197 பொய்யர் மறந்து மெய் பேசினாலும் மதியார் - பொய் 3
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
அங்கதமே பொருளென்னக் கைக்கொண்டோர் மறந்தொருமெய்
..அறைந்திட் டாலும்
இங்கதனை யெவருநம்பார் துணைவியர்புத் திரர்தமரும்
..இகழ்ச்சி செய்வார்
அங்கணுல கெங்கணுமே வசையாடி நரரெலாம்
..அகித ராவார்
பங்கமுறும் பொய்யுரைப்பொய் யருஞ்சேரார் தம்முளமும்
.. பழிக்கு மன்றோ. 3
- பொய்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”பொய் சொல்லுவதே தம் திறமை என்று வழக்க மாகச் சொல்வோர், தம்மை மறந்து ஒரு மெய் சொன்னாலும் அம்மெய்யை எவரும் நம்ப மாட்டார்கள். மனைவி, மக்கள், உறவினர் ஆகியோர் இகழ்ந்து பேசுவார்கள்.
அந்தவாறு உலகில் எங்கு சென்றாலும் இழிந்து பேசி மக்கள் எல்லாரும் பகைவராவர். கேடு தரும் பொய் பேசுவதால், பொய்யரும் அவருடன் சேரமாட்டார்கள். பொய் பேசுவோர் தம் உள்ளமும் அவர்களைப் பழிக்கும் அல்லவா”என்று இப்பாடலாசிரியர் கேட்கிறார்.
அங்கதம் - பொய். நரர் - மக்கள், உலகத்தார். அகிதர் - பகைவர். பங்கம் - கேடு