குமரேச சதகம் - சிறிதும் பயன் அற்றவர் - பாடல் 33

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பதராகி லும்கன விபூதிவிளை விக்கும்
பழைமைபெறு சுவராகிலும்
பலருக்கும் மறைவாகும்; மாடுரிஞ் சிடுமலம்
பன்றிகட் குபயோகமாம்

கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவி காக்கும்வன்
கழுதையும் பொதிசுமக்கும்
கல்லெனில் தேவர்களும் ஆலயமும் ஆம்பெருங்
கான்புற்ற ரவமனையாம்

இதமிலாச் சவமாகி லும்சிலர்க் குதவிசெய்யும்;
இழிவுறு குரங்காயினும்
இரக்கப் பிடித்தவர்க் குதவிசெயும் வாருகோல்
ஏற்றமாளி கைவிளக்கும்

மதமது மிகும்பரம லோபரால் உபகாரம்
மற்றொருவ ருக்குமுண்டோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 33

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

பதராயிருப்பினும் உயர்ந்த திருவெண்ணீற்றை விளைவிக்கப் பயன்படும்; பழைமையான குட்டிச் சுவராயினும் மறைய அமர்வோருக்கும், மாடு தன் தினவைத் தீர்த்துக் கொள்ள உடம்பைத் தேய்த்துக் கொள்ளவும் பயன்படும்; மலமும் பன்றிகளின் உணவாகும்;

சீற்றமுடைய எருமைக் கடாவும் உழுது உலகை உண்பிக்கும்; வலிய கழுதையும் மூட்டை சுமக்கும்; கல்லானது தெய்வங்களாகவும், திருக்கோயில்களாகவும் மாறி நிற்கும்; பெரிய காட்டிலுள்ள புற்றுக்கள் பாம்பிற்கு இருப்பிடமாகும்;

நலமில்லாத பிணமானாலும் (அதை அடக்கஞ் செய்யும் முறையில்) சில தொழிலாளிகட்கு வருவாய் கொடுக்கும்; தாழ்வான குரங்கானாலும் (தன்னைப்) பிடித்தவர்களுக்குப் பிச்சை எடுக்கத் துணையாகும்;
துடைப்பம் உயர்ந்த மாளிகையைத் தூய்மை செய்யும்;

செருக்குப் பிடித்த பெரிய கஞ்சத்தனம் உடையவர்களாற் பிறருக்குச் சிறிதும் நன்மையில்லை.

அருஞ்சொற்கள்:

இதம் – நன்மை, கதம் - சீற்றம்.

கருத்து:

ஈயாதவர்களால் எவருக்கும் நலமில்லை..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-20, 12:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே