பல் லெவன்

இந்த நாடகத்தின் கடைசி காட்சி தவிர மற்ற அனைத்துக்காட்சிகளும் என்மனைவியின் பல்லை சரிசெய்ய நான் எடுத்துக்கொண்ட முயற்சியை ஒட்டியே எழுதியது.

பல்லெவன்
காட்சி 1
பாட்டி, பல்லை இவ்வளவு மோசமா வெச்சிருக்கேளே. ஒரு பல் டாக்டர் கிட்டே காட்டி சரி பண்ணிக்கக் கூடாதா?

உன் தாத்தா கிட்டே சொன்னா, என் பல் கூடத் தான் கோணலா இருக்கு. அது பாட்டுக்க இருந்துட்டுப் போகட்டுமே. உன்னை அது என்ன பண்ணறது? கல்யாணம் பண்ற வயசுலே கவலைப் பட்டா அர்த்தம் இருக்கு. இப்போ போய் கவலைப் படறதுலே எந்தப் பிரயோஜனமும் இல்லை அப்படீங்கறார். ஆனா....

ஆனா என்ன?

என் பல் கோணலா இருக்கிறது எனக்குப் பிடிக்கலை. எனக்கு என் பல் நேரா இருக்கணும்னு ஆசைதான். நாலு பேருக்கு முன்னாடி சிரிச்சிப் பேசினோம்னு இல்லாம வாயை மூடிண்டே இருக்க வேண்டி இருக்கு. கண்ணாடிக்கு முன்னாடி நிக்கறதுக்கே யோசனையா இருக்கு இந்தப் பல்லை வச்சிண்டு. போதாததுக்கு நாலு நாளா பல் வலி வேறே என்னைப் பாடாய்ப் படுத்தறது. எதையும் சரியா சாப்பிட முடியல்லே. இப்பத்தாண்டா இந்த ஒரு வருஷத்துக்குள்ளே திடீர்னு இப்படி ஆயிடுத்து. ஆமாம். நீ என்னடா சாப்பிடறே?

அதுவா பாட்டி? நேத்து நம்ம கௌரியோட கல்யாணத்துக்குப் போகும்போது அங்கே அவா நமக்கு ஸ்பெஷலா கொடுத்த கைமுறுக்கு.

எப்படிடா இருக்கு?

மொறு மொறுன்னு ரொம்பவும் க்ரஞ்சியா அமக்களமா இருக்கு. அப்படியே வாயிலே போட்டவுடனே கரையறது.

அப்படியா? என்னாலே இப்ப முறுக்கு சாப்பிட முடியுமான்னு தெரியல்லே. இருந்தாலும் கொஞ்சம் கொடேன். சாப்பிட்டுப் பார்க்கறேன்.

பல்வலின்னு சொல்றேள். முறுக்கு சாப்பிடப் போய் அப்புறம் ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போறது.

ஆனாலும் எனக்குப் பயமாத்தான் இருக்கு.

எதுக்காக ஒரு அற்பப் பல்லுக்கு இப்படி பயப்படறேள்.

ஏண்டா, ஒரு அற்பப் பல்லா?

சரி, எல்லா அற்பப் பல்லும்னு வச்சிக்கோங்களேன்.

இந்த வயசான காலத்துலே உங்களுக்கு ஏன் பாட்டி முறுக்கு ஆசை?

எனக்கு சின்ன வயசுலே இருந்து முறுக்குன்னா உசுருடா. நாக்குக்கு எல்லாம் வயசு கிடையாதுடா.

சரி. இந்தாங்கோ இந்த பீஸை எடுத்துக்கோங்கோ.

(வாயில் முறுக்கைப் போட்டுக் கொண்டு கடித்தபடி)
ஆ!ஆ!ஆ!போச்சு. போச்சு. ஹா! பிராணம் போற வலி

அதுக்குத்தான் சொன்னேன் இந்த விஷப் பரீட்சையெல்லாம் வேணாம்னு.

முறுக்கு நன்னாத்தான் இருக்கு. ஆனாலும் இந்தப் பாழாப் போன பல்லுதான்......

பேசாம முதல்லே பல் டாக்டர் கிட்டே போங்கோ.

பல் டாக்டர்கிட்டே போகணும்னு நெனச்சாலே எனக்குப் பயமா இருக்குடா. ஏண்டா, பல்லைப் பிடுங்கும்போது ரொம்பவும் வலிக்குமோ?

வலிக்காது. ரொம்ப ஹாய்யா சந்தோஷமா இருக்கும்.

நீ ஒருத்தன். என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்காதேடா.

பின்னே என்ன பாட்டி, பல் பிடுங்கினா வலிக்காதா? இது என்ன கேள்வி?

சரிடா. தெரியாம கேட்டுட்டேன். இந்தப் பல் வலியே பரவாயில்லை நீ படுத்தற பாட்டுக்கு.

சீக்கிரமா பல் டாக்டர் கிட்டே போய் எல்லாப் பல்லையும் பிடுங்கிண்டு வந்துடுங்கோ.

ஏண்டா எல்லாப் பல்லையும் பிடுங்கணுமாடா?

பாட்டி, நான் பல் டாக்டர் இல்லே. எல்லாப் பல்லையும் பிடுங்கணுமா இல்லை எத்தனை பல்லைப் பிடுங்கணுங்கறதை எல்லாம் பல் டாக்டர் உங்க பல்லைத் தட்டிப் பாத்து சொல்லிடுவார்.

ஏண்டா, சுத்தியால தட்டிப் பார்ப்பாரா?

இல்லை. கடப்பாறையால. என்ன கேள்வி பாட்டி? அதுக்குன்னு அவர் வச்சிண்டிருக்கிற கருவியாலே லேசா அசைச்சி, தட்டிப் பாப்பார்.
பல் பிடுங்கற சமாசாரம் எல்லாம் வலிக்கத்தான் செய்யும்.
****************
காட்சி 2
ஏண்டா, நான் அன்னிக்கு ஒரு நாள் ஜனாவோட பல் டாக்டர் டிஸ்பென்ஸரிக்குப் போனபோது…

நீங்க ஏன் போனேள்?

அவளுக்கு ஏதோ ப்ராப்ளம். மாமி, கூட வாங்கோன்னா. சரி. கூப்பிடறா ஆசையா. அவளுக்கு ஒத்தாசையா இருக்கலாமேன்னு நானும் போனேன். அப்போ அங்கே ஒரு பயங்கற அலறல். ஏதோ ஒரு குழந்தைக்கு பல்பிடுங்கிண்டு இருந்தாராம் டாக்டர். பாவம் அந்தக் குழந்தை போட்ட அலறலை நினைச்சாலே எனக்குக் குலை நடுங்கறது. பல் டாக்டர்கிட்டே என் பல்லைக் காட்டி விசாரிக்கலாம்னு நெனச்சேன்.ஆனா அந்தக் குழந்தை அலறினதைப் பாத்தவுடனே எனக்குப் பயமாப் போயிடுத்து. ஒண்ணும் கேக்காம வந்துட்டேன்.

குழந்தைங்கன்னாலே அப்படித்தான் பாட்டி. டாக்டர் பல்லைத் தொடறதுக்கு முன்னாடியே அலற ஆரம்பிச்சுடுவா.

ஆனாலும் வலிதாண்டா அப்பா. எனக்கு என்னவோ பல் புடிங்கிக்கப் பயமாத்தான் இருக்கு.

அப்படின்னா அப்படியே விட்டுடுங்கோ.

அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா? என் ஆயுசிலே என் பல் நேரா வரிசையா இருந்து ஒரு நாளாவது அதை நான் பாத்து சந்தோஷப் படணும்.

தாத்தா சந்தோஷப் படணும்னு சொல்லுங்கோ.

ஆனாலும் பயமா இருக்குடா. ஆமாம். ஒரு பல் புடுங்க எவ்வளவுடா ஆகும்?

ரெண்டு நிமிஷம் ஆகும்.

நான் அதைக் கேக்கலைடா. எவ்வளவு பணம் ஆகும்?

டாக்டரைப் பொறுத்து 200லே இருந்து 300 வரை ஆகும்.

ஏண்டா ஒரு பல்லுக்கா?

ஆமாம். 32 பல்லுக்கும்னு நெனைச்சேளா?

அந்தக் காலத்துலே எல்லாம் ஒரு பல் புடுங்க வெறும் அஞ்சு ரூபாதான் ஆகும்.

எப்ப பாட்டி அது?

எனக்கு 20 இல்லே 25 வயசு இருக்கும்போது.

அவ்வளவு சீப்பா இருந்தபோதே நீங்க உங்க பல் அத்தனையையும் புடிங்கிண்டு இருக்கலாமே பாட்டி.

இந்த கேலிக்கெல்லாம் குறைச்சலில்லை.

அப்புறம் அதைப் பத்தி ஏன் பேசறேள்?

என் வயித்தெரிச்சல். பேசினேன்.

என்ன அநியாயமா இருக்கே. நம்ம பல்லும் போய், வலியையும் தாங்கிண்டு பணம் வேறே இவ்வளவு கொட்டி அழணுமா?

ஆபரேஷனுக்கு மாத்திரம் என்ன? கத்தியாலே அறுத்து, தெச்சி, உடம்பெல்லாம் உயிர் போற வலியிலே ஊசி போட்டு, அதுக்கெல்லாம் டாக்டர்களா 'ஐயோ, பாவம்' னு உங்களுக்குக் காசு தராள? நீங்க தானே தரேள்.

