596 எல்லார்க்கும் இனியராய் இயல்பவர் மேலோர் - ஞானாசிரியன் பெருமை 2

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)

அயலார்ம தத்தைக்கு ணத்தைப்ப ழிக்கார்
..அறமீது மறமீதெ னச்சொல்வர் பொதுவாச்
சுயவூதி யந்தன்னை நட்டத்தை மதியார்
..சூழ்ந்தோர்க ளீடேறு மாறென்று முயல்வார்
இயல்செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார்
..என்பேதம் ஓராரி யாவர்க்கும் இனியார்
பயனொன்று விழைவோரை மறைதன்னில் ஏலார்
..பழியற்ற மொழிபெற்ற வழியுற்ற மேலோர். 2

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

செந்நெறியொழுகும் செல்வர், தங்கள் கொள்கையில்லாத பிற கொள்கையாளர்கள் சமயக் கருத்துக்களை ஒருசிறிதும் நன்றல வாயினும் நான் மாறு உரைக்கிலேன் என்பதற்கிணங்கப் பழியார்.

பொதுவாக நன்னெறி யொழுகி இன்பெய்தும் புண்ணியம் ஈது, புன்னெறிச்சென்று துன்பெய்தும் பாவம் ஈது என உளங்கொள விளம்புவர்.

தமக்கு வரும் ஆக்க அழிவுகளாகிய ஊதிய இழப்புகளை எண்ணார். தம்மைச் சார்ந்தவர்கள் செல்வமும் சிறப்பும் எய்தி ஈடேறவே எண்ணி என்றும் உலையா முயற்சி தலையாகக் கொள்வர்.

செல்வர், வறியர், நல்லார், பொல்லார் முதலிய எவ்வகை வேறுபாடும் கனவினும் கருதார்.

இறைவன் போன்று யாவர்க்கும் இனிய இயல்பினராவர்.

சிற்றூதியமேனும் விழைபவர் நற்றிறம் படரும் நல்லோர் ஆகார் என்று, அவரைத் தம் சுற்றமாகக் கொள்ளார்.

இவர்களே குற்றமற்ற நன்மொழிசேர் செந்நெறியினராவர்.

சுயவூதியம் - தம் வருவாய்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-20, 10:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே