வேனிப் பிரான்

பெருமான் மன்மதனையும் முப்புரத்தையும் எரித்தான். எனினும், அவன் உடலில் ஒருபாதி உமையாளுடையதல்லவா? அவன் செய்ததெல்லாம் தன்பத்தினியின் துணையினைக் கொண்டேதான் அல்லவோ? என்கிறார் கவிஞர். சிவன் செயலில் சக்திக்கும் சரிபாதி பங்கு உண்டென்பது உண்மைதானே!

நேரிசை வெண்பா

சித்தசனை முப்புரத்தைச் செந்தழலாய் வீழவொரு
பத்தினியைக் கொண்டெரியப் பண்ணினான் - நித்தம்
மறையோத வீற்றிருக்கும் மண்டலமென் றில்லைப்
பிறைசூடும் வேனிப் பிரான். 150

- கவி காளமேகம்

பொருளுரை:

“தில்லை நகரத்திலே வீற்றிருப்பவனும், இளம்பிறை சூடியவனும், செஞ்சடையினை உடையவனுமாகிய பெருமான் மன்மதனையும் திரிபுரத்தையும் அவை செந்தழலால் எரிந்து விடும்படியாக ஒப்பற்ற தன் பத்தினியைத் துணைக்கொண்டே செய்தனன். அப்படிப்பட்டவனுக்கு நாளும் மறையோத வீற்றிருக்கின்ற சிறப்புத்தான் எதற்காகவோ? அது வேண்டாததே என்றதாம்’

அவளின் துணையைக் கொண்டே அவன் அந்தச் செயல்களைச் செய்திருக்க, அவளை போற்றாமல் அவனை மட்டுமே போற்றுவது முறையன்று; ஆதலின் போற்றுதல் அவனுக்கு மட்டும் எதற்காகவோ? துணைநின்ற அவளையே போற்றுவோம் நாம் என்கிறார் கவிஞர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jul-20, 4:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே