எனக்காஅன்பு இல்லை மணிக் காட்டி
கிர்ர்ர்...கிர்ர்ர்.....கிர்ர்ர்.
கடிகாரத்தின் அலார சத்தம் என் தூக்கத்தை கலைத்தது .தூக்க கலக்கத்திலேயே எனது கை நீண்டு கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்ட அம்மாஆஆ.. என்ற சத்தம்.
டக்கென்று எழுந்து கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தேன் .பக்கத்தில் என் மகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். என் மனைவி உள் அறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். யார் கத்தியது .சுற்றுமுற்றும் பார்த்தேன்.
என்ன தேடுகிறாய் நண்பா....
குரல் வந்த திக்கை நோக்கித் திரும்பினேன் .யாருமில்லை. அலாரம் அடிக்கும் கடிகாரம் மட்டுமே அங்கு இருந்தது.
என்ன விழி பிதுங்க பிதுங்க பார்க்கிறாய் ?நான் தான் பேசுகிறேன்.
யார் ?கடிகாரமா? நீயா பேசுகிறாய்?
ஆம்! நான் தான் பேசுகிறேன்.
அது எப்படி முடியும் ?
நீ இயந்திரம் ஆயிற்றே.
ஏன் இயந்திரம் பேசாதா? உன் கையில் வைத்திருக்கிறாயே கைபேசி அது பேசவில்லையா?
நீ பேசுவது அதிசயமாக இருக்கிறது .கைபேசியில் பேச்சு வருவது அடுத்தவர் அதை வைத்து பேசுவது .ஒருவர் பேசுவதை நமக்கு அப்படியே வாங்கித் தருவது. இப்போது உன் மூலம் யார் பேசுகிறார்கள்?
யாரும் இல்லை நான் தான் பேசுகிறேன்.
சரி! எத்தனையோ அதிசயங்கள். அதில் இதுவும் ஒன்று. சொல் ஏன் கத்தினாய்?
என் தலையில் அடித்தால் கத்தமாட்டேனா?
உனக்கு வலிக்கிறதா?
வலி என்பது என்ன நண்பா? உடலில் அடிபட்டு அதனால் ஏற்படும் தாங்கமுடியாத உணர்வு தானே .அதைத்தானே வலிஎன்கிறாய்.ஆனால் உடலில் ஏற்படும் வலியை விட உள்ளத்தில் ஏற்படும் வலி பெரியது தெரியுமா?
புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது கடிகாரத்தையே பார்த்தேன்.
ஏன் அப்படி பார்க்கிறாய்?
நீ சொல்வது புரியவில்லை என்றேன்.
உனக்கு என்ன புரியும் சொல் என்னை பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறாய். என்னைப்பற்றி உனக்கு புரியுமா?
இது தெரியாதா சாவி அல்லது பேட்டரி போட்டால் இயங்குவாய்.மணி காட்டுவாய். அலாரம் அடித்து எங்களை எழுப்புவாய் .வேறென்ன?
பார்த்தாயா ?உனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறாய் .அனைவரும் அப்படியே குடும்பத்தில் அவர் அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே தெரிந்து கொண்டு அதுவே ஆரம்பம் முடிவு என பேசிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வேறு என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாய்?
சொல்கிறேன் கேள் .1500 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பீட்டர் ஹெல்என்பவரே என்னை போன்ற என் மூதாதையர்களை பெற்றெடுத்த தாய். ஒவ்வொரு முறையும் நாங்கள் பிறப்பதில்லை. மூலம் ஒன்றே .அதிலிருந்து பலவித கூறுகளாக பிரிக்கப்பட்டு சிறியதாக குட்டையாக வட்டமாக நீளமாக செவ்வகமாக மனிதனால் கற்பனை செய்ய முடிந்த வடிவங்களில் எங்களை வடித்தார்கள்.எத்தனை வடிவங்கள் எடுத்தாலும் எங்களது இதயத்துடிப்பு டிக் டிக் டிக் தான்.மனிதனின் இதயத் துடிப்பை போலவே.
உண்மைதான். நீ சொல்வது .எந்த நாட்டு மனிதனாக இருந்தாலும் இதயத்துடிப்பு ஒன்றுதான் லப்டப் லப்டப் லப்டப்.
அதனால் என்ன பயன் நண்பா .இதயத்துடிப்பு ஒன்று போல இருந்தாலும் எண்ணங்களும் செயல்களும் வேறு வேறாகத் தானே இருக்கிறது.
அப்படித்தான் இருக்கும். நீங்கள் இயந்திரங்கள். உணர்ச்சி அற்றவர்கள் .நாங்கள் உணர்ச்சி உள்ளவர்கள் .அதை புரிந்து கொள்.
ஆமாம் ஆனால் பிறர் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள்.
யாருடைய உணர்ச்சிகளை நான் புரிந்துகொள்ளவில்லை என்கிறாய் கடிகாரமே.
அதை நான் சொல்ல வேண்டுமா ?உன்னை பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி வளர்த்த தாயையே நீ புரிந்து கொள்ளவில்லையே. என்னையா நீ புரிந்து கொள்ளப் போகிறாய் ?கடிகாரமே. கண் கலங்கியது. மௌனம் நிலவிய நொடிகளில் மனதில் பல எண்ணங்களின் சிதறல்கள்.
நீ தாம்மா இந்த பொண்ணை கட்டி வைச்சே. அப்புறம் அவ இப்படி செய்யறா அப்படி செய்யிரான்னு தினமும் புகார் சொன்னா நான் என்னதான் பண்றது.
இல்லப்பா பாலு. நான் புகார் சொல்லலை .நீயும் அவளும் நல்லா சந்தோஷமா இருக்கணும். தினமும் ராத்திரியில் உன் படுக்கை அறையில் இருந்து சண்டை போடுற சத்தம் வந்துகிட்டே இருக்கு டா ஏன்னு கேக்குறேன்?
தாய் கேடக கோபம் வெடிக்க பாலு கத்தினான் .எல்லாம் உன்னாலதாம்மா.நீ இங்கு இருக்கிறது அவளுக்குப்புடிக்கல .தனிக்குடித்தனம் போகனும்ங்கிறா.
இங்க பாருப்பா! சொந்த வீட்டை விட்டு நீங்க எங்கும் போக வேண்டாம். நான் வேணா எங்காவது போய்க்கிறேன் .நான் வாழ்ந்த கட்டை.என்னை பார்த்தாலே அவளுக்கு புடிக்கல. ஏன்னே தெரியல.
இல்லேம்மா .தப்பா எடுத்துக்காதீங்க அம்மாஒரு முதியோர் இல்லத்தில் கேட்டுட்டு வந்து இருக்கேம்மா.
சரிடா நான் அங்கேயே போறேன். உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை .நீயும் உன் மனைவியும் குழந்தைகளோட சந்தோஷமா இதுக்குறதுதாண்டா அம்மாவுக்கு சந்தோஷம். என்ன பத்தி கவலை படாதே .
என்ன சார் பலமான யோசனை. கடிகாரம் அழைக்க மௌனம் கலைந்து கடிகாரத்தைப் பார்த்தான். புரியுது சார் உங்க அம்மாவை நினைத்து வருத்தப்படுறீங்களா? இதைத்தான் அப்பவே சொன்னேன் .
என்ன சொன்னே?
பெற்ற தாயின் உணர்வுகளை புரிஞ்சிக்காம அவரையும் எந்திர மாகத்தானேபார்த்தே . அம்மாவுக்கும் உன் மனைவிக்கும் அன்பை வளர்த்து இருக்க வேண்டாமா?
இயந்திரமான உனக்கு அன்புன்னா என்னன்னு தெரியுமா?
எனக்கா தெரியாது. அன்பு என்பது இயந்திர த்திற்கு மட்டுமல்ல .கல் மண் செடி கொடி என எதன் மீது அன்பு செலுத்தினாலும் அவையும் உன் வசப்படும் என்பது தெரியுமா? எனது அண்ணன் ஒருவன் இந்த நாட்டின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் இடுப்பிலே தொங்கிக் கொண்டு தன் கடமையை செய்து கொண்டிருந்தார் அவர் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் டிக் டிக் என்று ராம ஜபம் ஜபிப்பான்.ரகுபதி ராகவ ராஜாராம் என அவர் பாடும்போது இவனும் தன் துடிப்பால்மெட்டு கட்டுவான் .எப்போதும் அவரது உடலோடு உடலாக ஒட்டியே வாழ்ந்தவன் என் அண்ணன் .எனக்கா தெரியாது.
தொண்டை கரகரத்தது. கண்ணீர் கண்களில் ததும்பி நின்றது. கடிகாரம் கரகரப்பான குரலில் சொன்னது .நண்பா 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி மகாத்மா காந்தி பிரார்த்தனை முடிந்துவந்தார். வணங்கிய கையோடு கோட்சே தனது கைத்துப்பாக்கியால் பாபுஜியின் நெஞ்சை நோக்கி சுட ராம் ராம் ராம் என மும்முறை கூறியபடியே கீழே சாய்ந்தார்.
மடியில் தொங்கிக்கொண்டிருந்த என் அண்ணன் சம்பவத்தை நேரடியாக பார்த்து பதறி பயந்து நடுநடுங்கி கீழே சாய்ந்தான் அவருடனே. அண்ணலின் இதயத் துடிப்பு எந்த நேரத்தில் நின்றதோ அதே நேரத்தில் எனது அண்ணனின் இதயத்துடிப்பான டிக் டிக் என்ற துடிப்பும் நின்று போனது .இயந்திரம் இயந்திரம் என்கிறாயே அந்த இயந்திரமான எனது அண்ணன் மீது அண்ணலின்அன்பு எத்தகையதாக இருந்திருந்தால் இருவரின் இதயதுடிப்பு ம் ஒன்றாக நின்றிருக்கும். பெருமூச்சு ஒன்று விட்டுவிட்டு அமைதியானது கடிகாரம்.
மனம் முழுவதும் பாரமாக இருந்தது பாலுவிற்கு .அண்ணலை போல அனைத்திடமும் அன்பு செலுத்த வில்லை என்றாலும் அன்னையிடமும் தாரத்திடமும் அன்பை செலுத்தி இருக்கலாமே என மனம் சொல்வது போல் இருந்தது.
என்னங்க அலாரம் அடித்து எவ்வளவு நேரம் ஆச்சு இன்னுமா எழுந்திருக்கலே. ஆபீஸ் போக வேண்டாமா? மனைவி தட்டியெழுப்ப விழித்துக்கொண்ட பாலு குளிக்கச் சென்றான் அம்மாவை அழைத்து வரும் முடிவோடு...