எழுத்து
கவிதை
எ ழு த் து
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
எழுத்துக்கள் சங்கமத்தில்
எத்தனை கோடி அர்த்தம் வைத்து
உணர வைத்தாய் இறைவா !
எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு
எழுத்துக் குவியல் சோலைவனம்
தெரியாதவனுக்கு பாலைவனம் !
‘ அ’ உயிர் எழுத்து
‘ ம்’ மெய் எழுத்து
‘ மா’ உயிர்மெய் எழுத்து
உயிர், மெய் அணிவகுத்து
உயிர்மெய்யும் சேரும்போது
‘அம்மா’ உறவு வரும்.
அதில் ஒரு இன்பம் வரும்
எழுத்துக்களின் உறவிலே
பல்வகை உறவுகள் மலரும் !
எந்த மொழியானால் என்ன
எழுத்துக்கள் அணிவகுப்பில்
சொற்களின் சங்கமத்தில்
மொழியே பிறக்கிறது !
விதை விதைக்காமல்
செடி கொடிகள் வளருமா
எழுத்துக்கள் அணி வகுக்காமல்
கவிஞன் கவிதைதான் பேசுமா?
காவியங்கள், கதைகள்
உருவாகுமா ? தோன்றுமா ?
தனிமரம் தோப்பாகாது
நினைத்துப் பார்த்தால்
தனி எழுத்தும் அர்த்தம் தரும்!
சுடும் எழுத்து தீ
சுட்டும் எழுத்து நீ
கேட்கும் எழுத்து தா
அழைக்கும் எழுத்து வா
விரட்டும் எழுத்து போ
உழைக்கும் எழுத்து கை
மணக்கும் எழுத்து பூ
பூக்களை அழகாக தொடுத்தால்
மக்கள் விரும்பும் பூமாலை
தமிழ் எழுத்துக்கள் சொற்கள்
அழகாக அணிவகுத்து நின்றால்
மக்கள் விரும்பும் பாமாலை !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை