புரிந்திடு முடிவெடு உரைத்திடு

---------------------------------------------------

பாவையவள் பாதையில் வந்தாள்
பார்வையால் படம் பிடித்தேன் !
பருவமும் உருவமும் கலந்தது
பற்றியது மோகமும் காதலும் !

என்னவள் அவளென என்னுயிரை
அவளிடம் அடகு வைத்தேன் !
மீட்டிடவும் மனமில்லை எனக்கு
மீளவும் முடியவில்லை என்னால் !

பறிகொடுத்த எனது உள்ளமும்
பரிந்துரைச் செய்தது என்னை
பரிபாலகன் நானென்று அவளறிய
பரிதவிக்குது நெஞ்சமும் பதிலறிய !

தூரிகையால் வரைந்த காரிகையே
தூரப்பார்வைக் கொண்டு பார்க்காதே
தூதுவந்த என்இதயத்தை வருத்தாதே
தூர்த்தன் என்றென்னை நினையாதே !

புரிந்திடு முடிவெடு உரைத்திடு
புறப்படு புதுவாழ்வு தொடங்கிட !
இணைவோம் இருவரும் இன்றுமுதல்
இன்பமாய் வாழ்ந்திட இனியென்றும் !


( தூர்த்தன் = கொடியவன்
பரிபாலகன் = காப்பவன் )
=============================

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-May-20, 7:02 am)
பார்வை : 391

மேலே