சுகமான தூக்கு

வாக்குறுதி மாவெடுத்தெம் வாசலிலே கோலமிட்டு
வாவெனவே வரவேற்கும் கூட்டம் – மக்கள்
மூக்குடைப்ப ரெனும்போது முக்காடுக ளிட்டுவாயை
மூடியெடுத் திருக்குமே ஓட்டம்
**
சாக்கடையாம் அரசியல் சாசனத்தை மாற்றுவதாய்
சாகசங்கள் செய்தெமக்குக் காட்டும் – சொந்த
நோக்கமதை நிறைவேற்ற சூசகமாய் மக்களிடம்
நுட்பமுடன் இலவசம் நீட்டும்
**
போதைபொருள் விற்பதிலே புகழ்பெற்றோர் கைகளுக்குப்
போட்டிடுவோம் கைவிலங்கு என்பர் – பின்னர்
வாதைதரு வாரவரின் வாசலதன் பின்கதவை
தட்டுமிவர் அவருக்கு நண்பர்,
**
தொழிலாளர் சம்பளத்தை துரிதமாய் கூட்டுவதாய்
துடிப்புடன் நடிப்பாரே பாரீர் – பின்னர்
விழிமூடி தம்வழியில் தாம்போகநம் கேள்விக்கு
விடைதானும் பகர்வாரோ கூறீர்
**
இனமத ஒற்றுமையை எங்களாலே மட்டுந்தான்
இந்நாட்டிலே மேம்படுத்த முடியும் – என்றே
இனமத வேற்றுமையை இயல்பாகத் தூண்டிவிட்டு
இரக்கமற்றுத் பறக்கவிடும் கொடியும்
**
நாற்காலியில் அமர்ந்திட நம்மிடையே பகைமையை
நல்லபடி உருவாகும் திட்டம் – வகுத்து
ஏற்பாரெனும் நம்பிக்கையை இதயத்தில் வைத்திருக்கும்
இவர்பின்னே நாமிடுவோம் வட்டம்
**
குனிந்தேதான் நாமுழைத்தும் குந்துதற்கு வீட்டினிலே
குத்துக்கட்டை ஒன்றுகூட இல்லை – இங்கோ
குனியாமல் ஐந்தாண்டுக் கொருமுறை யுழைப்போர்க்கோ
கோடிகோடி சொத்துசுகம் எல்லை.
**
அரசியல் தொழிலாளர் அளவற்ற சம்பளத்தால்
அதிசொகு சுவாழ்க்கையை வாழ – நாட்டில்
அரிசிக்கும் பருப்புக்கும் அலைகின்ற வர்க்கங்கள்
அனுதினம் பட்டினியால் வீழ.
**
ஒருசாரர் வாழ்வதற்கும் ஒருசாரார் வீழ்வதற்கும்
உருவான சட்டமதன் ஓட்டை – தன்னை
இருசாரார் தானினைந்து ஏற்றபடி அடைக்காமல்
இடுகின்றோம் மென்மேலும் (vote) ஓட்டை
**
இடுகின்ற வாக்கெடுத்து எம்மைதின மேமாற்றிட
இருப்போர்க்கே இடலாமோ வாக்கு – அது
சுடுகாடு செல்வதற்கு சுயமாக நம்கழுத்தில்
சுகமாக இடுகின்ற தூக்கு
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Jul-20, 1:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 98

மேலே