அதுவும் சரிதாண்டா. என்னை ஒரு நாள் ஒரு நல்ல பல் டாக்டர்கிட்டே அழைச்சிண்டு போயேன்.

நான் முதல்லே எந்த டாக்டருக்குப் பல் நல்லா இருக்குங்கறதைக் கண்டு பிடிச்சி, அப்புறமா உங்களைக் கூட்டிண்டு போறேன்.

ஏண்டா, நான் அதையா சொன்னேன்? நல்ல பல் டாக்டரான்னா என்னவோ கேலி பண்றயே. அது சரி. ஒரு வேளை எல்லாப் பல்லையும் எடுத்துட்டா நான் பொக்கை வாயோடு இருக்கணுமாடா?

இருந்துட்டுத்தான் போங்களேன். உங்க வயசுக்காரா எத்தனை பேர் பொக்கை வாயை வச்சிண்டு போடுபோடுன்னு போட்டுண்டு இருக்கா? அவ்வளவு ஏன்? ஆனானப் பட்ட மகாத்மா காந்தியே பொக்கை வாயா ஆனப்புறம் தான் அவருக்கு அழகே கூடித்தாக்கும். அவருடைய பொக்கை வாய் அழகிலே மயங்காதவாளே யாரும் கிடையாது.

நான் ஒண்ணும் மகாத்மா காந்தியும் இல்லே. ரொம்ப வயசான கிழவியும் இல்லே. எனக்கு இப்போ வயசு 72 தான் ஆறது. என்னாலே பொக்கை வாயோட ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.

அப்படின்னா எல்லாப் பல்லையும் எடுத்துட்டு புதுசா பல் செட் ஒண்ணு கட்டிக்கோங்கோ.

அப்போ என் வாயிலே இருக்கிற கோணப் பல்லையும் எடுத்துடுவா இல்லியா?

இதென்ன கேள்வி பாட்டி? கோணப் பல்லை விட்டுட்டு மத்தப் பல்லை மாத்திரம் எடுக்க முடியுமா? ஆடற பல் கோணலா இருந்தா என்ன நேரா இருந்தா என்ன? எல்லாப் பல்லையும்தான் எடுப்பா. அப்புறம் நிஜப்பல் மாதிரி வேணும்னா பல்லை இம்ப்ளாண்ட் பண்ணுவா.

அப்படின்னா?

பல்லை ஸ்குரூ போட்டு உங்க இஹுருலே நடுவா மரம் நடற மாதிரி.

கேக்கறதுக்கே கஷ்டமா இருக்கேடா?

ஆமாம். பல் வரிசையா பார்க்க அழகா இருக்கணும்னா கஷ்டம் எல்லாம் பொறுத்துண்டாதான் ஆகணும். இங்கே பாருங்கோ பாட்டி. ஒருத்தருக்கு வயசான அப்புறமும் பல்லெல்லாம் நேரா அழகா இருந்ததுன்னா அவா பல் செட் கட்டிண்டு இருக்கான்னு அர்த்தம். அந்த மாதிரி நீங்களும கட்டிக்கோங்கோ. வலிக்குமேன்னு பாத்தா முடியுமா?

நம்ம மீனாட்சி என்னைவிட ரெண்டு வயசு பெரியவ. பல் வரிசை அவ்வளவு அழகா இருக்கேன்னு நெனைச்சேன். பல் செட்டுதானா அது?

ஆமாம். நீங்களும் அந்த மாதிரி ஒரு பல்செட் கட்டிண்டா உங்க முகமும் அழகா இருக்கும். எல்லார் கிட்டேயும் பெருமையா இதைச் சொல்லி சதா சர்வ காலமும் சிரிச்சிண்டே இருக்கலாம். முறுக்கு கூட சாப்பிடலாம்.

ஆ! பல் கட்டிண்ட அப்புறம் முறுக்கு கூட சாப்பிட முடியுமா?

ஆமாம். ஆனா பல் புடுங்கறதுக்கு முன்னாடி வலி தாங்க உங்களுக்கு மனசுலேயும் உடம்புலேயும் தெம்பு இருக்கணும்.

முறுக்கு சாப்பிடலாம்னு நீ சொன்னவுடனே எவ்வளவு வலி வலிச்சாலும் பொறுத்துக்கலாம்னு. தோணறது. ஆனாலும் பயமா இருக்கு. அந்தக் குழந்தை அழுததை நெனச்சா பக்குங்கிறது. எவ்வளவு செலவு ஆகுண்டா?

அதுக்குக் குறைஞ்சது ஒண்ணரை லட்சம் ரூபாயாவது செலவு ஆகும்.

ஆங், ஒண்ணரை லட்சமா? ஒரு பல் பிடுங்க 300 ரூபா. அப்படின்னா 32 பல்லுக்கு 9600 ரூபா.

உங்களுக்கு 32 பல் இருக்கா பாட்டி?

என்னடா கேள்வி இது? மனுஷான்னா 32 பல் இருக்குங்கறது உனக்குத் தெரியாதா?

பாட்டி, ஒரு மனுஷனுக்கு 100 வயசுன்னு சொல்றமாதிரி தான் இதுவும் ஒரு கணக்கு.

எனக்குத் தெரியாதா என்ன? ஒரு பேச்சுக்கு சொன்னேன்.

சிலருக்கு 28 பல் இருக்கும். சில பேருக்கு அதைவிட கம்மியாக்கூட இருக்கும்.

கம்மியா இருக்கிறவா அதிருஷ்டம் பண்ணினவா. அவாளுக்கு செலவு குறைச்சல். எனக்கு எல்லாப் பல்லும் இருந்து தொலையறது. ஒரு பல் கூட இதுவரையிலும் விழல்லை. குழந்தையா இருக்கச்சே விழுந்ததுதான். ஆனா எல்லாம் பல்லாங்குழி ஆடிண்டு இருக்கு.

சரி. இப்ப முப்பது பல் இருக்குன்னு வச்சிப்போம். பல் பிடுங்க மாத்திரம் 9000 ருபா செலவாகும். எம்ப்ளாண்ட்டோ என்னவோ சொன்னியே அதுக்கு ஒண்ணரை லட்சம்.

மருந்து, மாத்திரை, ஊசி எல்லாம் சேத்தா கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் லட்சத்துக்கு மேலே ஆயிடும் பாட்டி.

ஏண்டா ஊசி எதுக்கு?
பல் பிடுங்கச்சே வலி தெரியாம இருக்க போடற ஊசி.

ஊசி கைலேதானே போடுவா?

இல்லே. உள்ளங்கால்லே போடுவா.

ஏண்டா நிஜமாவா?

என்ன பாட்டி இதுகூட தெரியாம இருக்கேள். பல் இஹுருலே போடுவா.

என்ன? பல் இஹுருலேயா? அதை நினைச்சாலே இப்பவே எனக்கு வலிக்கிறதுடா. அதுக்கு பாழாப் போன பல்வலியே பரவாயில்லை போல இருக்கே.

ஊசி போட்ட உடனே அந்த இடத்துலே இஹுரு பூராவும் மரத்துப் போயிடும். அதுக்கப்புறம் பல் பிடுங்கச்சே வலி தெரியாது.

ஆனா அந்த ஊசி வலிக்குமே.

அந்த ஊசி வலி தெரியாம இருக்கிறதுக்கு இன்னொரு ஊசி போட்டுக்கோங்கோ.

என்னடா சொல்றே நீ?

அட போங்க பாட்டி நீங்க வேறே.கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கத்தான் வேணும்
(தாத்தா வருகிறார்)
********
காட்சி 3

(தாத்தா வருகிறார்)
பாட்டியும் பேரனும் என்ன பேசிண்டு இருக்கேள்?

வாங்கோ, வாங்கோ. ஆமாம். எங்கே போயிட்டு வரேள்?

ரொம்ப நாளா உன் பல்லை சரி பண்ணணும்னு எனக்கும் ஆசை. இப்ப பல்லெல்லாம் வலிக்கிறது அப்படின்னு வேறே சொல்றே. அதான் நல்ல பல் டாக்டரைப் பத்தி விசாரிச்சுட்டு வரேன்.

யார் தாத்தா அது?

டாக்டர் பல்லவன்னு மாட வீதியிலே இருக்கார். அவர் ரொம்ப பேர் போன டாக்டராம். நல்லா பல் பிடுங்குவாராம்.

பல்லவன்னு பேரென்னவோ அவர் செய்யற தொழிலுக்குப் பொருத்தமாத்தான் இருக்கு.

ஏன் தாத்தா, அவருக்கு மொத்தமே பல் லெவன் தான் இருக்குமா?

ஏண்டா கிண்டலாப் போச்சா உங்களுக்கெல்லாம்.

அவன் கெடக்கான். நீங்க சொல்லுங்கோ.

இத்தனை நேரம் நான் சொன்னதை விழுந்து விழுந்து கேட்டுட்டு, தாத்தா வந்தவுடனே அவன் கெடக்கானா?

நானும் இவனும் இத்தனை நேரமும் பல்லைப் பத்தித்தான் பேசிண்டு இருந்தோம். இவனானா ரொம்ப பயமுறுத்தறான்.

ஆமாம். என்ன சொன்னான் அவன்?

எல்லாப் பல்லையும் பிடுங்கி புதுசா பல் , என்னடா சொன்னே?

இம்ப்ளாண்ட் (Implant) பண்ணணும்னு சொன்னேன்.

அதுக்கு அவ்வளவு வலியையும் பொறுத்துண்டு ஒண்ணேமுக்கால் லட்சமும் அழணுமாம். நன்னாப் பல்லைப் பிடுங்கறாளோ இல்லியோ, நன்னா பணத்தைப் பிடுங்கறா.

அவ்வளவு எல்லாம் நம்மளாலே தர முடியாது.

அப்படின்னா பல்லை இப்படியே விட்டுட வேண்டியதுதானா ?

இல்லடி. இம்ப்ளாண்ட் (Implant) டுக்குப் பதிலா டெஞ்சர் (Denture) னா கம்மியா ஆகும்.

டிஞ்சர்னா?

டிஞ்சர் இல்லடி. டெஞ்சர். டெஞ்சரோ, டிஞ்சரோ யாருக்குத் தெரியறது இதெல்லாம். முன்னே பின்னே செத்திருந்தாத் தானே சுடுகாடு தெரியும்.

அபத்தமா பேசாதே. டெஞ்சர்னா பொய்ப் பல். அக்ரிலிக்கிலே இருந்து செராமிக் வரையிலும் 6000 ரூபாலே இருந்து 30000 ருபா வரையிலும் இருக்கு. நம்மாலே முடிஞ்சது 20000 தான். அதுக்கான மெடீரியல் செலக்ட் பண்ணி நாம செஞ்சிக்கலாம்.

சரி. ஆனா அதைக் கட்டிண்ட அப்புறம் முறுக்கு சாப்பிட முடியுமா?

பாட்டி முறுக்கு சாப்பிடறதுலேயே இருக்கா தாத்தா.

அது தெரியாது. டாக்டர் கிட்டேதான் கேக்கணும்.

கேட்டு சொல்லுங்களேன்.

இருக்கட்டும். இருக்கட்டும். சரி. எல்லாத்துக்கும் நாள், கிழமையெல்லாம் பாப்பியே. நீயே பாத்து ஒரு நாள் சொல்லு.

( பாட்டி பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்தபடி) அஷ்டமி, நவமி இல்லை. எட்டுலே இருக்கப் படாது. என்னோட நட்சத்திரமாவும் இருக்கக் கூடாது. வர வியாழக் கிழமை நாள் நன்னா இருக்கு. டாக்டரைப் போய்ப் பாக்கறதுக்கு முன்னாடி கபாலீஸ்வரர் கோவில்லே துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி ஒரு அர்ச்சனை பண்ணிடணும்.

பண்ணிட்டாப் போச்சு.

சரிடா மோகன். வர புதன்கிழமை துர்க்கைக்கு அர்ச்சனை பண்ணிடு. என்ன ?

(பல் டாக்டர் டிஸ்பென்ஸரியில்)
டாக்டர், ரொம்ப நாளாவே பல்வலி, பல்வலின்னு அவஸ்தைப் பட்டுண்டு இருக்கேன்.

சரி. நான் பாக்கறேன். ( dentist chair- நாற்காலியில் பாட்டியை அமர்த்தியபடி) வாயை நல்லா திறங்க அம்மா.
(பாட்டி வாயைத் திறக்க டாக்டர் எல்லாப் பற்களையும் செக் செய்கிறார்)
(பாட்டி ஆ! ஆ! ஆ!என்று அலறுகிறாள்)

நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலை. அதுக்குள்ளே இப்படி அலறினா எப்படி? சின்னக் குழந்தையே பரவாயில்லை போல இருக்கே. எல்லாப் பல்லுமே ஆடறதே. ஆமாம் .(எடுத்த பல் X Ray ஐப் பார்க்கிறார்.) உங்க வயசு என்ன இப்போ?

72

உங்களுக்கு. பிபி (BP) இருக்கா?

BP இல்லாத மனுஷாளே கிடையாதுன்னு என் பேரன் சொல்லியிருக்கான்.

நான் அதைக் கேக்கல்லே. ஹை பிபி (High BP) யா இல்லே லோ பிபி ( Low BP) யான்னு கேக்கறேன்.

எப்பவோ செக் பண்ணினதுதான் டாக்டர். உடம்புலே அடிக்கடி ஒரு படபடப்பு வரும்.

சுகர் இருக்கா? வேண்டியது இருக்கு. வீட்டுலே வாங்கி வச்சிருக்கேன்னு சொல்லாதீங்க. உங்க உடம்புலே சுகர் இருக்கான்னு கேட்டேன். அதாவது உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கான்னு கேக்கறேன்.

தெரியாது. ஆனா அடிக்கடி எறும்பு கடிக்கிறது உண்டு என்னை.

கூட யார் வந்திருக்கா?

அவர் வந்திருக்கார்.

சரி. (கதவைத்திறந்து வெளியே பார்த்துப் பாட்டியின் கணவரைக் கூப்பிடுகிறார்)
இவங்க என்ன இப்படி பயப்படறாங்க? இவங்களுக்கு பல் பிடுங்கறதுக்கு முன்னாலே நான் எழுதியிருக்கிற இந்த டெஸ்ட் எல்லாம் பண்ணணும். இவங்களுக்கு ஹார்ட் பிராப்ளம் ஏதாவது இருக்கா?

நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஹார்ட் பெயின்னு சொன்னா. அப்போ ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் கிட்டே இவளைக் கூட்டிண்டு போயிருக்கேன். ஈசிஜி (ECG) எடுத்தோம். ஏதோ மைல்ட் பிராப்ளம் இருக்குன்னு டாக்டர் சொன்னார். அப்புறம் எதுவும் ஆகல்லை. அதனாலே அப்படியே விட்டுட்டோம்.

சரி. இந்த டெஸ்ட் எல்லாம் பண்ணி அந்த ரிஸல்ட்டோட வாங்க. அதுக்கப்புறம் தான் இந்த அம்மாளோட பல்லை நான் தொட முடியும்.

ஏன் சார்? உங்க பல்கூட கோணல் மாணலா இருக்கே. அதையும் சரி பண்ணிடலாமே. அந்தக் கோணல் பல் நாலஞ்சையும் எடுத்துட்டு டெஞ்சர் வச்சி சரி பண்ணிடலாம்.

டாக்டர் அதுக்கு அவசரமும் இல்லே. அவசியமும் இல்லே. இவளோட பல் பிரச்சினையை ஸால்வ் பண்ணறதுதான் முக்கியம்
..........
(வீட்டில்)
நான் பல் டாக்டர்கிட்டே பல்லைக் காண்பிச்சேன். எல்லாப் பல்லையும் பிடுங்கணும்னு சொல்லிட்டார்.

அத்தே, பல் பிடுங்கும்போது ரொம்ப ஜாக்கிரதையா பிடுங்கணும். இல்லேன்னா என்னோட ஃப்ரெண்டோட அம்மாவுக்கு ஆன மாதிரி ஆயிடப் போறது.

ஏன்? என்ன ஆச்சு?

அவாளாலே இப்ப பேசவே முடியல்லே. ரொம்ப நன்னா ஸ்பஷ்டமா நாள் முழுதும் சக்கரைவட்டமா பேசுவா. பேசினா இன்னிக்குப் பூராவும் கேட்டுண்டே இருக்கலாம். அப்படி இருந்த மாமியாலே இப்ப ஊமை பாஷைதான் பேச முடியறது.

என்னடி சொல்றே நீ? கேக்கவே பயமா இருக்கு.

பயப்படாதீங்கோ. அதுக்குத்தான் நல்ல பல் டாக்டரா பாத்துப் போகணுங்கறது.

அப்புறம் எனக்குத் தெரிஞ்ச ஒரு மாமிக்கு ஒரு பல் புடிங்கின உடனேயே ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது. நிக்கவே இல்லை. இத்தனைக்கும் அவளுக்கு என் வயசுதான் இருக்கும். உடனே டாக்டர் பயந்து போய் அடுத்த பல்லைப் பிடுங்கறதை நிறுத்திட்டு அவளை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டார். மூணாவது நாளே….

என்னடி ஆச்சு?

போயிட்டா.

ஐயோ, கேக்கறதுக்கே பயமா இருக்கே.

எனக்குத் தெரிஞ்ச இன்னொருத்தருக்கு பல் பிடுங்கச்சே நுனி நாக்கு கட் ஆயிடுத்தாம்.

ஏண்டி என்னைப் பயமுறுத்தரே? உனக்குத் தெரிஞ்சி யாரும் நல்ல படியா பல் புடிங்கிண்டதே கிடையாதா?

அதுக்காகச் சொல்லல்லை அத்தே. பல் புடுங்கறது ஜாக்கிரதையா செய்யணும். அதுக்காகத்தான் சொல்றேன்.

ஏண்டி? நானா என் பல்லைப் புடிங்கிக்கப் போறேன். பல் டாக்டர்னா ஜாக்கிரதையாப் பிடுங்கணும். எங்கிட்டசொல்லி என்னைப் பயமுறுத்தி என்ன பிரயோஜனம்?

(அப்போது மோகன் அங்கே வருகிறான்)

சித்தி, பாட்டி ஏற்கெனவே பயந்து போயிருக்கா. நீங்க வேறே இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பாட்டியைப் பயமுறுத்தறேளே.

எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருக்கணுங்கறதுக்காக நான் சொன்னேன்.

நீங்க சொன்ன கேஸெல்லாம் ஏதாவது B.P., சுகர் இந்த மாதிரி கேஸா இருக்கும். டாக்டர் கிட்டே சொல்லாம மறைச்சிருப்பா.

அத்தே, பல் கட்டிண்ட அப்புறம் அது பழகறதுக்கு ஒரு மாசம் ஆகும். அது செட் ஆற வரையிலும் கொஞ்சம் கஷ்டம்தான்.

டெஞ்சர்னா அதை ராத்திரி படுக்கப்போறதுக்கு முன்னாடி கழட்டி டம்ளர் தண்ணீர்லே போட்டு வச்சி அதைக் காத்தாலே எழுந்தவுடனே பல்விளக்கற மாதிரி விளக்கி கிளீன் பண்ணி மறுபடியும் மாட்டிக்கணும்.

ஏண்டா? அவளைச் சொல்லிட்டு நீ பயமுறுத்தறயே.

பயமுறுத்தலை பாட்டி. இருக்கறதைச் சொன்னேன். நாளைக்கு நீங்க என்னை ஏண்டா இதையெல்லாம் முன்னமேயே எங்கிட்டே சொல்லல்லேன்னு கேட்டா? அதுக்காகத்தான் சொன்னேன்.

இன்னும் சொல்ல வேண்டியது பாக்கி இருந்தா ரெண்டு பேரும் இப்பவே சொல்லிடுங்கோ.

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லிட்டேன். மத்ததெல்லாம் டாக்டர் சொல்லுவார். ஆனாலும் பயப்படாதீங்க பாட்டி. எல்லாம் நல்ல படியா நடக்கும். ஊசி போட்டு அப்புறம்தான் பல் புடுங்குவா. அதனாலே வலியெல்லாம் அவ்வளவாத் தெரியாது. நான் அன்னிக்குக் கலாட்டா பண்றதுக்காக ரொம்ப வலிக்கும்னு சொன்னேன். அவ்வளவுதான்.
********

காட்சி 4
(தாத்தா வருகிறார்.)
நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். நேத்து நடந்த கேஸ் ஒண்ணு நான் கேள்விப்பட்டது.

தாத்தா, நீங்க வேறே. பாட்டியே ரொம்ப பயந்துண்டு இருக்கா. நீங்க எதையாவது சொல்லி இன்னும் பயமுறுத்திடாதீங்க.

இல்லேடா. நான் பயமுறுத்தலை. டெஸ்ட் ரிசல்ட் வந்தப்புறம் டாக்டர் கிட்டே காட்டிட்டு அவர் என்ன சொல்றாரோ அப்படியே செய்வோம்.

சின்ன வலின்னா கூட அவ தாங்கமாட்டா. ஊசின்னாலே அவளுக்குப் பயம். ஆயுசு பூராவும் ஆயுர்வேதம், சித்த மருந்துகளைத்தான் சாப்பிட்டு வந்திருக்கா இது வரையிலும். அதான் எனக்கு ஒரே கவலையா இருக்கு.

பாட்டி ஆயுர்வேதம், சித்தவைத்தியம் பண்ணிண்டதுலே உங்களுக்கு என்ன கவலை தாத்தா?

அதைச் சொல்லல்லேடா நான். அல்லோபதி மருந்து, ஊசி போட்டுக்கற சமாசாரமெல்லாம் அவளுக்கு அலர்ஜி. அதைச் சொன்னேன்.

முதல்லே லேப்பிலேயிருந்து ரிசல்ட் வரட்டும்.

மோகன், நீ போய் இன்னிக்கு ரிசல்டை வாங்கிண்டு வந்துடு.

சரி. தாத்தா.

(டிஸ்பென்ஸரியில்)
(டாக்டர் ரிஸல்டைப் பார்க்கிறார். பார்த்துவிட்டு )
இவங்க கேஸ் கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணவேண்டிய கேஸ். இவங்க வயசானவங்க. கொஞ்சம் வீக்கா வேறே இருக்காங்க. அதனாலே இவங்களை ஒரு எம் டி (MD) படிச்ச ஜெனரல் ஃபிஸீஷியன் (General physician) கிட்டே காட்டி அவங்க கிட்டே இருந்து ஃபிட்னஸ் செர்டிபிகேட் (Fitness Certificate) வாங்கிண்டு வாங்க. அப்பத்தான் இவங்க பல்லையே நான் தொடமுடியும். நான் லெட்டர் எழுதித்தரேன்.

இது வரையிலே யாரும் என்கிட்டே அப்படிச் சொல்லல்லியே டாக்டர். பல் டாக்டர் கிட்டே கூட்டிண்டு போன அடுத்த நிமிஷமே பல்லைப் பிடுங்கிண்டு வந்துடறா.

ஏன்னா? என்ன சொல்றார் டாக்டர்?

ஒண்ணுமில்லே. உன் பல் பிடுங்கறதுக்கு முன்னாடி ஒரு பொது வைத்தியர் கிட்டே போய் இந்த ரிஸல்டைக் காட்டி உன் 'பல்லைப் பிடுங்கலாம். அதனாலே பிராப்ளம் ஒண்ணும் இல்லே' ன்னு சர்ட்டிபிகேட் வாங்கிண்டு வரச் சொல்றார்.

இவரும் பல் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் தானே. இவரே அதைச்சொல்ல வேண்டியதுதானே.

பாட்டியம்மா. நாங்க வெறும் பல் ஸ்பெஷலிஸ்ட் மட்டும் தான். அதனாலே நாங்க அதைச் சொல்லமுடியாது. உங்க உயிர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் எங்களுக்கும்.

வாஸ்தவந்தான்.

அதனாலே நான் சொன்னபடி செர்டிபிகேட் வாங்கிண்டு வாங்க. அப்புறம் நாம பல் எக்ஸ்ட்ராக்ஷனை (Extraction) ஆரம்பிப்போம்.

ஏன் டாக்டர்? எல்லாப் பல்லும் ஆடறது. எல்லாப் பல்லையும் பிடுங்கணும்னு சொன்னேளே. ஒரே தடவையிலேயே அத்தனை பல்லையும் பிடுங்கிடுவேளா இல்லை ரெண்டு மூணு தடவையாப் பிடுங்குவேளா?

அதெல்லாம் அந்த ஜெனரல் ஃபிஸீஷியன் என்ன சொல்றார்ங்கறதைப் பொறுத்து டிஸைட் பண்ணுவோம். அநேகமாக நாலு அஞ்சி ஸிட்டிங் தேவைப்படும்.

என்ன டாக்டர் ஒரேதரமா இல்லாம நாலஞ்சு தரம்னா ரொம்பவும் கஷ்டமாச்சே.

ஒரே தரமாப் பிடுங்கறது உங்க விஷயத்துலே ரிஸ்கியா இருக்கலாம். முதல்லே நீங்க நான் சொன்ன சர்ட்டிபிகேட்டை வாங்கிக்கிட்டு வாங்க. மத்ததையெல்லாம் நாம அப்புறமா உக்காந்து பேசி தீர்மானிச்சிக்கலாம்.

சரி டாக்டர்.

(வீட்டில்)
தாத்தா, டாக்டர் என்ன சொன்னார்?

பாட்டி பல்லைப் பிடுங்கறதுக்கு முன்னாலே ஃபிட்னஸ் செர்டிபிகேட் வாங்கணுமாம்.

(டாக்டர் எழுதிக் கொடுத்த லெட்டரைக் காண்பிக்கிறார்)
என்ன ஃபிட்னஸ் செர்டிபிகேட் வேண்டிக்கிடக்கு. கேட்டா இவர் பல் ஸ்பெஷலிஸ்ட் மட்டும் தானாம். அதனாலே பல் பிடுங்கலாமா இல்லையாங்கறதை வேறே ஒரு டாக்டர் சொல்லணுமாம். அப்புறம் இவர் என்ன பல் ஸ்பெஷலிஸ்ட்?

தெரியாம பேசாதே. உனக்கு உடம்புலே வேறே எங்கேயாவது கோளாறு இருந்தா இவருக்கு எப்படித் தெரியும்?

வேறெங்கயாவது கோளாறு இருந்தா இவருக்கு என்ன? பல் பிடுங்கறது மாத்திரம் தானே இவர் வேலை. அதை செஞ்சுட்டுப் போகவேண்டியதுதானே.

அப்படி எல்லாம் இல்லை. ஹாரட் வீக்கா இருந்தோ, டயாபெடிஸ் இல்லே ஹை பிபி இருந்தோ பல்லைப் பிடுங்கினா உசுருக்கே ஆபத்தாப் போயிடுத்துன்னா?

ஆ? உசுருக்கே ஆபத்தாப் போயிடுமா?

அப்பறம் டாக்டர் பேர் கெட்டுப் போயிடாதா?

என் உசுரைப் பத்திக் கவலைப் படாம டாக்டர் பேர் கெட்டுப்போறதைப் பத்திக் கவலைப்படறேளே.

நான் அப்படியா சொன்னேன்? உனக்கு உசுரு பயம் இருக்கிற மாதிரி அவருக்கும் அவர் தொழில் பயம் இருக்குமில்லையா?

எனக்கு என்னமோ நீங்க பேசறதைப் பாக்கும்போது ரொம்ப பயமா இருக்கு. உசுருங்கறேள், ஹார்ட்டுங்கறேள். இதையெல்லாம் கேக்கும்போது இப்ப நான் உயிரோடே இருக்கேனா இல்லையான்னே சந்தேகம் வந்துடறது.

என்ன பாட்டி, நான் ஏதாவது பேசினா தினமும் நீங்க 'இனிமே நான் இருந்து என்னடா பண்ணப் போறேன்? போற வேளை வந்துடுத்து' ன்னு என்னமோ பக்கத்து ஊருக்குப் போற மாதிரி பேசுவேள்.இன்னிக்கு என்னடான்னா இப்படி பயந்து நடுங்கறேள்.

பயம் ஒண்ணுமில்லை, நெறைய செலவு பண்ணி பல்லைப் பிடுங்கிண்டு அந்த வலியோட சாகணும்னு நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு.

ஏதோ டாக்டர் கிட்டே போனோமா, பல்லைப் பிடுங்கிண்டு வந்தோமான்னு இல்லாம இதென்னடா பெரிய தொந்திரவாய்ப் போயிடுத்து. பல் டாக்டர் கிட்டேபோனோம். பல் டெஸ்ட்டெல்லாம் பண்ணணும்னு சொன்னார். அதையும் பண்ணியாச்சு. இப்ப என்னடான்னா ஃபிட்னஸ் செர்டிபிகேட் (Fitness Certificate) வேணுமாம். அதுக்கு இன்னொரு டாக்டர்கிட்டே நான் போய் டெஸ்ட் ரிஸல்டை காமிக்கணுமாம். அப்புறம் அந்த ரிஸல்ட்டையும் என்னையும் பாத்துட்டு அவர் செர்டிபிகேட் தரணுமாம்.

இப்படியே தொணதொணத்துண்டே இருந்தா எந்தப் பிரயோஜனமும் இல்லை.. நாம இன்னிக்கு ஜெனரல் ஃபிஸீஷியன் (General Physician) ஐப் பாக்கப் போறோம். என்ன?

(அன்று சாயந்நிரம் தாத்தா பாட்டியை அழைத்துக்கொண்டு ஜெனரல் ஃபிஸீஷியன் (General Physician) ஐப் பார்க்கப் போகிறார்)

சார், டென்டிஸ்ட் டாக்டர் பல்லவன் இவளுக்கு ஒரு ஃபிட்னஸ் செர்டிபிகேட் (Fitness Certificate) வாங்கிண்டு வரச் சொன்னார். அதுக்கான டெஸ்ட் ரிபோர்ட் இதுதான் டாக்டர்.

(டாக்டர் டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்க்கிறார்)
சுகர் இல்லை. கொஞ்சம் பிபி (BP) இருக்கு. அதை சரி பண்ணிடலாம். ஆமாம். ஏன் இந்த அம்மா மேல்மூச்சு கீழ்முச்சு வாங்கறாங்க இப்படி?

அது ஒண்ணுமில்லை. மாடி ஏறி வந்ததுலே கொஞ்சம் சிரமமாயிடுத்து.

எத்தனை நாளா உங்களுக்கு இப்படி இருக்கு?

ரெண்டு வருஷமா இருக்கு.

ரெண்டு வருஷமாவா? இதுக்கு ட்ரீட்மெண்ட் ஏதேனும் எடுத்துக்கிறீங்களா?

இல்லை.

உங்க. ஈஸிஜி (ECG) லே கூட கொஞ்சம் பிராப்ளம் இருக்கு. நீங்க நான் சொன்னேன்னு சொல்லி கார்டியாலஜிஸ்ட் (Cardiologist) டாக்டர் ஈஸ்வரனைப் போய்ப் பாத்து ஒரு கம்ப்ளீட் ஹார்ட் செக் அப் (Complete heart Check up) செய்யச் சொல்லுங்க. (கடிதம் எழுதுகிறார்) இந்த லெட்டரை அவர்கிட்டே காண்பிச்சி அப்புறம் என்னோட பேசச் சொல்லுங்க. அவர் நம்ம ஹாஸ்பிடல்லேயே கார்டியாலஜி செக்ஷன்லே இருப்பார். போய்ப் பாத்துட்டு நீங்க நாளைக்கு என்னை வந்து பாருங்க.

தாத்தாவும் பாட்டியும் கார்டியாலஜி செக்ஷனனுக்குப் போய் விசாரிக்க அங்கு கார்டியாலஜிஸ்ட் ஈஸ்வரன் மறு நாள் காலை ஒன்பது மணிக்குத்தான் வருவார் என்று கூறவே அவர்கள் இருவரும் வீட்டிற்குப் போகிறார்கள்.

(வீட்டில்)
என்ன இது? வயசான காலத்துலே இப்படி லோலோன்னு அலைய வெக்கிறாளே. இன்னும் அந்த டாக்டர், வேறே எந்த எந்த டாக்டரைப் பார்க்கச் சொல்லப் போறார்னு தெரியல்லையே.

எல்லாம் என் தலையெழுத்து.

என்ன பாட்டி, பல்லைப் பிடுங்கிண்டு வந்துட்டேளா?

நீ ஒருத்தன். என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்காதேடா.

என்ன தாத்தா? என்ன ஆச்சு?

இன்னும் என்ன ஆகணும்? இப்ப ஒரு கார்டியாலஜிஸ்ட் கிட்டே போகணுமாம்.

பாட்டி பல்லைப் பிடுங்கறதுக்கு முன்னாடி ஊரிலே இருக்கிற அத்தனை டாக்டர்களையும் பார்த்துடுவேள் போல இருக்கே.

ஒவ்வொரு டாக்டரையும் பாக்கறதுக்கு ஆட்டோலே போய் அங்கங்கே அரை மணி நேரம் முக்கால் மணி நேரம் பிள்ளையார் பிடிச்சி வெச்சாப்பல உட்கார்ந்து, காத்திருந்து மாடி ஏறி இறங்கி போயிட்டு வரதுக்குள்ளே பிராணனே போயிடறது. இதுக்கே ஏகப்பட்ட செலவு ஆயிடும் போல இரூக்கே. என்னைப் பேசாம விட்டுடுங்கோ. இந்தப் பல்லோடயே இருந்து தொலைக்கிறேன்.

அப்புறம் பாட்டி முறுக்கு சாப்பிடறது எப்படி?

முறுக்கும் வேணாம். கிறுக்கும் வேணாம். ஆளை விட்டாப் போதும்.

கொஞ்சம் பொறுத்துக்கோ. பாதி கிணத்தைத் தாண்டிட்டோம்.

இன்னும் பாதி பாக்கி இருக்கா? என்னாலே முடியாது. இப்பவே ஏறி இறங்கி கோண கோணலா ஆஸ்பத்திரியிலே மணிக் கணக்குலே உட்கார்ந்திருந்ததுலே கை, கால், முதுகு எல்லாம் பிராணன் போற மாதிரி வலிக்கிறது. பல் பிடுங்கச்சே தான் வலிக்கும்னு நெனச்சேன். அதுக்கு முன்னாடியே இப்படி வலிக்க ஆரம்பிச்சுடுத்தே. அட ஈஸ்வரா.

நல்ல வேளையா ஞாபகப் படுத்தினே. அடுத்தது டாக்டர் ஈஸ்வரனைத் தான் நாம போய்ப் பார்க்கப் போகணும்.

சாக்ஷாத் அந்த பரமேஸ்வரனையே பாத்துடலாம் போல இருக்கே இவங்களையெல்லாம் பாக்கறதுக்கு முன்னாடி. இன்னும் அந்த ஈஸ்வரன் எந்த டாக்டர் பரமேஸ்வரனைப் பார்க்கச் சொல்லப் போறாரோ. தெரியல்லியே.

(மறுநாள் காலை. ஒரு மணி நேரம் காத்திருந்து டாக்டர் ஈஸ்வரனைச் சந்திக்கிறார்கள்)
ஜெனரல் ஃபிஸீஷியன் (General Practitioner) டாக்டர் கணேசன் இவங்களுக்குப் பல் பிடுங்கறது சம்மந்தமா உங்களை பார்க்கச் சொன்னார். இதோ அவர் கொடுத்த லெட்டர். (லெட்டரைக் கொடுக்கிறார்)
(டாக்டர் லெட்டரைப் பார்த்தபடி)
டெஸ்ட் ரிசல்ட்டைக் கொடுங்க.

(டெஸ்ட் ரிஸல்டைக் கொடுக்க, டாக்டர் அதைப் பார்த்து விட்டு)
ஈஸிஜி (ECG) எடுத்திருக்கீங்க. அது பத்தாது. எக்கோ கார்டியோகிராம் (Echo Cardiogram) எடுக்கணும்.

அதுக்கு எங்கே போகணும் டாக்டர்?

ஈசிஆர்பி லேப் (ECRP Lab) க்குப் போங்க. எக்கோ கார்டியோகிராம் (Echo Cardiogram) டெஸ்டை முடிச்சிட்டு ரிசல்டைக் கொண்டு வாங்க.

(ABCD இருபத்தாறு எழுத்தையும் சொல்லி அதுக்கான டெஸ்ட், அதுக்கான லேப், அதுக்கான டாக்டர்னு நம்மைத் துரத்திண்டே இருக்கா என்று பாட்டி தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்)
என்ன பாட்டி, என்ன முணுமுணுக்கிறீங்க?

என் கையாலாகாத்தனத்தை நினைச்சித் தான் முணுமுணுக்கிறேன். இன்னும் டாக்டர் வேறே எந்த எந்த டாக்டர்கள் கிட்டே போகணும்னு இப்பவே சொல்லிடுங்க?

