கனவு

======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்களில்
வந்துபோகும் பேரூந்தைப்போல்
கனவும் தன்போக்கிலேயே
வந்து போகின்றது
**
தூக்கம் வருவதற்கு குடிக்கும்
மாத்திரையைபோல
கனவு வருவதற்குக் குடிக்க
மாத்திரைகளை இன்னும் எவரும்
தயாரிக்கவில்லை
**
உறக்கத்தை முன்னால்
அனுப்பிவைத்துவிட்டு
பின்னால் வரக் காத்திருந்து
வாராமலே போகின்ற கனவு
வாக்குறுதிகளை வாரி இறைத்துவிட்டு
தொகுதியின் பக்கம் திரும்பி பாராத
நமது தலைவர்களைப் போன்றது
**
உறங்குவது பற்றிக்
கனவு காணக் கூட நேரமின்றி
போராடும் வாழ்வில்
கனவு காணுவதற்காக உறங்குவதென்பது
ஒரு கனவைப்போலவே இருக்கின்ற காலத்தில்
கனவுகளைப் பற்றிக்
கனவு காண்பதென்பதும் அந்தக்
கனவாகவே இருக்கிறது
**
உறக்கத்தைக் காதலிக்கும்
கண்களைப்போல
கனவுகளைக் காதலிக்கக்
கற்றுக்கொள்ளும்போது
திரையரங்குகள் தேவையற்றதாகும்
உண்மையை கனவுகள் நமக்குக்
கற்றுத்தருகின்றன
**
படுக்கையறைப் பள்ளியில்
ஒரு வாத்தியாரைப்போல
இலவசப் பாடம்
கற்றுக் கொடுக்கவரும்
கனவைக் கற்றுக்கொள்ள
நித்திரைப் புத்தகத்தோடு நிற்கும்
நிற்கும் மாணாக்கர் நாம்.
**
வாருங்கள்
தாமதமில்லா உறக்கத்திற்குத்
நம்மை தயார் செய்துகொண்டு
இமைக்கரங்களால்
இருட்டுக் கம்பளம் விரித்து
கனவவை வரவேற்போம்
**
தூக்கம் கலைந்த பின்னாலும்
நினைவிலிருக்கும் கனவு
வாழ்க்கை அமைந்த பின்
மறந்துபோகும் காதலிகளை விடவும்
மிகவும் நல்லவை.
**
வாருங்கள் கனவை வரவேற்போம்
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-May-20, 2:47 am)
Tanglish : kanavu
பார்வை : 342

மேலே