ்வதுண்டு !
பறை இசை அடிப்பதும் நாட்டுப்புறக் கலையே
பறைஇசைக்கு இணை இசை உலகிலே இல்லை!
மேளம் தவுல் நாதஸ்வரமும் நாட்டுப்புறக் கலையே
மேளம் இல்லாத நடனம் எடுப்பது இல்லை!
வழக்கொழிந்து வருகின்றது நாட்டுப்புறக்கலை
வாரிசுகளுக்கு கற்றுத்தர வேண்டியது கடமை!
வறுமையின் காரணமாக விட்டவர்கள் உண்டு
வாய்ப்பு வழங்கினால் திறமையைக் காட்டுவார்கள்!
நலிந்து வரும் நாட்டுப்புறக் கலையை மீட்போம்
நல்ல கலைகளை நாளும் வளர்த்து வருவோம்!