குமரேச சதகம் - இறந்தும் இறவாதவர் - பாடல் 31

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அனைவர்க்கும் உபகாரம் ஆம்வாவி கூபம்உண்
டாக்கினோர், நீதிமன்னர்
அழியாத தேவா லயங்கட்டி வைத்துளோர்
அகரங்கள் செய்தபெரியோர்

தனையொப்பி லாப்புதல்வ னைப்பெற்ற பேர்பொருது
சமர்வென்ற சுத்தவீரர்
தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
தருமங்கள் செய்தபேர்கள்

கனவித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர்
காவியம் செய்தகவிஞர்
கற்பினில் மிகுந்தஒரு பத்தினி மடந்தையைக்
கடிமணம் செய்தோர்கள்இம்

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத
மனிதரிவர் ஆகுமன்றோ!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 31

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

யாவருக்கும் பயன்படுமாறு குளங்களும் கிணறுகளும் தோண்டியவர்களும், செங்கோல் தவறாத அரசர்களும், கெடாத தெய்வத் திருக்கோயில்களைக் கட்டியவர்களும், (காட்டை அழித்து) நகரங்களை உண்டாக்கிய சான்றோர்களும்,

உவமையற்ற மகனைப் பெற்றவர்களும், போரிலே சண்டையிட்டு வென்ற தூய வீரர்களும், உலகிலே எப்போதும் நிலைத்திருக்கக் கெடுதியற்ற அறச்செயல்கள் செய்த சான்றோர்களும்,

பெருங் கலைப் பயிற்சியாளர்களும், மாறாமற் கொடுப்பவர்களும், காவியங்களை எழுதிய கவிகளும், கற்பிலே சிறந்த ஒரு நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் புரிந்தவர்களும் இந்த ஊனுடல் ஒழிந்தாலும் புகழுடல் பொன்றாத மக்கள் ஆவார்கள் அல்லவா?

விளக்கவுரை:

அகரம் என்பது ஊர் என்னும் பொருளில் மட்டும் வந்துள்ளது; அந்தணர் குடியிருக்குமிடம் என்பது பொருந்தமன்று. இக்காலத்தும் அகரம் எனப் பல பெயர்கள் ஊர்களுக்கிருக்கின்றன.

கூபம் - கிணறு. தரணி - புவி. கவி - செய்யுளியற்றும் புலவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் . (12-May-20, 7:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே