தாய் தந்தை

தந்தை நமதெனத் தானறிந்த உண்மைக்குச்
சொந்த மெமதருமைத் தாய்.
*
தந்தை படும்பாட்டைத் தான்படும் பாடெனச்
சிந்தை தனிலேற்றிச் சேர்ந்தொழுகிச் – சந்ததிக்கும்
சாதமென வூட்டுவாள் தாய்.
*
தந்தை வழிதவறி தன்போக்கில் போனாலும்
வந்துதித்தப் பிள்ளைகள் வாழ்வெனும் – நந்தவனம்
சந்ததம் பூத்திருக்கச் சங்கடங்கள் தாங்கியந்தச்
சந்தனமாய்த் தேய்பவள் தாய்
*
தந்தை தொழில்செய்து தந்த சிறுபணத்தில்
சொந்த நலன்மறந்து சொத்தென வாய்த்த
மழலைகள் வாழ்க்கை மனதோடு வைத்துச்
சுழன்றிடும் சக்கரம் தாய்.
**
தந்தை மறைந்தவுடன் தாயை மதிக்கின்ற
சிந்தை யிலாப்பிள்ளைச் சீர்கெட்டுக் – கந்தை
உடுத்தவைத்துக் கைநீட்டி ஊன்வளர்க்க விட்டக்
கொடுமை நிகழ்ந்திடினும் கூறா – தடுத்தவர்முன்
தன்பிள்ளை செய்த தவறனைத்தும் மூடிவைத்து
முன்பிருந்த பாசம் முதற்கொண்டு – அன்பனைத்தும்
தான்பெற்ற தற்கீயும் தாய்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-May-20, 11:07 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 47

மேலே