தகிக்கின்ற நிகழ்விலும்

அழகா முருகா அழகின் தலைவா
அகத்தில் நுழைந்து பலத்தை தருவாய்
புதியதாய் புதியதாய் அனுபவத்தைத் தந்து
புவனத்தில் சிறந்த உயிராய் மாற்றுவாய்.

கவனத்தை கவராத கவலையைக் கொடுப்பாய்
தவத்தால் பெறுகின்ற மன உறுதியை தருவாய்
தவறான எண்ணத்தோரை தள்ளியே வைப்பாய்
தகிக்கின்ற நிகழ்விலும் தளராமனம் தருவாய்

அகிலம் உய்ய அனைவரையும் காப்பாய்
ஆயுள் முழுவதும் உன்னையே நினைக்க
அற்புத இறையே ஆட்கொள்வாய் எனையே
அல்லும் பகலும் அரணாக இருப்பாய்

சினத்தை தணிக்க மனத்தை மாற்றுவாய்
பணத்தால் வருகின்ற கொடுமனம் களைவாய்
நினைக்கின்ற போது நிம்மதி அருள்வாய்
நீரினும் குளிர்ச்சியாய் நிற்கின்ற குருவே

மழலையாய் மலைகளில் உலவுகின்ற கோவே
மாண்பான எண்ணத்தை மனிதருக்கு தாயேன்
மயக்கத்தில் உழலும் மனித உயிர்களுக்கு
மாற்றத்திற்கான நல்லறிவைத் தாயேன்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Jun-20, 8:46 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 131

மேலே