கவலை
ஒரு செயலைச் செய்வதற்கு முன் அச்செயலை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருக்க வேண்டும். அதுபற்றியான தெளிவான திட்டமிடுதல் வேண்டும். இவையெல்லாமே வெற்றியைத் தரக்கூடிய உறுதியான எண்ணங்கள் ஆகும் . இவற்றோடு தொடர்பு அல்லாத அல்லது ஒட்டாத ஒன்று உள்ளது என்றால் அதுதான் கவலைப்படுதல் என்ற தேவையற்ற மனநிலை . இது எல்லோரிடத்திலும் உள்ளது, ஆனால் அது பலருக்கு குறைவாகவும், சிலருக்கு அதிகமாகவும் இருக்கிறது.
கவலைபடுதல் என்பது இது ஒரு புதைமணலை போன்றது. பொதுவாக பிள்ளைகள் அன்றாடப் பாடங்களைப் படிக்கும் முன்பே இவ்வளவு படிக்கணுமா என்ற மனநிலை வந்துவிட்டால் அது அவர்களுடைய மனதை படிக்கவிடாமல் செய்துவிடும். அல்லது படித்தாலும் மனதில் பதியவைக்க கடினமாக்கிவிடும். சில பிள்ளைகள் நினைப்பதுண்டு, அட இவ்வளவு படிக்க வேண்டுமா? என்று கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் படிக்க முயற்சி செய்யமாட்டார்கள். படிக்கத் தொடங்குவதிலேயே நாட்களை கடத்தினால் படிக்க வேண்டிய பகுதிகள் அதிகமாகிக் கொண்டேதான் போகும். புதைமணலில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து வெளியே வர கையையும் காலையும் அசைத்தபடி ஆட்டினாலும் இன்னும் உள்ளேதான் புதைந்து போவார்களே தவிர மேல வரமுடியாது . அதே போலத்தான் என்ன வேலை இருக்கிறதோ அதைச் செய்யாமல் அதை இன்னும் முடிக்கவில்லையே எனக் கவலைப்படுவதும், அல்லது வேலை போய்விடுமோ என்றும் நினைப்பவர்களுக்கும் மேலும் மேலும் கவலைகளை கூட்டுமே தவிர குறைக்காது. மற்றும் தொடர்ந்து உடல்நிலையை பாதிக்க செய்யும்.
மகாகவி பாரதியார் சொல்லுகிறார், "கருதிக் கருதிக் கவலைப்படுவார்' என்னவென்றால் கவலைப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை ஒரு ஒருமுறை மட்டுமே நினைத்து கவலைப்பட மாட்டார்கள். பலமுறை ஒரே விஷயத்தையோ, அல்லது அந்த நிகழ்வையோ திரும்பத் திரும்ப நினைவில் கொண்டுவந்து கவலையை அதிகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். எனவேதான் பாரதியார் இரண்டுமுறை கருதிக் கருதி என்று எழுதியுள்ளார் என விளக்கம் சொல்கிறார்கள் பேராசிரியர்கள். யோசித்துப் பார்த்தால் இன்னொன்றும் தோன்றுகின்றது. இப்படி ஆகிவிட்டதே என்று கடந்தகாலத்தைப் பற்றியும், இனி இதன் காரணமாக என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சத்தில் எதிர்காலத்தைப் பற்றியும் நினைத்து கவலைப்படுவதால்தான் நாம் நிகழ்கின்ற காலத்தை இழந்துக்கொண்டு இருக்கிறோமோ என்ற அச்சம் வருகிறது.
இந்த மனப்பாங்கு எல்லோருடைய முன்னேற்றத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவையே தரும். இதை போன்ற நிகழ்வுகளை அடிக்கடிச் சந்திக்கும் நபர்கள் சரியாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடுவார்கள் என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது.
நாம் செய்ய நினைக்கும் காரியம் தடைப்பட்டாலோ அல்லது தளள்ளிப்போனாலோ உடனே அதை நினைத்து பொரும்பாலனோர் கவலைப்படுவது வாடிக்கையாகி உள்ளது. கவலைப்படுவதனால் என்ன பயன்? அந்த காரியங்கள் உடனே நடந்துவிடுமா என்ன? அது எதனால் தடைப்பட்டு உள்ளது அல்லது தள்ளிப்போனது என்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். அதை முதலில் சரியாக்க வேண்டும். நம்மால் சரிசெய்ய முடியுமென்றால் சரிசெய்து கொள்ளலாம். செய்ய முடியவில்லையென்றால் சரியாகும் வரை காத்து இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு நடக்கவில்லையே என்று கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. அப்படி கவலைப் படுவதால் நம்முடைய உடம்பில்தான் பல நோய்களை கொண்டுவரும் அல்லது நோய்களை அதிகப்படுத்தும். கவலைப்படுவதை விடுத்து, நிலைமையைச் சரி செய்யவோ அல்லது அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவோ முயற்சி எடுக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியும்.
நாம் கவலைப்படுவது என்பது அதிகமானால் அது நம்மை மரணம் வரை இட்டுச் சென்றுவிடும். இதனால் பாதிக்கப்படுவது பலர். இந்த உணர்வை முதலில் நம் மனதில் ஏற்படுத்த வேண்டும். ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால், அதை எவ்வாறு திருத்திக் கொள்வது என அறிந்து அதன்படிச் செயல்பட வேண்டும். நம்முடைய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் கவலை கொள்வதை நிறுத்திவிட்டு, கவலைக்கான காரணத்தைச் சரிசெய்ய முயற்சி செய்யவேண்டும்.
பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து, தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
"அழுது கொண்டு இருக்கும் நேரத்தில் உழுது கொண்டு இரு' என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அதுதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. கவலைப்படுது என்பது தோல்வி மனப்பான்மையாக அமைந்துவிடும். அப்படியான நேரத்தில் அக்கறை, ஆர்வம், கவனம், நம்பிக்கை ஆகிய உணர்வுகளை எண்ணி பார்க்க வேண்டும் . அவை வெற்றிப் பாதையில் நம்மை நிச்சயம் வழி நடத்திச்செல்லும் . இல்லையென்றால் கவலை உங்கள் உடம்பில் நீங்க முடியாத நோயாக மாறிவிடும். உங்கள் உடனிருப்போரையும் அது பாதிக்கும். குறிப்பாக முன்னேற்றத்தை முடக்கிவிடும். அது அடுத்தவர்களை பற்றிய தவரான எண்ணத்தையும் உருவாக்கும்...நன்றி.
கருங்கல் சேகர்ஜினி.