பருந்து எடுத்துப் போகிறது

காஞ்சிபுரத்திலே வரதராசப் பெருமாளின் கருடோத்சவம் நடந்து கொண்டிருந்தது. கருட வாகனத்தே பெருமாளும் நகர் வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருமாளைப் பற்றி நிந்தாஸ்துதியாகப் பாடியது இது.

நேரிசை வெண்பா

பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்
இருந்திடத்திற் சும்மா இராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிறதே பார். 107

"இந்தப்பெருமாளும் ஒரு நல்ல பெருமாள்! அவர் திருநாளும் ஒரு நல்ல திருநாள்! அந்தப் பெருமாள் இருந்த இடத்திலே சும்மா இராமையினால், ஐயோ! அவரைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதே? அதனைப் பார்!

மேற்போக்காகப் படித்தால், பெருமாளையும், அவர் திருநாளையும் புலவர் நிந்திப்பதாகவே தோன்றும். ஆனால் பொருள் பின்வருமாறு:

வரதராசப் பெருமாளும் அடியவர்க்கு நலந் தருகின்ற பெருமை உடையவரே; அவரைக் குறித்துக் கொண்டாடப் பெறும் திருநாளும் நன்மை தருவதான ஒரு திருநாளே, (அன்பர்க்குத் தாமே அவரவர் இருக்கும் இடம் சென்று அருள்புரியும் கருணைப் பெருக்கினாலே);

பெருமாள் தாமிருந்த இடத்திலேயே வாளா இருந்து விடாமையினாலே கருடன் சுமந்து கொண்டு திருவீதி வழியாகச் சொல்லுகின்றதே. அதனைக் கண்டு போற்றுவாயாக, அங்ங்னம் போற்றி உய்திபெற நீ முயலாய் ஆயின், ஐயோ! (நின் நிலை இரங்கத்தக்கதே) என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-20, 7:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே