198 அரும்பொய் வெளிப்படும், அடைந்த பயன் அழியும் - பொய் 4
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
ஏதேனும் பயன்வேண்டிப் பொய்சொல்லின் அப்பொய்தான்
..எவ்வி தத்தும்
மாதரையில் வெளியாகும் அப்பொழுதப் பயனழியும்
..வளருந் துன்பஞ்
சாதலின்மை வேண்டிவிட முண்ணலொக்கும் பயன்கருதி
..சலமு ரைத்தல்
ஆதலினால் உண்மைதனைத் துணைக்கொள்ளின் எப்பயனும்
..அடைவோ நெஞ்சே. 4
- பொய்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”ஏதாவது ஒரு பலனை விரும்பிப் பொய் சொன்னால், அப்பொய் எப்படியும் இவ்வுலகில் வெளியாகும். அப்பொழுது அப்பொய்யினால் பெற்ற பயனும் அழிந்து விடும். துன்பமும் பெருகும்.
பயன் கருதி பொய் பேசுவது, இறவாமையை விரும்பி நஞ்சு உண்பதற்கு ஒப்பாகும். அதனால், உண்மையைத் துணையாகக் கொண்டால் எல்லாப் பயனும் அடைவோம் நெஞ்சே” என்று சொல்லி, பொய் பேசினால் அது வெளிப்பட்டு, பெற்ற பயனும் அழியும் என்கிறார் இப்பாடலாசிரியர்.
பயன் - இன்பம். விடம் - நஞ்சு. சலம் - பொய்.