வடவாமுகம்

வீட்டுக்குள்ள தனிச்சிருக்க
வீறாப்பா ரெண்டு பக
விசுக்குன்னு வீடு வந்து
பொசுக்குன்னு பிடிச்சிழுக்க

பொல்லா பகை முடிக்க
கங்ஙணமா வந்திருக்க
எங்ஙனம் நான் தப்பிக்க..?

பொங்கி நான் எழ
எட்டடி எடுத்து வைக்கயில
எட்டித்தான் எமன் மிதிக்க
முட்டி விழுந்த என்ன
கட்டித்தான் போட்டாச்சே..!

மனசொண்ணு கடவுள நெனக்க
மனசுல இன்னொண்ணு
அம்ம அப்பன நெனக்க
பயப்பட்டு தவிச்சேன் உள்ள
வாய்ப்பு ஒண்ணு கூடலயே
வாய்பிழந்து ஊரழைக்க..!

மனம் செத்த ரெண்டு பிணங்க
மல்லாக்க படுக்க வைக்கயில
மறுத்த கை வாள
கயிறால கட்டிடிச்சே..!

அக்கம் பக்கம் அறியும் முன்ன
அப்பனம்ம வந்து சேரும் முன்ன
அப்பாவி பொண்ணு என்ன
தப்பாக்க நெனைக்கும் முன்ன
தாறுமாறா கயிறு கட்டி
தரயிலதான் கிடத்திடுச்சே

பக சண்டக்குத்தான்
பயங்கரமா தாக்குறாக
பயம் காட்டத்தானோ
பெட்ரோல ஊத்துறாக
பேத என் நெனப்பு போதல
சத்தம் போட
சங்கு கூட எழும்பல..!

யுத்தம் செய்ய
யுத்தியும் அறியல
கட்டிய கயிறு கூட
கருண காட்டி அவிழல

திசுக்களும் திரும்பாமலிருக்க
உசிரினில் உரசி இட்ட நெருப்பு
எழும்பி பிடிக்கும் முன்ன
எட்டித்தான் எமன் பாய
எமன துரத்தி
எங் கொழுந்துடலு புகை பாய

கூர மேலேறி
ஊர பொக அழைக்க
அய்யோன்னு அலறியடிச்சி
அக்கம் பக்கம் வர
ஊரடங்கு வேலி தாண்டி
ஊரே கூடி வர

ஒச்சரிஞ்சி ஓச்சரிஞ்சி
ஒவ்வொரு பக்கமா
படுத்து புரண்டு நானும்
பத்தியத அணைக்க முயலயில

பயந்த நெருப்பு பாசத்துல
கயிறு கட்ட எரிச்சி தள்ளயில
கையோட உடலெல்லாம்
உருக்குலச்சி தள்ளிடிச்சே..!

வெந்தது கறுக்க
வேகாதது செவக்க
வெட்கம் விட்ட தீயும்
தொட்டு ருசி பாக்க

கட்டி அணச்ச நெருப்பு
தட்டி அணைக்கயில
தண்டவாள உடல விட்டு
தாண்டவ நெருப்பு போக
தந்து போன காயத்த
சுமந்துதான் போனேனே..!

வெளியூரு போன அம்ம
வெவரம் அறிஞ்சி வர
வெவரமான அப்பன்
விவரமா தெரிஞ்சி வர
வெந்த உசிர கண்டு
நொந்து கதறயில

ஆசுத்திரிக்கு போற நானு
ஆயுசு வாங்கி வருவேனா..!
சந்தேகத்துல சாய்ஞ்சி
சங்கட முகம் பார்க்க

"செத்தாலும் உம்மக நான்
செம்பாதிக்கும் காவலிருப்பன்
சோர்ந்து போயிடாதீக"
சோகத்துல சொல்ல சொல்லில்ல
சொல்லித்தான் போகல...!

தாகமெடுத்து தொண்ட
தகராறுதான் செஞ்சும்
போலீசு கேக்கயில
பொய்யில்லாம
பொடிவிவரம் சொல்லிட்டேன்

எண்ணெயில திரியிட்டு
எண்ணைக்கும் சாமிக்கு
நெருப்பேத்தும் என்ன
இண்ணைக்கு சாமி
நெருப்பேத்திடிச்சே..!

பேசவேனும் உசிரு தந்த சாமியே
பேராபத்த தடுத்தமைக்கு
பெரு நன்றி ஆத்துமா சொல்லுதுங்க

வாக்குமூலம் மட்டும் இல்லையின்னா
நாக்கு மூலம் நாடு நரம்பில்லாம
என்னென்ன பேசியிருக்கும்..!

காதலிச்சி தோத்தாளோ...!
பரிச்சைக்கு பயந்தாளோ...!
பாதமாறி நடந்தாளோ..!
கரோனா கொடுமைக்கு
பஞ்சத்துல புரண்டாளோ..!
தைரியம் இல்லாதவ
தற்கொலதான் செய்ஞ்சாளோ..!

வாய்வழி ஒழுகும் சொல்லுங்க
வாய்க்காலு கர வரமில்லாம
பாய்ஞ்சிருக்குமே..!

ஆளும் கட்சி அவன்
ஊராடங்கு காரணம் காட்டி
ஊரறியதான் விட்டிருப்பானா..?
வானம் வாங்கியேனும்
வளையந்தான் இட்டிருப்பானே..

வான எரிச்சாலும்
வசமா தப்பலாம்
எசமான் துணையிருக்க
எதயும் செய்யலாம்
எடப்பாடி ஆட்சிதானே
எப்படியும் தப்பிக்கலாம்

இப்படியே நெனச்சி என்ன
வம்படியா கொன்னவன
தூக்குல போடாதீக..!
சுட்டு கொல்லாதீக..!
ஆயுசுக்கும் சிறயின்னு
அறையில அடைக்காதீக..!

பத்துசதம் பத்தவச்சு
படுக்கையில போட்டிடுங்க
பாடயில போகும் வர
தீக்காயத்துல இட்டிடுங்க
கொழுத்திய நெருப்பு
அவன் உடம்புல எரியட்டும்
அங்குலம் அங்குலமா
அவதி பட்டு சாகட்டும்

புதிய இந்தியாவுக்கு
பழந்தண்டன எதுக்கையா
நீதி சொல்லுமையா
புதிய தண்டன கொடுமையா
எண்ணம் எழும் முன்ன
தண்டனதான் தடுக்கட்டும்
எண்ணைக்கும் என் ஆத்மா
இந்திய திண்ணையில தூங்கட்டும்

சாமி சாமி என் குலச்சாமி
போன உசிரு ஒண்ணுதான்
என் உசிரில ரெண்டு
ஊருலத்தான் இருக்கு

பராக்கப் பாக்காதீக
பணத்துக்கு மயங்காதீக
பாதுதான் காத்திடுங்க

முதல்ல திறந்திருக்கலாம்
சாமி.. உங்கள
பரவாயில்ல பரவாயில்ல
நீதி மன்றங்க
திறந்துதான் இருக்கு

ம்........ வர வர
நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்
மன்னிச்சு விட்டு ஜாமீன்ல விட்டு
பழக்கப்பட்டு வீட்டீங்க..!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (15-May-20, 7:33 am)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 82

மேலே