209 கன்னம் பொய்க்காசு கைக்கூலி களவே – களவு 4

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

கன்னம் வைத்தசெல் லாப்பணம் வழங்குதல் கள்ள
மன்னு சீட்டையுண் டாக்குதல் கைலஞ்சம் வாங்கல்
என்னும் யாவுமே களவதா மித்தொழிற் கியைவோர்
மன்ன ராக்கினை வசைநர கடைந்துவா டுவரால். 4

- களவு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

“கன்னம் வைத்துத் திருடுவதும், செல்லாக் காசை வழங்கலும், கள்ளச் சீட்டுப் பிறப்பித்தலும், கைக்கூலி வாங்கலும் முதலிய எல்லாமும் களவாகும்.

இத்தகைய களவுத் தொழில்களை விரும்பிச் செய்வோர் வேந்தரால், அரசாங்கத்தால் தண்டிக்கப் படுவர். பழியோடு நரகமும் அடைந்து துன்பப்படுவர்” என்று இப்பாடலாசிரியர் எச்சரிக்கிறார்.

கன்னம் - மதில், பூட்டு முதலியவற்றைத் திறக்குங் கருவி. கைலஞ்சம் - கைக்கூலி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-20, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே