219 கொலைஞனை குருதிக் கறை ஆடை கூறும் – கொலை 6
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
சுதமுறு முகத்தொடு சொல்லு மாற்றமும்
பதமுறு கறைக்கறை படிந்த வாடையும்
வதனையே காட்டலால் வதைம றைக்குதல்
உதயனைக் கரத்தினால் மறைத்தல் ஒக்குமே. 6
– கொலை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பொலிவிழந்த முகத்துடன் பேச்சில் தடுமாற்றமும் , குருதியினால் புதிதாக ஏற்பட்ட கறை படிந்த ஆடையும், கொலைஞன் இவன் என்று காட்டுவதால், கொலையை மறைப்பது உதிக்கும் கதிரவனைக் கையினால் ஒருவன் மறைப்பதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
சுதம் - பொலிவின்மை. கறை - குருதி.
வதன் - கொலைஞன். உதயன் - கதிரவன்.