காதல் எனும் கோரோனா
காதல் எனும் கோரோனா
=========================================ருத்ரா
உன்னை
நினைத்து தினமும் வாடுகிறேன்.
அன்றொரு நாள்
ஒரு புன்னகையை என் மீது
வீசிய பிறகு
அந்த ரோஜாப்பூ
ஏன் முகமே காட்டவில்லை.
எப்போதும் இந்த முட்களைத் தானா
நான் தரிசிப்பது?
எங்கு பார்த்தாலும்
முக கவசங்களின் கடல்.
அதில் தினமும் நீந்துகிறேன்.
அதில் எப்படி என்னை நீ கண்டுபிடிப்பாய்
என்று தானே கேட்கிறாய்?
உன் இரண்டு கண்களின்
மணிச்சுடர்
எனக்கு மட்டுமே வெளிச்சம் காட்டுவது.
உன் இரண்டு கண்களின்
இமைத்துடிப்புகள்
என் இதயத்து நரம்புகளில் மட்டுமே
யாழ் மீட்டும்.
உன் கண்களின் கருவிழிகள்
எனக்குள் மட்டுமே
கலங்கரை விளக்குகளாக சுழலும்.
மறைந்தே போய்விடும் வரை
எந்த விளிம்பிலும் நான்
விழும்படி
துரத்தப்பட்டாலும்
உன் விழிகள் என் இறக்கைகள் அல்லவா!
உன் கண்களில் எத்தனை பசி?
உன் கண்களில் எத்தனை கேள்விகள்?
பதிலை எதிர்பார்க்காத கேள்விகள்.
அவற்றில் சொற்களின்
நெருப்பு உராய்தல்கள் எத்தனை எத்தனை?
அவற்றில்
திராட்சைப்பழத்தோட்டங்கள்
திகட்டாத இனிப்பை உள்ளே
பிழிந்து வைத்திருக்கின்றன!
உன் கண்கள் எனும்
மயிற்பீலிகளில்
இந்த வானம் மூச்சு முட்ட மூச்சு முட்ட
வருடிக்கொடுக்கின்றன.
பிறவிகள் எனும் கணித இனிஃபினிடிகள்
உன் பார்வை விழுதுகளில்
விழுந்து கிடக்கின்றன
உதிர்ந்து கிடக்கும் நாவற்பழங்களாய்!
உலகம் முழுவதும்
தண்ணீரால் மூடப்பட்டு
"வாட்டர் வர்ல்டு" திரைப்படம் போல்
பயமுறுத்தினாலும்
உன் கண்கள் மட்டுமே
என் நுரையீரலுக்குள்
நின்று போகாத
இயக்கமாய் என்னை உலவச்செய்யும்.
........................................
................................
வெண்டிலேட்டரை அப்புறப்படுத்திவிட்டார்கள்.
அவன் துடிப்புகள் மட்டும்
அங்கே மிச்சமாய் இருந்தன.
எந்த இடமோ? எந்த குழியோ?
அவன்
அந்தக் கொரோனாவைக் கைப்பிடித்துக்
கிளம்பி விட்டான்.
================================================