ஜெனரல் ஆஸ்பத்திரி


எனக்கு மாசா மாசம் சம்பளம் ஒழுங்காவரதோ இல்லையோ வாரா வாரம் தவறாம இந்த வயுத்து வலி வந்துவிடும்.

“இந்தத்தடவை என்னவோ வயத்து வலி கொஞ்சம் ஓவராத் தெரியறது” என்றேன் என்மனைவியிடம்.

ஓவர்னா நல்லதுதானே. வயத்து வலி ஓவர் ஆயிடுத்தா? அதுக்கு ஏன் இப்படி சிணுங்கறேள் எள்றாள் என் தர்ம பத்தினி

அந்த ஓவர் இல்லே. இது அதிகமாப்போற ஓவர்.

ஜாஸ்தியாப்போற ஓவரா?

ஆமாம்.

பேசாம நம்ம டாக்டர்கிட்டே திரும்பத்திரும்ப வராம இருக்கறதுக்கு ஒரு வழி பண்ணணும்னு கேட்டுண்டு வாங்கோ.

சரி,சரி எப்பவும்போல போய்ப் பாத்துட்டு ஒரு ஆன்டாசிட் கொடுப்பார். வாங்கிண்டு வரேன்.

டாக்டர் டிஸ்பென்சரிக்குப்போகிறேன்.

டாக்டர், வயத்து வலி வழக்கம்போல என்றேன்

வயிற்றைப்பிசைந்தார். என் வயத்தைத்தாங்க.

அடிக்கடி உங்களுக்கு இந்த வலி வரதாலே பேரியம் மீல் டெஸ்ட் பண்ணினா நல்லது”.

“எங்கே பண்றது டாக்டர்?”

“உங்க வயத்துலதான்”. கிண்டல் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்.

“அதைக் கேக்கலை டாக்டர். எந்த லேப்லே பண்றதுன்னு கேட்டேன்”

“அப்படியா? நீங்க என்ன கவர்மென்ட் செர்வன்டா?”

“ஆமாம் டாக்டர். நான் ஸ்டேட் கவர்மென்ட் சர்வன்ட்.”

“அப்படியா? அப்படின்னா நீங்க ஜெனரல் ஹாஸ்பிடல்லே ஸ்பெஷல் வார்டு அட்மிட் பண்ணிக்கிட்டு அங்கே இதை செஞ்சிக்கலாம். நான் அங்கே இருக்கிற டாக்டர் ஒருத்தறதுக்கு லெட்டர் தரேன். அவர் பாத்துப்பார் உங்களை”.

“சரி டாக்டர்”.

நான் நேராக மைலாப்பூரிலிருந்து GH என்று நாம் சுருக்கமாகச்சொல்லும் ஜெனரல் ஹாஸ்பிடலுக்குப்போனேன் டாக்டரைப் பார்க்க. (GHக்குப்போவதற்குள் எவ்வளவு வளைசல்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்பொழுது நேராக எப்படிப் போனேன்னு கேக்காதீங்க) .அந்த டாக்டரைக் கண்டுபிடித்து அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள ஒருநாள் முழுவதும் ஆயிற்று. சரி. அரைநாள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆஸ்பத்திரிக்குப் போறவனுக்கு அரை நாளுக்கும், ஒரு நாளுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியாது. அந்த டாக்டரிடம் என்டாக்டர் என்னிடம் கொடுத்த கடிதத்தையும் கொடுத்தேன்.
“நீங்க ஸ்டேட் கவர்மென்டா?”

என்னையே ஸ்டேட்கவரண்மெண்ட் டாக உயர்த்திவிட்டாரே என்று மகிழ்ந்த நேரத்தில் அவர் “ இப்ப ஸ்பெஷல் வார்டுலே இடமில்லை. எல்லாம் ஃபுல். ஜெனரல் வார்டு உங்களுக்குப் பரவாயில்லையா?”

“ஸ்பெஷல் வார்ட் கிடைக்க எத்தனை நாள் வெயிட் பண்ணணும்?”

“ரெண்டு வாரம் ஆகும்”

ரெண்டு வாரம் என் வயறு தாங்குமான்னு தெரியவில்லை.
“சரி. நான் ஜெனரல் வார்டிலேயே அட்மிட் ஆறேன்”.

எனக்கு ஒரு கட்டில் அல்லாட் பண்ணப்பட்டது. அது ஒரு பெரிய ஹால். இரு புறமும் தலா பத்து பத்து கட்டில்கள் போடப்பட்டிருந்தன.