இனிமே நீங்க வேறே எந்த டாக்டர் கிட்டேயும் போக வேண்டிய அவசியம் இருக்காது . அந்த டெஸ்டை முடிச்சிட்டு அந்த ரிஸல்ட்டை எடுத்துக் கிட்டு நாளைக்கு என்னை வந்து பாருங்க.

(பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வாழ்க்கையே வெறுத்துவிடும் போல் ஆகிவிட்டது.)
வீட்டில்
இன்னும் எவ்வளவு அலைச்சல் இருக்குமோ தெரியலையே. ஏன்னா, நாம போகணுமா இந்த டெஸ்டுக்கு?இருக்கற பல் இப்ப இருக்கிற மாதிரியே இருந்துட்டுப் போகட்டுமே. ஆ!ஆ!ஆ!

ஏன்? என்ன ஆச்சுடி?

இந்தப் பக்கத்துப் பல் என்னாச்சுன்னே தெரியல்லை. இப்பப் பாத்து மறுபடியும் திடீர்னு வலிக்கிறது.

பல்லுனாலேயே நமக்குப் பாதி வியாதி. பொறுத்துக்கோ. பல்லை எடுத்தவுடனே ஹார்ட் ப்ராப்ளம்கூட சரியானாலும் சரியாயிடலாம்.

அப்படியா சொல்றேள்?

ஆமாம். உரலுக்குள்ளே தலையை விட்டாச்சு. உலக்கைக்குப் பயந்தா எப்படி?
*************

காட்சி 5

(மறுநாள் காலை)
நேத்து ராத்திரி மோசமான* சொப்பனம் ஒண்ணு பாத்தேன். என் பல்லெல்லாம் விழுந்துடுத்து. பொக்கை வாயா நிக்கறேன். டாக்டர் கிட்டே போய்ப் பல் செட் கட்டிக்க எப்ப வரணும்னு கேக்கறேன். ஆனா அவர் உங்களுக்குப் பல் செட் கட்ட முடியாது. நீங்க பொக்கை வாயோடதான் இருக்கணும் சொல்லிட்டார்.

எப்பப் பார்த்தாலும் அதே ஞாபகம் உனக்கு. அதான் அந்த மாதிரி சொப்பனம் வரது. பல் செட் கட்டறது ஒண்ணும் பிரம்ம வித்தை இல்லை.

பிள்ளையாரப்பா நீதாம்பா என்னைக் காப்பாத்தணும்.

ஏண்டி? உன்னை மட்டும் காப்பாத்தினா போதுமா? என்னையும் காப்பாத்தச் சொல்லி வேண்டிக்க மாட்டியா?

நான் எனக்கு வேண்டிண்டா அது உங்களுக்கும் வேண்டிண்ட மாதிரி தான்.

உனக்குப் பல் போயிட்டா எனக்கும் போயிட்ட மாதிரியா?

ஏன் காலங்காத்தாலே எழுந்து அபத்தமா உளறறேள்?

சரி!சரி! சண்டையை ஆரம்பிச்சுடாதே. இன்னிக்கு 9 மணிக்கெல்லாம் டாக்டரைப் பார்க்கப் போகணும்.அதுக்கு ரெடி ஆகிக்கோ.

(ஈசிஆர்பி லேப்பு (ECRP Lab) க்குப் போய் எக்கோ கார்டியோகிராம் (Echo Cardiogram) எடுத்துக் கொண்டு அந்த டெஸ்ட் ரிசல்டை கார்டியாலஜிஸ்ட் டாக்டர் ஈஸ்வரனிடம் கொடுக்க வந்து வழக்கம்போல் 45 நிமிடங்கள் காத்திருந்து டாக்டரைப் பார்க்கிறார்கள்.)
குட் மார்னிங் டாக்டர் (Good Morning Doctor)

என்ன விஷயம்? உடகாருங்க.

டாக்டர் நேத்து நீங்க எக்கோ கார்டியோகிராம் (Echo Cardiogram) எடுத்து ரிசல்ட்டைக் கெண்டு வரச் சொன்னீங்க இல்லியா? இதோ ரிசல்ட்.

சரி. நீங்க இங்கே கிட்ட வந்து உட்காருங்க.

டாக்டர், எனக்குப் பிராப்ளம் இல்லை. என் ஒய்ஃப்புக்குத்தான் ப்ராப்ளம்.

தெரியும். உங்க கிட்டே இதைப் பத்தி எக்ஸ்ப்ளெயின் (Explain) பண்ணணும். அதுக்குத்தான் பக்கத்துலே வாங்கன்னேன்.(எக்கோ கார்டியோகிராஃபைக் காட்டி (Echo Cardiograph) இதோ இங்கே பாத்தீங்களா? இவங்களுக்கு ஹார்ட்லே பிராப்ளம் இருக்கு. அதனாலே எந்த அளவுக்கு ரத்தம் தேவையோ அந்த அளவுக்கு இல்லாம இவங்க ஹார்ட் ரொம்ப குறைஞ்ச அளவு ரத்தம்தான் பம்ப் பண்ணறதாலே இவங்களுக்கு நடந்தா, படி ஏறினா மூச்சுத் திணறல், ஹார்ட்லே அடிக்கடி வலி இது போல ஏகப் பட்ட பிரச்சினைகள் வரது. ரொம்பவும் வீக்னஸ் ஏற்படறது. இந்த மாதிரி ப்ராப்ளம் இருக்கும்போது இவங்களோட பல்லைத் தொடறது நல்லது இல்லே. என்னைக் கேட்டா பல்லை விட இவங்க முக்கியமா கவனிக்க வேண்டியது இவங்க ஹார்ட்டைத்தான்.

என்ன டாக்டர்? குண்டைத்தூக்கிப் போடறேள்?

பயப்படவேண்டாம். ஒரு சின்ன சந்தேகந்தான். அதனாலே இப்ப இவங்க பல் பிரச்சினையைப் பத்தி மறந்துடுங்க. நான் உங்க ஜெனரல் ஃபிஸீஷியன் (General physician) டாக்டர் கணேசன் கிட்டே ஃபோன்லே பேசிடறேன். நீங்க அவர் கிட்டே டிஸ்கஸ் பண்ணிட்டு அவர் என்ன சொல்றாரோ அந்த மாதிரி செய்யுங்க.

சரி டாக்டர். அப்படின்னா இவ பல் பிடுங்கறதுக்கான சான்ஸே இல்லைங்கறேள்.

ஆமாம். பல்லைவிட ஹார்ட் முக்கியம். நீங்க அதைக் கவனியுங்க முதல்லே.

சரி டாக்டர்.(இருவரும் டாக்டர் கணேசனைப் பார்க்கப் போகிறார்கள்)
(டாக்டர் கணேசனின் டிஸ்பென்ஸரியில்).
டாக்டர். கார்டியாலஜிஸ்ட் ஈஸ்வரனைப் பாத்துட்டு வரோம்.

அவர் ஃபோனிலேயே விவரம் எல்லாம் சொன்னார். நீங்க பல் பிடுங்கிக்கிறது ரொம்பவும் ரிஸ்கியான சமாசாரம். அதனாலே உங்களுக்கு ஃபிட்னெஸ் (Fitness) செர்டிபிகேட் கொடுக்கறதுக்கு இல்லை.

அப்படின்னா டாக்டர் இந்தக் கோணப்பல், இந்தப் பல்வலி இதோட நான் சாகர வரையிலும் இருக்கணுமா?

பல்லை ஒண்ணும் பண்ணாம இருந்தா, அப்பப்போ வலியோட பத்து வருஷம் இருப்பீங்க. ஆனா உங்க பல்லை இப்பத் தொட்டா, அதனாலே இப்பவே உங்களுக்கு ஆபத்து வரலாம். என்ன சொல்றீங்க?

வேண்டாம். டாக்டர். வேண்டாம். இன்னும் நான் என் பேரன் கல்யாணத்தையெல்லாம் பார்க்கணும். அவனுக்கு ஒரு பையன் பிறக்கறதைப் பார்க்கணும்.

சரி!சரி!நீங்க போடற ப்ளானைப் பார்த்தா அது 50 வருஷ ப்ளான் மாதிரி இருக்கே.

டாக்டர், அவ இப்படியே எத்தனை வருஷம் இருக்க முடியுமோ அத்தனை வருஷம் இருந்துட்டுப் போகட்டும்.

அதனாலேதான் சொல்றேன் பல்லைப்பத்தி இப்போதைக்கு மறந்துடுங்கன்னு.

அப்புறம் ஹார்ட்டைப் பத்திச்
சொன்னீங்களே டாக்டர். அதுக்கு என்ன பண்றது?

ஆங்கியோகிராம் (Angiogram) எடுத்தாத்தான் நிலைமையை சரியாச் சொல்ல முடியும். ப்ளாக் இருக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு. உங்க ஹார்ட் மஸில் தான் மெயின் பிராப்ளம். இப்ப உங்களுக்குத் தேவை கம்ப்ளீட் ரெஸ்ட் தான். கொஞ்சம் கூட ஸ்ட்ரெயின் பண்ணிக்கக் கூடாது.

