புதுமை புதுமை

மதுரையிலே மீனாட்சியம்மையை தரிசித்த காளமேகம் அம்மையை ஆனந்த பரவசமாகத் துதிக்கும் சிலேடைப் பாடல் இது.

கட்டளைக்கலித்துறை

விள்ளப் புதுமையொன் றுண்டால வாயிளின் மேவுதென்னன்
பிள்ளைக் கொருகுலை மூன்றே குரும்பை யிடித்ததிலே
கொள்ளிக் கணன்றிட்டி யாலோர் குரும்பை குறைந்தமிர்தம்
உள்ளிற் பொதிந்த விரண்டிள நீர்க்கச் சுறைந்ததுவே. 106

- கவி காளமேகம்

நேர்பொருள்:

சொல்வதற்கு ஒரு புதுமை ஒன்று உண்டு. அது திருவாலவாயிடத்தே இருக்கும் தென்னம் பிள்ளையிடத்தே, ஒரு குலையில் மூன்றே குரும்பைகள் பிடித்தன; அவற்றுள் கொள்ளிக் கண்ணனின் திருஷ்டியாலே ஒன்று குறைந்து போயிற்று, அமுதம் உள்ளே பொதிந்ததாகப் பிற இரண்டும் இள நீராகிக் கைப்பு உடையதாகவும் ஆயிற்று.

அம்மையைக் குறித்த பொருள்:

திருவாலவாயினிடத்தே சொல்லுவதற்குத் தக்கதான புதுமையொன்று உள்ளது. தென்னவனான மலையத்துவசனுடைய பெண்ணாகிய தடாதகைக்கு ஒரு வரிசையிலே மூன்று தனங்கள் முகிழ்த்தன. அவற்றுள் ஒன்று நெருப்புக் கண்ணனான சோமசுந்தரப் பிரானின் பார்வை பட்டு மறைந்தது. உயிர்களைக் காப்பாற்றும் அமுதம் உள்ளிடத்தே பொதிந்த இரண்டு இளநீர்கள் போன்ற தனங்களும், பின்கச்சுக்குள்ளே அடங்குவனவும் ஆயின.

தடாதகைப் பிராட்டிக்கு மூன்று தனங்கள் எழுந்தன. என்பதும், சிவபிரானைக் கண்டதும் ஒன்று மறைந்ததென்பதும் திருவிளையாடற் புராணத்திலே கூறப்பட்டிருக்கிறது. அதனையே இப்படிச் சுவையாகப் பாடுகிறார் கவிஞர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-20, 7:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

மேலே