டாக்டர் மறுநாள் காலை டெஸ்ட் என்று சொல்லிவிட்டு, “அந்த நேரத்திலிருந்து டெஸ்ட் முடியும் வரையில் எதையும் சாப்பிடக்கூடாது என்றும் தேவைப் பட்டால் தண்ணீர் குடிக்கலாம்” என்றும் சொன்னார்.
நான் அங்கு தங்குவதற்கான ஆயத்தங்களுடன்தான் வந்திருந்தேன். எனவே சரி என்றேன்.
எனது கட்டிலுக்கு அடுத்த கட்டிலில் இருந்தவர் என்னை விசாரித்தார்.
“உங்களுக்கு என்ன உடம்புக்கு?”

“அசிடிட்டி பிரச்சினை. பேரியம் மீல் டெஸ்டுக்காக வந்திருக்கேன்”.

“அப்படின்னா பயமில்லை. நேத்து ராத்திரி உங்க கட்டில்லே இருந்தவர் செத்துப்போயிட்டார். ஏதோ பெரிய ஆபரேஷன். உங்களுக்குப் பிரச்சினை இல்லை”.

அக்கடா என்று இருந்த என்னை உசுப்பிவிட்டது அவர் பேச்சு. ஆனால் பேரியம் மீல் டெஸ்ட்டுலே இதுவரையிலும் யாரும் செத்திருக்க மாட்டார்கள் என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அங்கே பலவிதமான நோயாளிகள். ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. அவர்களைப் பார்க்க உறவினர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் நோயாளிகள் சிலருக்கு சாப்பிட உணவுப் பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள். எப்பவுமே பசி எடுக்காத எனக்கு, டாக்டர் எதுவும் சாப்பிடக்கூடாது என்று சொன்ன அந்த நேரத்திலிருந்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று ஒரு வெறி ஏற்பட்டது. போதாததற்கு சிலர் சாப்பிடுவதைப் பார்க்கும்போது பசி அதிகமாவது போல் தோன்றியது. தோசை சாப்பிட வேண்டும் என்று ஏனோ என் உள் மனது என்னைப்பிடித்து ஆட்டியது. ஆனால் அதற்கும் அடியிலிருந்த இன்னொரு மனது என்னைக் கட்டுப்படுத்தியது. ராத்திரி நேரம் பூராவும் என் உள் மனது 1ம் உள் மனது 2ம் போராடின.

அதற்கிடையில் அங்கேயுள்ள கழிவறைக்கு சிறுநீர் கழிக்கச் சென்றேன். அங்கு இருந்த கணுக்காலளவு அசிங்கத் தண்ணீரைப்பார்த்தவுடன் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. அப்படியே பேரியம்மீலாவது, கீலாவது என்று சொல்லி ஓடிப்போய்விடலாமா என்று தோன்றியது. வேறு வழியின்றி பட்டினியால் ஓடத்திராணியின்றி அந்த இரவை எப்படிக் கழிக்கப்போகிறோமோ, இன்னும் எத்தனை தடவை கழிவறையைப் பயன்படுத்த வேண்டுமோ என்ற சோகத்தில் என் படுக்கைக்கு வந்தேன். அங்கு என்படுக்கையில் வேறு ஒருவர் கேள்விக்குறியாகப் படுத்துக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி இது என் படுக்கை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வார்டு பாய் வந்து
“சார். அவர் ஒரு சீரியஸ் கேஸ் சார். அவராலே கீழே படுக்க முடியாது. நீங்க வெறும் டெஸ்டு கேஸ்தானே சார். அதனாலே டாக்டர் இந்தக்கட்டிலுக்குக்கீழே தரையிலே உங்களை படுத்துக்கச்சொன்னார்” என்றான். வேறே வழி. கட்டிலிலிருந்து கட்டாந்தரைக்கு டிப்ரமோஷன்.
கொண்டு வந்திருந்த துண்டைத் தரையில் விரித்து, எதற்கும் இருக்கட்டும் என்று கொண்டுவந்திருந்த வேஷ்டியை பைக்குள் அடைத்து அதை தலையணையாக வைத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். எங்கள் கிராமத்தில் தரையில் படுத்து எனக்குப் பழக்கமாகையால் எனக்கு அது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. அதைவிட என் கட்டிலை ஒரு சீரியஸ் நோயாளிக்கு விட்டுக்கொடுத்தது அதியமான் மயிலுக்குப் போர்வை தந்த சந்தோஷத்தைக்கொடுத்தது.

ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். குய்யோ, முறையோ என்று ஒரு ஆள் கதறிக்கொண்டே அந்த ஹாலின் உள்ளே நுழைந்தார். அந்த நேர ட்யூட்டி டாக்டர் அவரைக் “கத்த வேண்டாம் என்றும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த ஆள் ஓய்வதாயில்லை. என்ன விஷயம் என்றால் அவர் மீன் சாப்பிடும்போது மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டு விட்டதாம். இதெல்லாம் எனக்குத் தெரியாத, புரியாத விஷயம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அந்த ஆள் அலறலுக்குப்பிறகு அவரை அங்கிருந்து டாக்டர் வேறு இடத்திற்குக் கூட்டிப்போனார். எங்கு என்று தெரியவில்லை. எதற்கு என்று தெரியவில்லை.
எப்படியோ அந்தக்கூச்சல் ஓய்ந்தது என்ற நினைத்த நேரத்தில் ஜயோ, ஐயோ என்ற அலறல் கேட்டது. அது ஒரு பெண்ணின் அழுகைக்குரல். என்ன வென்று பார்த்ததில் அவருடைய குடும்பத்தைச்சேர்ந்த ஒரு முதியவர் இறந்து விட்டார் என்று தெரிந்தது. டாக்டர் என்ன கேட்டுக்கொண்டும் அந்த அம்மா ஒய்வதாகத்தெரியவில்லை. டாக்டர் “இது ஆஸ்பத்திரி. பல பேர் இங்கே படுத்திருக்கங்க. அவங்க தூக்கத்தைக்கெடுக்கக்கூடாது” என்று எவ்வளவு சொன்ன போதிலும் அந்த அம்மா, “உங்க வீட்டிலே உங்க மனுஷங்க யாராவது போயிட்டா, உங்க வீட்டுப் பொம்பளைங்க அழக்கூடாதுன்னு சொல்லுவீங்களா” என்று கேட்க, பாவம் டாக்டர். டாக்டர் மாத்திரமா பாவம். அங்கு இருந்த நாங்க எல்லோரும் பாவம்தான். ஒரு அல்ப பேரியம் மீல் டெஸ்டுக்காக இப்படி மாட்டிக்கொண்ட நான் மகா பாவம். கொஞ்ச நேரத்தில், அதாவது ஒரு மணி நேரத்தில் அந்தப்பிரேதம் கட்டிலுடன் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. பிறகு ஒரு விதமாகத் தூங்க ஆரம்பித்தேன். நடு நடுவிலே இனம் புரியாத குரல்கள், அழுகைகள்.

ஒரு வழியாக விடிந்தது. வயிறு கிள்ள ஆரம்பித்தது. ராத்திரி பூராவும் பட்டினி கிடந்த ( எத்தனையோ நாள் சாப்பிடாமல் படுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்படி எனக்குத் தோன்றியதில்லை. அன்று என்னவோ என் வயிறு என்னைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தது). போதாததற்கு மறுபடியும் அந்தத் தோசை ஆசை என் நாக்கைச்சுழற்றிச் சுழற்றி அடித்தது, ஜுரம் வந்தவர்கள் டாக்டர் எதை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறாரோ, அதை சாப்பிட்டே தீரவேண்டும் என்று ஒரு வைராக்கியம் கொள்ளுவார்களே அதைப்போல. கான்டீனுக்குப்போய்சாப்பிட்டிவிட்டு வரலாமாவேண்டாமா என்று “to be or not to be “ என்ற ஹாம்லெட் போராட்டம்தொடங்கியது. அந்த நேரத்தில் என் அடுத்த படுக்கையில் இதே டெஸ்டுக்காக வந்தவர் டாக்டருக்குத் தெரியாமல் கான்டீனுக்குப்போய் தோசை சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறார். இதை அங்கிருந்த அட்டெண்டர் ஒருவர் பார்த்து விட்டார். பார்த்து விட்டு அந்த ஆளை திட்டு திட்டென்று திட்டிவிட்டு டாக்டரிடமும் சொல்லிவிட்டார். கேட்க வேண்டுமா? டாக்டர் அவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். அதைப்பார்த்தவுடன் என் தோசை ஆசை பதுங்கிக் கொண்டு விட்டது.
அதற்கு அப்புறம் அந்தப் “படுகாலி” வயிற்றோடு டெஸ்ட் செய்யும் செக்‌ஷனுக்குச் சென்றேன். பேரியம் மீல் கொடுத்தார்கள். அவ்வளவு பசியில் அதை மடமடவென்று குடிக்க ஆரம்பித்தேன். சாக்பீஸைக் கரைத்துக்குடிப்பது போல் இருந்தது. அது கொஞ்சமாக இருந்தால் கூடப்பரவாயில்லை. அது எங்கள் வீட்டு ஒரு பெர்ர்ர்ரிய டம்ளர் அளவிற்கு இருந்தது. ஒன்றரை லிட்டர் இருக்கும். ஏதோ பாயஸம் போல அதை என்னை முழுவதையும் குடிக்கச்சொல்லி ஒரு பாடாக்கிவிட்டார்கள்
கொஞ்சம் உள்ளே போன பேரியம் மீலை உடனே நாக்கும், வயிறும் கச்சை கட்டிக்கொண்டு எதிர்த்தன. ஆனால் அந்த அட்டெண்டர் விடுவதாக இல்லை. ஒரு விதமாக அதை முழுவதும் gulp பினேன். இன்னும் கொஞ்சம் குடிக்கச் சொல்லி இருந்தால் வாந்தி எடுக்க என் வயிறும் வாயும் தயாராயின. நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ, பேரியம் மீல் என்று சொல்லப்பட்ட அந்தக் கண்ணராவி சாக்பீஸ் தண்ணி தீர்ந்த து. “அவ்வளவுதான் ,சார்” என்றார் அஸிஸ்டென்ட். டாக்டர் வந்தார். அங்கிருக்கிற உபகரணங்களை மேலும் கீழும் பார்த்தார். முடிந்து விட்டது என்றார். எது என்று கேட்பதற்குள் “சரி. வீட்டுக்குப்போகலாம்” என்றார் டாக்டர்.
“உங்களுக்கு ஹைப்பர் அசிடிட்டி. நான் எழுதித் தரும் இந்த மருந்தை சாப்பிடுங்கள்”என்றார்

“நான் என்ன சாப்பிடலாம்? என்று கேட்டேன்.

அவர் “எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” என்றார். டாக்டர் குத்தலாகச் சொல்கிறாரா, இல்லை நிஜமாகவே அப்படிச்சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்தது.
அவர் தொடர்ந்து “எதை வேணாலும் சாப்பிடுங்கள். ஆனால் புளிப்பு, காரம், எண்ணை, உப்பு, துவர்ப்பு போன்றவற்றை தவிருங்கள்” என்றார். ஏனோ சக்கரையை சொல்ல மறந்துவிட்டார்.

இதை எல்லாம் தவிர்த்தால்? புல்,பூண்டு, உமி, தவிடு, வெறும் அரிசி, சர்க்கரை இதைத்தான் சாப்பிடவேண்டும் போலிருக்கிறதே என்று நினைத்தபடி டாக்டரிடம் நான் கேட்ட அடுத்த கேள்வி
“டாக்டர், நான் தோசை சாப்பிடலாமா” என்பது தான். ( எனக்கு எப்போதுமே எதையும் சாப்பிடக்கூடாது என்று டாக்டரோ, வீட்டிலோ சொன்னால், முதலில் தோணுவது தோசை சாப்பிடணுங்கறதுதான்)
என்னை முதல்நாள் சாயந்திரத்திலிருந்து உறுத்திக் கொண்டிருந்த தோசை ஆசை கேள்வியாய் வெளி வந்தது.

“ எண்ணை இருப்பதால் தோசை வேண்டாம். இட்லி சாப்பிடுங்கள். உங்களுக்கான மருந்தை எழுதிக் கொடுத்திருக்கேன்.அதை நான் சொன்னபடி சாப்பிடுங்கள். சாப்பாட்டு விஷயத்தில் நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

அப்பாடா. ஒரு வழியாக ஆஸ்பத்திரி வாசம் முடிந்தது. பல வருடம் சிறையில் அடைபட்டவன் விடுதலை செய்து வெளியே வரும்போது அடையும் சந்தோஷத்தோடு( ஆமாம். இது உங்களுக்கு எப்படித் தெரியும்? எல்லாம் ஒரு யூகம்தான்.) வெளியே வந்து பஸ்பிடித்து வீடு போய்ச்சேர்ந்தேன், இனிமேல் செத்தாலும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கி வருவதில்லை என்ற தீரமானத்துடன். போனவுடன் நான் என் மனைவியைப்பார்த்து நான் கேட்டது தோசையைத்தான் . டாக்டர் இட்லி சாப்பிடச்சொன்னதையும் சொன்னேன்.
உடனே அவள் “அவர்கிடக்கிறார். ஒரு நாள் தோசை சாப்பிடுவதால் ஒன்றும் குடி முழுகிப்போய் விடாது. ஹோட்டல் தோசையெல்லாம் ஒரு சொட்டு எண்ணைமேல் தண்ணி தெளித்து பத்து தோசை சுடுவார்கள். அதனால் எண்ணைப் பயம் தேவை இல்லாதது. ஆனா வீட்டிலே இப்ப மாவு இல்லை. நீங்க போய் ஹோட்டல்லே தோசை சாப்பிட்டுட்டு வரும்போது எனக்கும் ஒரு தோசை வாங்கி வந்துவிடுங்கள்” என்றாள் என்தோசை நாயகி.

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (11-May-20, 2:13 pm)
பார்வை : 67

சிறந்த நகைச்சுவைகள்

மேலே