டாக்டர், அவ சமையல் கூட செய்யறது கிடையாது. ஆள் வெச்சிருக்கோம். அவ அனாவசியமா அலட்டிக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆங்கியோகிராம்லேகூட ரிஸ்க் இருக்குன்னு சொல்றாங்களே டாக்டர்.
எதுலேதான் ரிஸ்க் இல்லே. குழந்தை பெத்துக்கறதுலே கூட ரிஸ்க் இருக்கத் தான் செய்யறது. அதுக்குப் பயந்து குழந்தை பெத்துக்காம இருக்காங்களா? லைஃப்ன்னாலே கொஞ்சம் ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். அப்படி உங்களுக்குப் பயமா இருந்தா, நீங்க அதைப் பத்தி யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. அவசரமில்லை.

எங்க சன், டாட்டர் ரெண்டு பேரும் ஃபாரின்லே இருக்காங்க, அவங்களைக் கன்சல்ட் பண்ணிட்டு இது பத்தி டிஸைட் பண்றோம் டாக்டர்.

நல்லது.
(வீட்டில்)
வாசுவும் நல்ல வேளையா நேத்து ஃபோன் பண்ணும்போது சொல்லிட்டான் உனக்கு ஆங்கியோகிராம் (Angiogram) பண்றது ரொம்ப ரிஸ்கின்னு. அதைப் பண்ணும்போதே சில பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடறது உண்டாம். உன்னை ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம்னு சொன்னான்.

அதுதான் அவன் எங்கிட்டேயும் சொன்னான். நான் அங்கே வரணுமான்னு கேட்டான். இப்ப வந்து என்ன பண்ணப் போறான் சொல்லுங்கோ? பல்லோ பிடுங்கப் போறதில்லை. ஆங்கியோகிராமும் எடுக்கப் போறதில்லை. ரெஸ்ட் தான் எடுத்துக்கப்போறேன். அப்படி இருக்கும்போது அவன் வரது வேஸ்ட்.

நானும் சொன்னேன் அவன் கிட்டே. அவசியம் வந்து தான் ஆகணுங்கும்போது நாங்க சொல்றோம். அப்ப நீ வந்தாப் போதும்னு.

பிள்ளையாரப்பா, நான் கோணப் பல்லோட தான் இருக்கணும்னு நீ தீர்மானிச்சப்புறம் நான் எத்தனை டாக்டர் கிட்டே போய் என் பல்லைக் காட்டி என்ன பிரயோஜனம்? விதிச்ச படிதானே நடக்கும்.

என்ன பாட்டி? கடைசியிலே முறுக்கு சாப்பிட முடியாதபடி போயிடுத்தே.

விடுடா முறுக்கை. நான் எங்க பாட்டி பண்ணின மாதிரி முறுக்கை பொடி பண்ணி வாயிலே போட்டு ஊற வச்சு சாப்பிட்டுக்கறேன்.

அப்பவும் முறுக்கை விட மாட்டேங்கறேளே பாட்டி.

உன் வயசுக்கான வாலிப முறுக்கை நீ விடறியோ? எங்க மாதிரி வயசான பொம்மநாட்டிகளெல்லாம் உங்க மாதிரி முறுக்கு பண்ணிக்க முடியுமா? வெறும் அரிசி முறுக்குத்தான் பண்ண முடியும்.அந்த முறுக்கையும் நாங்க விட்டுட்டா எப்படி?

பல்கட்டிண்டு அழகா சிரிக்க முடியாதே பாட்டி. அதை நினைச்சா தாத்தாவை விட எனக்குக் கஷ்டமா இருக்கு.
விட்டுத் தள்ளு. யாரைப் பாத்தும் நான் இப்ப சிரிக்க வேண்டாம். யாரும் என்னைப் பாத்து சிரிப்பா சிரிக்கவும் வேண்டாம்.

பாட்டியே ரொம்பவும் மனசு நொந்து போயிருக்கா. நீ ஏண்டா அவளை சீண்டறே?

இனிமே அவா அவா கிருஷ்ணா ராமான்னு சொல்லிண்டு அவாஅவா வேலையை ப்பாத்துண்டு---

பாட்டி, அப்படியே கணேசா, ஈஸ்வரான்னு ------

வேணாண்டா. இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்தப் பேர்களையே ஞாபகப் படுத்தாதே. பல்லும் பவிஷூமா இருக்கற படியே இருந்துட்டுப் போறேன். யார் கண்டா? எல்லாம் நல்லத்துக்குத் தான் நெனச்சிண்டு நிம்மதியா இருப்போம். ஆனாலும் அந்த சொப்பனத்தை நினைச்சா பயமாத் தான் இருக்கு. தூக்கமே வர மாட்டேங்கறது.

நல்லது தானே பாட்டி. தூக்கமே வரல்லைன்னா இன்னொரு சொப்பனம் வந்து உங்களைப் பயமுறுத்தாது பாருங்கோ.

சரி. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் பல்பொருள் அங்காடிக்குப் போய் நீ எழுதித் தந்த சாமானை எல்லாம் வாங்கிண்டு வரேன்.

பல்லைப் பத்தி மறக்கணும்னு பாக்கறேன். இப்ப எதுக்குப் பல்பொருள் அங்காடிக்கு நீங்க போறேள்? வேறே ஏதாவது கடைக்குப் போங்கோ.
பாட்டி, பல்பொருள் அங்காடின்னா பல பொருள்களும் கிடைக்கிற கடைன்னு அர்த்தம். பல்லுக்கான சமாசாரங்க கிடைக்கிற இடம்னு அர்த்தம் இல்லை.

தெரியுண்டா எனக்கு. தமிழ்லே புலவர் செர்டிபிகேட் வாங்கினவ நான். பெரிசா எங்கிட்டே சொல்ல வந்துட்டான். இருந்தாலும் பல்லுங்கற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு அலர்ஜியா இருக்கு.

(தாத்தா பறப்படுகிறார். புறப்படும்போது வாசல் தடுக்கி விழ இருந்தார். நல்ல வேளையாகக் கதவைப் பிடித்துக் கொண்டு சமாளித்தார்)
போகும்போதே தடுக்கிறது. சகுனம் சரியில்லை. நீங்க இன்னிக்குப் போக வேண்டாம். நாளைக்குப் போனாப் போதும்.

ஒண்ணுமில்லாததற்கு எல்லாம் அமர்க்களப்படுத்தாதே.

என்ன பாட்டி? இந்தக் காலத்துலே இதையெல்லாம் பார்த்துண்டு இருக்கேள்.

பெரிய இந்தக் காலத்தைக் கண்டுட்டான். உனக்கு என்னடா தெரியும்? நீங்க கொஞ்சம ஒக்காந்து ஒரு வாய் தண்ணி குடிச்சுட்டாவது போங்கோ.

சரி. (பிறகு வெளியில் புறப்படுகிறார்.)
************

காட்சி 6

என்னடா மோகன்? ஃபோன் மணி அடிக்கிறது. என்னன்னு பாரேன்.
மோகன் ஃபோனில் பேசுகிறான்.

என்ன? என்ன சொல்றீங்க? அவர் பாக்கெட்டிலே இருந்த அட்ரஸையும் ஃபோன் நம்பரையும் வச்சி ஃபோன் பண்றீங்களா? அப்படியா? என்ன ? விழுந்துட்டாரா? முகத்துலே பலமா அடி பட்டிருக்கா? எந்த ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கீங்க? உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லியே?

ஏய் என்னடா ஆச்சு அவருக்கு? என்னவோ முகத்துலே அடி பட்டிருக்குங்கறே. ஆஸ்பத்திரிங்கறே. உசுருக்கு ஆபத்து இல்லியாங்கறே. எனக்குப் பயமா இருக்குடா. எந்த ஆஸ்பத்திரிடா?
இப்பவே அவரைப் பாக்கணும். புறப்படுடா அந்த ஆஸ்பத்திரிக்கு.

பாட்டி, தாத்தாவுக்கு உசுருக்கு எந்த ஆபத்து இல்லையாம். அதனாலே பயப்பட வேண்டாம்.

உடனே நான் அவரைப் பாத்தாகணும். (பாட்டி அழுகிறாள்)
பாட்டி . அழாதீங்க பாட்டி.

இருவரும் புறப்பட்டு ஆஸ்பத்திரிக்குச் செல்கின்றனர்.
(ஆஸ்பத்திரியில்)
என்ன ஆச்சு டாக்டர் அவருக்கு?

கீழே விழுந்ததுலே முகத்துலே கொஞ்சம் பலமா அடிபட்டிருக்கு.

எப்படி டாக்டர் விழுந்தார்?

இதோ இவங்கதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க. அவங்களைக் கேளுங்க. அவங்க சொல்வாங்க.

அம்மா இவர் ரோட்டுலே போய்க்கிட்டு இருந்தப்ப யாரோ பைக்குலே வந்த ஒரு பரதேசிப்பய இவர் மேலே மோதிட்டு கண்டுக்காம வேகமா போயிட்டான். அவர் குப்புற விழுந்ததுலே ஒரு பெரிய கல்லுலே பலமா இடிச்சுக்கிட்டதாலே அவர் முகத்துலே, குறிப்பா, வாயிலே அடிபட்டு ரத்தம் வர முனகிக் கிட்டு இருந்தார். நாங்க தான் அவரைத்தூக்கிக் கிட்டு வந்து இந்த ஆஸ்பத்திரியிலே சேர்த்து உங்களுக்கு ஃபோன் பண்ணினோம்.

ரொம்பவும் தேங்க்ஸ் அப்பா, உங்க ரெண்டு பேருக்கும்.
டாக்டர், அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லையே?

TT இன்ஜெக்ஷன் ஒண்ணு போட்டிருக்கேன். வாயிலே நல்ல அடிபட்டிருக்கு. அஞ்சாறு பல் விழுந்திருக்கு. மத்தப் பல்லெல்லாம் எந்த நிலைமையிலே இருக்குங்கறதைப் பார்க்கணும். முகத்துலே பேண்டேஜ் போட்டு விட்டிருக்கேன். நீங்க உடனே அவரை ஒரு டென்டிஸ்ட் கிட்டே காட்டியாகணும்.

அடக் கடவுளே. இதென்னப்பா இது சோதனை? நான் அவர் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே 'சகுனம் சரியாயில்லை. அப்புறமா இன்னொரு நாள் போகலாம்' னு சொன்னேன். கேட்டாரா? பகவானே, ஈஸ்வரா நான் இப்ப என்ன பண்ணுவேன்?

தாத்தா ஏதோ சொல்ல வருகிறார். டாக்டர் அவரைப் பேச வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்.

அவருக்கு ஒரு வாரம் இந்த முகவாய்கட்டையிலே ஒழுங்கா பேண்டேஜ் போடணும். உங்களாலே முடியல்லேன்னா இங்கே ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து புது பேண்டேஜ் போட்டுக்கிட்டு போங்க. இந்த மருந்து, மாத்திரையைக் கொடுங்க. டெண்டிஸ்டுக்கிட்டே காட்டின அப்புறம் அவர் என்ன சொல்றாரோ அந்த மாதிரி பண்ணுங்க.

அவருக்கு சாப்பாடு?

லிக்விட் டயட்டா ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி சாப்பிடறமாதிரி ஏற்பாடு பண்ணுங்க.

டேய், உங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி உடனே அவனை வரச்சொல்லு. இவர் இப்படிப் பண்ணினுட்டாரே. இங்கே ஒண்டியா நீயும் நானும் மேனேஜ் பண்ணறது ரொம்ப கஷ்டம்.

சரி பாட்டி.

அட பகவானே. ஏண்டா இப்படி எங்களை சோதிக்கிறே?ஆடிண்டும் வலிச்சிண்டும் இருக்கிற என் பல்லைப் பிடுங்கக் கூடாதுன்னு சொல்லி கடைசியா ஆடாம கெட்டியா இருந்த அவர் பல்லுக்கு ஆபத்துக் கொண்டு வந்துட்டியே. அவர் என்ன பாவம் பண்ணினார்? நான்தான் என்ன பாவம் பண்ணினேன்? ஒரு வாரமா அவரோடே நாயா பேயா அலைஞ்சு பல்லவன்லே இருந்து ஈஸ்வரன் வரையிலும் ஊர்லே இருந்த எல்லா டாக்டரையும் பாத்து ஒரு விதமா என் மனதை சமாதானம் பண்ணிண்டு இந்தக் கோணப்பல்லோடே வலியோ, கிலியோ எப்படியோ காலத்தை ஓட்டிடலாம்னு மனசை ஸ்திரப்படுத்திண்டு இனிமே ஆயுசுக்கும் பல் டாக்டர்கிட்டேயே போகவேண்டாம்னு நெனச்சா இப்படிப் பண்ணிட்டியே.

பாட்டி, புலம்பாதீங்கோ. நான் அப்பாவுக்கு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொல்லிட்டேன். அடுத்த ஃப்ளைட்லே வரேன்னார்.
(மறுநாள் வாசு வருகிறான்)
வாசு வந்துட்டானா?

அப்பா வந்துட்டார்.
(தாத்தா கஷ்டப்பட்டு வாயைத் திறந்து ) என்னடா வாசு? இப்பத்தான் வரயா?

ஆமாம் அப்பா. நீங்க ஸ்டெரெய்ன் பண்ணிக்காதீங்கோ. நான் எல்லாம் பாத்துக்கறேன்.

டேய் மோகன் எந்த டாக்டர்கிட்டே போகணும்?

பாட்டிக்குப் பல்லைக்காட்ட அழைச்சிண்டு போன அதே டாக்டர் பல்லவன்கிட்டே தான் அப்பா.

சரி. அவர்கிட்டேயே அழைச்சிண்டு போவோம்.

மறுபடியும் பல்லவனா? அடியைப் பிடிடா பாரதபட்டாங்கற கதையா ஆயிடுத்தே நம்ம கதை.

மறுபடியும் பல் டாக்டர், ஜெனரல் ஃபிஸீஷியன், கார்டியாலஜிஸ்டுன்னு அடுத்த ரவுண்ட் ஆரம்பம் ஆயிடுத்தா? பகவானே , முடியாதவளை இப்படிப் படுத்தறியே. சரி.என்ன பண்றது?

அம்மா, நீ சிரமப்பட வேண்டாம். நாங்க பாத்துக்கறோம்.

அவர் இப்படி இந்த நிலைமையிலே இருக்கும்போது என்னாலே எப்படிடா வீட்டிலே சும்மா உக்காந்திருக்க முடியும்? நானும் உங்களோடே வரேன்.

வேண்டாம் பாட்டி.

பரவாயில்லைடா. வந்துட்டுப் போகட்டும்.

மறுநாள் பல் டாக்டர் பல்லவனிடம் தாத்தாவை அழைத்துச் செல்கிறார்கள்.
(டாக்டர் பாட்டியைப் பார்த்து) அடேடே, போன வாரம் உங்க பல்லுக்காக உங்களைக் கூட்டிக்கிட்டி வந்தாரே. அவர்தானே இவர்.

சாட்சாத் அவரே தான் டாக்டர். எந்தப் படுபாவியோ இவரை பைக்குலே கண்ணுமண்ணு தெரியாம வந்து மோதிட்டுப் போயிட்டான்.இவர் குப்புற விழுந்து ஒரு பாறாங்கல்லுலே இடிச்சிண்டதிலே இப்படி ஆயிடுத்து. நீங்க தான் டாக்டர்....

கொஞ்சம் புலம்பாம இருங்க பாட்டி.

டாக்டர், சீக்கிரமா செக் பண்ணி என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ. டாக்டர், இவருக்கும் எனக்குப் பண்ணின டெஸ்ட் உபத்திரவங்கள் எல்லாம் வேண்டி இருக்குமா?

வயசு ஆயிடுத்து இல்லே. செஞ்சி தான் ஆகணும்.

இவருக்கும் எல்லாப் பல்லையும் பிடுங்க வேண்டி இருக்குமா டாக்டர்?

அவசரப் படாதீங்க. நான் பாத்துச் சொல்றேன்.

அம்மா, பதட்டப் படாதே. டாக்டர் பாத்து சொல்லட்டும்.-

தாத்தாவின் வாயைத் திறக்கச் சொல்லி செக் செய்கிறார்.

ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு................, பதினொண்ணு (one,two,three............eleven)
மொத்தமா கீழ்வரிசை, மேல்வரிசை ரெண்டையும் சேத்து அஞ்சு விழுந்தது போக டேமேஜ் ஆன ஆறு பல்லையும் சேத்தா
ஆறு பிளஸ் அஞ்சு யெஸ், தெட் ஈஸ் லெவன். அந்த லெவன் அதாவது பதினோரு பல்லையும் ரிமூவ் பண்ணிட்டு அதை ரீப்ளேஸ் பண்ணணும்.

சரி டாக்டர், அப்படியே செய்யுங்க.

கடைசியாக இவர்கள் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க மோகனோ தான் விளையாட்டாக அந்த டாக்டரை பல்லெவன் என்று சொன்னது உண்மையானதை நினைத்து ஒரு விதத்தில் சந்தோஷப்பட்டுக் கொண்டாலும் அவன் சந்தோஷத்தை வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை. பாட்டிக்குத்தான் வருத்தம் தன் பல்லுக்கு விமோசனம் கிட்ட வில்லையே என்று. தாத்தாவிற்கு பாட்டி மாதிரி வேறு பிரச்சினை இல்லை என்பதால் பத்து நாட்களுக்குள் புது பல் செட் கட்டப்பட்டு விட்டது. வாசுவும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். பிறகு அம்மா, அப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு மோகனிடம் தாத்தாவையும் பாட்டியையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அடுத்த ஃப்ளைட்டில் தன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான்.
பாட்டியோ நாளொரு பல்லும் பொழுதொரு வலியுமாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். இருந்தாலும் மனதில் ஒரு சின்ன சந்தோஷம் தாத்தாவிற்கு உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லாமல் தலைக்கு வந்தது பல்லோடு போயிற்றே என்று.
இப்போது தாத்தா புதுப் பொலிவுடன் காணப்படுகிறார். அவர் சிரிக்கும்போதெல்லாம் பாட்டிக்கு ஆனந்தம் ஒரு புறம், தான் அவ்வாறு சிரிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒரு புறம். தாத்தாவுக்கு பேசும்போது சற்று சிரமம் ஏற்படுகிறது. டாக்டர் எத்தனை பல் எடுத்தார் என்று கேட்டறிந்த தாத்தா டாக்டர் பல்லவன் எடுத்த பல் லெவன் என்னும்போது எதையோ நினைத்து சிரித்துக் கொண்டார்.
முற்றும்

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (26-Jun-20, 1:05 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 49

மேலே