குமரேச சதகம் - இருந்தும் இறந்தோர் - பாடல் 32

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மாறாத வறுமையோர் தீராத பிணியாளர்
வருவேட்ட கத்திலுண்போர்
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்
மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்
சுமந்தே பிழைக்கின்றபேர்
தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்
சோர்வுபட லுற்றபெரியோர்

வீறாக மனையாள் தனக்கஞ்சி வந்திடு
விருந்தினை ஒழித்துவிடுவோர்
வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
மிக்கசபை ஏறுமசடர்

மாறாக இவரெலாம் உயிருடன் செத்தசவம்
ஆகியொளி மாய்வர்கண்டாய்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 32

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!

நீங்காத வறியவர், விலகாத நோயாளிகள், மாமனார் வீட்டில் நீண்டநாள் உண்பவர், மனைவியைத் தீயவொழுக்கத்திலே ஈடுபடுத்தி அதனால் வரும் பொருளால் வாழ்க்கை நடத்துவோர்,

தாமிருக்கும் அரசவையிலே வீணான பழியைக் கூறி, அதனால் வாழ்வோர், (மனிதன் அமர்ந்த) பல்லக்கைச் சுமந்து வயிறு வளர்ப்போர், நீங்காத கவலையிலே மூழ்கியவர், சொன்ன சொல்லிலிருந்து பிறழும் பெரியோர்கள்,

மனைவியின் இறுமாப்புக்கு அச்சமுற்று வந்த விருந்தினரை விலக்கிவிடுவோர், நடவாத வழக்கை ஆதரவாகக் கொண்டு பெரிய அறமன்றங்களிலே பிடிவாதமாகச் செல்லும் பிழையாளர்கள் இவர்களெல்லாரும் உலகியலுக்கு எதிராக உயிரோடிருந்தும் இறந்த பிணமாகிப் புகழ் குன்றுவர்.

அருஞ்சொற்கள்:

வேட்டகம் - மாமனார் வீடு. வேட்ட அகம் - விரும்பிய வீடு. விருந்து - புதுமை. விருந்தினர் – புதியவர்,. உறவினர் வேறு - விருந்தினர் வேறு ஆவர்.

கருத்து:

இங்குக் கூறப்பட்டவர் உயிருடன் உலவினாலும் உலகிற்கும் தமக்கும் பயனற்றவர்களாகையால் இறந்தவர் போலக் கருதப்படுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-20, 7:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே