முதுமொழிக் காஞ்சி 94

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நிற்றல் வேண்டுவோன் தவஞ்செய றண்டான். 4 தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நித்தியமாகிய முத்தியின்பத்தில் நிலைபெற்றிருத்தலை விரும்புகின்றவன் தவஞ்செய்தலை ஒழியான்.

விளக்கம்:

உடல் பொருள் முதலியன நிலையில்லாதவை ஆதலால் முத்தியின்பத்தில் நிலைபெற்றிருத்தலை நிற்றல்' என்றார்.

தவமாவது 'மனம் பொறிவழி போயது நிற்றற் பொருட்டு விரதங்களான உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியிலும் பனியிலும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வருந் துன்பங்களைப் பொறுத்துப் பிற வுயிர்களை ஓம்பல் ஆகும்.

தவஞ்செய் வல்லார்க்கு அதனால் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ஞானமிக்க அளவிலே பிறப்பு வீடுகளின் உண்மையுணர்ச்சி உண்டாகும். ஆகையால் 'நிற்றல் வேண்டுவோன் தவஞ்செய றண்டான்' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-20, 1:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே