சாதிதீ

சமயம் பிரித்த இம்மானுடத்தை,
சாதியும் சிதைத்தது பல கூறாய்.
இனங்கள் பெருகியது.
குணமும் குன்றியது .

மனிதனை இணைக்க வந்த
மொழிகள்,
மாறாக, பிணக்குக்கு வழி
மொழிகிறது.

படிக்காத விலங்கு மனதில்
படியாது இந்த வேறுபாடு.
படித்த மனிதா, நீ மட்டும் ஏன்
படியாத விலங்காய்
வீழ்ந்து விட்டாய்?

சாதி நான் பார்ப்பதில்லை என்று
சாதிக்கும் மனிதர்களே, நீங்கள்
சாதியாலே அடித்துச் சாயும்
சாத்திரத்தைக் கற்றதெங்கே?

இல்லாத சாதியை இழுத்து வந்து
பொல்லாப்பு தேடும் புல்லர்களே,
உயிர் பிழைக்க உன் உடலில்,
குருதி ஏற்றும் வேளை,
குருதியின் சாதி நீ பார்ப்பதில்லை.
அதன் சந்ததியும், சரித்திரமும்
சத்தியமாய் நீ கேட்பதில்லை.

துவளும் போது ரத்தத்தின் சாதி
பார்ப்பதில்லை.
வாழும் போது மட்டும் சாதியால் நீ
சாவதேன்?

புழுக்கம் நிறைந்த மனதில்,
முழுக்க முழுக்க ஓர் ஆசை.
அந்த மரம், செடி, கொடி போல,
அதன் தன்மை மாறாமல்,
அதுவாய்ப் பிறந்து,
அதுவாய் வாழ்ந்து,
அதுவாய் மடிவது போல்,
மனிதனாய்ப் பிறந்து,
மனிதனாய் வாழ்ந்து
மனிதனாய் மடியும் நாள்
மலர்வது எந்நாளோ?


ச.தீபன்.
94435 51706.

எழுதியவர் : தீபன் (11-Jul-20, 10:42 am)
சேர்த்தது : Deepan
பார்வை : 148

மேலே