208 கொடிய வட்டி, சூதுபொருள் இழப்பித்தல் களவே – களவு 3
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
நட்ட மேபிறர்க் கெய்திடச் செய்தலும் நம்பி
இட்டர் வைத்தநற் பொருளப கரித்தலு மிறப்ப
வட்டம் வட்டிகள் வாங்கலுஞ் சூதிற்பொன் பெறலும்
இட்ட வேலைசெய் யாதுகைக் கூலிகொள் ளியல்பும். 3
- களவு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பிறர்க்குப் பொருள் இழப்பு உண்டாக்குவது, பாதுகாத்துத் தரும்படி நண்பர்கள் நம்பித் தந்த நல்ல பொருளைத் தனதாக்கிக் கொள்வது, அடமான மாகக் கொடுக்கும் பொருளுக்கு அளவு மீறி வட்டி வாங்குவது, சூதாடிப் பொருள் சேர்ப்பது, கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாது கூலி பெறுவது ஆகிய தன்மைகள் அனைத்தும் களவாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
நட்டம் - இழப்பு. வட்டம் - பணமாற்றக் கொடுக்கும் வாசி.