சூளுரைப்போம்

சூளுரைப்போம்

கொரோனா அவதாரத்தில் மரண அரக்கன்
முற்சந்தியில் குத்தவைத்துக் காத்து நிற்கிறான்
இயற்கை அழித்து மனிதம் துறந்தமைக்கு
இதுதான் தண்டனை என்று எச்சரிக்கிறான்

இச்சகம் சூழ் தேசங்கள் யாவும்
அச்சத்தின் உச்சத்தில் முடங்கிப்போயின
காற்றும் நீரும் கால்வயிற்றுக் கஞ்சியுமே
சொச்சமாய் போதுமென்று இடித்துரைத்தன

வாகன உரசலின்றி விரக்தியில் சாலைகள்
மயான அமைதியில் பெரும் தொழிற்சாலைகள்
கண்ணாடித் தெளிவானது காற்றலை
கண்ணுக்குப் புலனானது கயிலைமலை

பாய்ச்சல் பதுங்கல் பறத்தல் யாவையும்
இச்சையாய் இன்று திரிகின்றன
இம் மாபெரும் பிரபஞ்சம் எமக்கும் உரிமையென
உச்சந்தலையில் அடித்து சொல்கின்றன

மிச்சமீதியுள்ள உயிர்க்கோளம் நிலைக்க
திட்பமாய் அனைவரும் சூளுரைப்போம்
அச்சமின்றி அடுத்தத் தலைமுறை வாழ
பசுங்கன்றுகள் நட்டு உயிர் காப்போம்!

எழுதியவர் : வை.அமுதா (16-Jul-20, 5:19 pm)
பார்வை : 55

மேலே