வெயிலின் அருமை

இஞ்சினீரிங் கல்லூரி மாணவர்கள் நாங்கள் சுமார் 15 பேர் ஏற்காட்டில் ஒரு புராஜக்ட் வொர்க்குக்காக 30 நாட்கள் தங்க வேண்டி இருந்தது. டிசம்பர், ஜனவரி மாதம். அது பள்ளி விடுமுறை காலமாதலால் நாங்கள் மான்டிசோரி டார்மிடரியில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். நல்ல குளிர். அந்த மாதிரி குளிர் எங்களில் பலருக்கும் புதிது. எனக்கு அப்போது அது ரொம்பவே புதுசு. சிலர் அதற்கேற்ற ஆடையைக் கொண்டு வந்திருந்தனர். நான் நம்ம ஊர் மார்கழி மாத கைவைக்காத ஸ்வெட்டரை போட்டுக் கொண்டு இருந்தேன். இரவு நேரங்களில் கை காலெல்லாம் ஜில்லிட்டு உடம்பெல்லாம் கிடு கிடு என்று நடுங்கியபடி அதற்கேற்றாற்போல் பல்லெல்லாம் மோர்ஸ் கோட்( Morse code) கத்துக்காமலேயே கட கடவென்று வென்று தந்தி அடிக்கும் ( ‘பல்லைப்பட படவென்று கடித்தானையா ராஜாதேசிங்கு’ என்று நான் சிறு வயதில் படித்த ஒரு பாட்டு நினைவுக்கு வரும். பாவம் ராஜாதேசிங்குக்கு அப்போது குளிர் எடுத்திருக்குமோ என்று நான் சந்தேகப்படுவதுண்டு)

இரவு படுக்கப்போகும்போது படுக்கையில் படுப்பது ஐஸ் கட்டிமேல் படுப்பது போன்ற ஒரு உணர்ச்சி. எவ்வளவு போர்த்திக் கொண்டாலும் முதுகிலே ஒரு ஜிலீர். எப்படித்தான் ஜனங்கள் குளிர் தேசத்தில் வாழ்கிறார்களோ என்று நினைத்தபடி எப்படி தூங்கப் போகிறோம் என்ற கவலையில் ஆழ்ந்த போது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் என் நண்பர்கள் நான்கைந்து பேரைக் கூப்பிட்டு என் படுக்கையில் சீட்டாட ஆரம்பித்தேன். ஒரு மணி நேர சீட்டாட்டத்திற்குப்பிறகு என் படுக்கை வெது வெதுப்பாக ஆகிவிடும். ஆட்டத்தை முடித்துவிட்டு படுக்கப் போவேன். கொஞ்ச நேரம் ரொம்பவும் இதமாக இருக்கும். அதற்குள் தூக்கம் வந்து விடும் தூங்கிவிடுவேன். இவ்வாறு அந்த ஒரு மாதமும் சமாளித்து வந்தேன்.

பிற்காலத்தில் நானும் என் மனைவியும் எனது 63 வயதில் அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸில் என் மகளுடன் தங்க வேண்டி வந்தது. ( அமெரிக்காவிலேயை குளிர் மிகுந்த பகுதி அது) . என் மனைவிக்கு மெட்ராஸ் குளிரே சேராது. இங்கோ சில இரவுகளில் -10, -20 என்று - 40 வரை போகும். நட்ட நடுப்பகலிலேயே வெப்பம் - 10,-15 இருக்கும் சண்டாள ஊர்.
அப்போது நான் நினைத்துப் பார்ப்பேன்.
ஏற்காட்டின் 15 டிகிரி ( செ) குளிரையே தாங்க முடியாது தவித்த நான் எப்படி இந்த ஊர் குளிரைத் தாங்கப் போகிறேனோவென்று.
நான் பார்க்கப் பார்க்க ஸ்நோ பொழியும். காலை நேரங்களில் வெளியே பார்க் செய்யப்பட்ட கார்கள் எல்லாம் பனியால் மூடப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது என்னையே பனிக்குள் புதைக்கப்பட்டு விட்டதாக நான் உணர்வேன். சில ரோடுகளில் 2 அல்லது 3 அடிக்குப் பனி உறைந்திருக்கும். அவரவர்கள் வீட்டு வாசலில் படர்ந்துள்ள பனியை சுரண்டி அகற்ற வேண்டியது அவரவர்களுடைய கடமை. ரோடிலுள்ள பனியை எல்லாம் அந்தந்த நகர சபையோ, நரக சபையோ அகற்றும்.( நம்ம ஊர் தோஷத்தினாலே இப்படி எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.) ஆனால் இங்கே ஹீட்டர் இருந்ததோ தப்பித்தோம். ஆனாலும் ஹீட்டரை அதிகமாக உபயோகித்தால் தோல் இரண்டே நாளிலே வரட்சியாகிவிடும். அது வரட்சியாகாமலிருக்க மாயிஸ்சரைசர் உபயோகப்படுத்த வேண்டும். இப்படிப்பல வேண்டாத வேலையெல்லாம் எவ்வளவு தான் செய்தாலும் அந்தக் குளிர் நம்மைக் கடிக்காமல் விடாது. அப்படி ஒரு குளிர். கை, முகம் போன்ற காற்றுப்படும் பகுதிகள் படும் அவஸ்தையை சொல்லி மாளாது. ஆனால் பழகப்பழக ஒரு மாதிரி சமாளிக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுதுதான் தெரியும் நம்ம ஊர் சுகம்.
அதுவும் அங்கே குளிக்கிறதுங்கறதே ஒரு பெரிய வேலை. குளிக்க ஆரம்பிக்கும் போது படா அவஸ்தை. வென்னீர் மேலே பட்டவுடன் ஒரு சுகம். ஆனால் குளித்து முடிந்து உடம்பைத் துடைத்துக் கொண்டு வெளியே வருவது மகா அவஸ்தை.
இங்கு அந்த குளிருக்கு ஏற்ப உடைகள் இருந்ததால் அதை நாங்கள் போட்டுக் கொண்டு ஒரு விதமாகச் சமாளித்தோம். ஒரு பனியன். அதற்கு மேலே சட்டை. அதற்குமேலே ஒரு ஜாக்கேட். அதுக்குமேலே ஒரு உல்லன் கோட். இப்படி 4 அடுக்குப் பாதுகாப்பு எனக்கு. இது தவிர ஆண்கள், பெண்கள் அனைவரும் ஜீன்ஸ் பேண்ட் அல்லது உல்லன் பேண்ட். நம்ம ஊர் சமாசாரமெல்லாம் அங்கே சரிப்படாது.

அந்த உடைகளை போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்றால் நமக்கே நம்மை அடையாளம் கண்டு கொள்வது கடினம். அந்த உருவத்தைப்பார்த்து கொஞ்சம் பயமாகவே கூட இருக்கும். ஏதோ சந்திரனுக்கோ , செவ்வாய்க்கோ புறப்படத் தயாரா இருக்கும் அஸ்ட்ரோனாட்டுகள் போல.
நம்ம ஊர்க் குழந்தைகளைப் பயமுறுத்த இந்த வேஷம் போதும்.

இப்படி நான்கு லேயர்ஸ் துணிகளால் உடம்பை மூடியவுடன் சொல்லி வைத்தாற் போல் அப்போதுதான் முதுகு அரிக்க ஆரம்பிக்கும். அது எல்லாவற்றையும் விட படா அவஸ்தை. சொரிந்து கொள்ளவும் முடியாது. சொரியாமல் இருக்கவும் முடியாது.

உண்மை என்னவென்றால் அவ்வளவு டிரஸ்களையைம் போட்டுக்கொண்டு ததக்கா, பிதக்காவென்று தடுமாறாமல் நடப்பதே ஒரு பெரிய ஆர்ட். அதோட வெளியே போகும் போது கால் கனக்க சாக்ஸ், ஷூ வேறே. இவ்வளவு ட்ரஸ்களுடன் ஷூ போட்டுக்கொள்வது போல பனிஷ்மென்ட் வேறே எதுவுமே கிடையாது. ஷூ போடாமல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. ஃப்ராஸ்ட் பைட் வந்தால் அவ்வளவுதான். காலையே அகற்ற வேண்டி வந்தாலும் வரும்.

இங்கு படுக்கையில் உட்கார்ந்து சீட்டாடி படுக்கையை வெது வெதுப்பாக்கும் வித்தை எல்லாம் நடக்காது. அதற்கான கனமான கம்பளிப் போர்வை போர்த்திக்கொண்டால் அதன் கனமே நம்மை அழுத்தும். அப்பொழுதும் முதுகில் சுரீரென்று ஜிலுப்புத் தாக்கும். இப்படிப் புரண்டு அப்படிப் புரண்டு நம்ம உடம்பு சூட்டை கொஞ்ச நேரம் படுக்கைக்கு ஏத்தின பிறகுதான் தூங்கமுடியும். அதெல்லாம்பத்தாது. ஹீட்டர் போட்டுக்கொள்ள வேண்டும்.

இப்படி வருடத்தில் குறைந்தது 6 மாதங்கள். என் கதையே இப்படி என்றால் என் மனைவியின் கதையை சொல்லவே வேண்டாம். அதே வெயில் காலம் வந்தால் என்ன ஆனந்தம். அத்தனை டிரஸ்களையும் தூக்கிப்போட்டு விட்டு நம்ம ஊர்போல ஒரு பனியன் வேட்டியோட அக்கடான்னு இருக்கிறதுலே என்ன சுகம்! என்ன சுகம்!
இப்ப தெரியுது? ஏன் பல லேடீஸூம் இங்கே சம்மர் வந்தவுடனே “பிகினி”தாரிகள் ஆறாங்கன்னு.

அப்பொழுதெல்லாம் என் முதல் அனுபவத்தை நினைத்துப் பார்ப்பேன். அந்தத் துக்கிளியூண்டு குளிரில் நான் பட்ட அவஸ்தையை நினைத்தால் இப்போதும் எனக்கு சிரிப்பு வருகிறது. ஆபீஸில் வேலை செய்பவர்களை விடுங்கள். வெளியில் வேலை செய்பவர்கள் எப்படித்தான் வேலை செய்கிறார்களோ இந்த உறையும் குளிரில் என்று தோன்றும்.

நான் இப்போது இருப்பது கலிபோர்னியாவில், அமெரிக்காவின் வெப்பமான பகுதிகளில் ஒன்று இது. இங்கே சம்மரில் வெப்பம் பகலில் 40 ( செ) டிகிரியைத்தாண்டும். ஆனால் இரவில் அது 12 டிகிரியாக இருக்கும். பகலில் ஏ.சி. இரவானால் ஹீட்டர். (எனக்கு இந்தக் குளிர் கண்றாவியே பிடிக்காது. அதனால் சென்னை வந்தாலும் ஏசி பக்கமே நான் போகமாட்டேன். இதனால் அமெரிக்காவுக்குக் கெட்ட பேர்.)

எவ்வளவு இருந்தாலும் நம்ம ஊர் சுகம் வராது. சென்னையைக் கிண்டல் செய்வார்கள் அதன் வெயிலுக்காக. ஆனால் அந்த வெயிலின்போதுதான் நமக்கு மாம்பழம், பலாப்பழம், நொங்கு, இளநீர் போன்ற அற்புதங்கள் கிடைக்கின்றன. ( அங்கேயும் இப்போது அவைகள் கிடைக்கின்றன என்றாலும், பழக்க தோஷமோ என்னவோ சென்னையில் எது சாப்பிட்டாலும் அந்த ருசி, கீலிபோர்னியவில் இருப்பதில்லை, ஐஸ்கிரீம் உட்பட) . எனவே சென்னை என்றால் எனக்கு அலாதிப் பிரியம்.

வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையிலும் வெயிலின் அருமை குளிரில் தெரியும் என்பேன். ஒவ்வொரு தடவையும் நான் சென்னை வெயிலை அனுபவிக்க மார்ச், ஏப்ரல் மாதம்தான் சென்னை வருவேன். என்னை சென்னையில் அப்போது பார்ப்பவர்கள் பைத்தியக்காரன் என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டுமே. இந்தக் குளிர் அவஸ்தையைவிட வெயில் எவ்வளவு ஆனந்தங்கறது அவங்களுக்குத் தெரியாது.
( சென்னையிலே சொகுசா ஃபேன் போட்டுக்கிட்டோ, இல்லே ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டோ நீ ஏன் பேசமாட்டே?. இங்க மண்டை பொளக்கற வெய்யில்லே கட்டடத்து உச்சாணியிலே நின்னுகிட்டு கொத்து வேலை செஞ்சா உனக்கு அப்ப தெரியும்னு யாரோ ஒத்தர் சொல்றது என் காதிலே விழுது)

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (29-May-20, 10:34 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
Tanglish : veyilin arumai
பார்வை : 24

மேலே