கடவுள்

தான் இருட்டில்
இருப்பதாலோ
என்னவோ பலரை
இருட்டிலேயே இருக்கவைக்கிறான்

தன் மனதைப்போலவே
பல மனிதர்களின் மனதையும் கல்லாகவே படைத்திருக்கிறான்

எல்லா இடத்திலும்
கடவுள் இருக்கிறார்
ஏழை வயிறு
எரியும் தீயில்
மட்டும் அவர் இறக்கிறார்

ஒரு வேளை
உண்டி இல்லாது
பலர் இறக்கையில்
உண்டியல் இல்லாது
ஒரு கடவுளும் இருப்பதில்லை


கோயிலில்
இறைவன்
மீது மட்டுமே
பன்னீர் துளிகளின் அபிஷேகம்
தரையெங்கும்
கண்ணீர் துளிகளின் அபிஷேகமே

வீடின்றி பலர் வீதியில்
அங்கே
இறைவனின் வீதிஉலா

தவறு செய்தவர்
கண்களை எல்லாம்
அம்மன் குத்தியிருந்தால்
இந்தக் கவிதையை பாதிபேர் படித்திருக்க முடியாது

கடவுளை
மனிதன் உளிகொண்டு
செதுக்குகிறான்
கடவுள்
மனிதனை வலிகொண்டு
செதுக்குகிறது

ஆடி வெள்ளி
ஏழையின் வயிறு
நிரம்புகிறது
அன்று திருவிழா

கருவறையில் இருப்பவருக்கு கருவறையில் இருந்தவர்களை பற்றி சிறிதும் கவலை இருப்பதாய்த் தெரியவில்லை

சிலர்
வெள்ளாடை அணிந்து
மக்களை வெள்ளாடாய்
நடத்துவதையும்

சிலர்
கருப்பாடை அணிந்து
கருப்பாடாய் நடப்பதையும்

சிலர்
சீருடை அணிந்து
மகிழுந்தில் சென்று
பிச்சை எடுப்பதை

அமைதியாய் வேடிக்கை
பார்ப்பவரே கடவுள்...

எழுதியவர் : குமார் (29-May-20, 10:11 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kadavul
பார்வை : 197

மேலே