அழகு சொல்ல வார்த்தையில்லை
***************************************************************
வண்ணத்துப் பூச்சியே
வண்ணத்துப் பூச்சியே
அருகினில் வாராயோ!
என் அருகினில் வாராயோ..!
உன் சிறகுகள்
வர்ணம் பூசிய தெப்படி
இரகசியம் கூறாயோ?
மெல்ல இரகசியம் கூறாயோ..!
வானவில்லில் கூடு கட்டி
வாழ்ந்து வந்தனையோ?
இல்லை
வாசல் தோறும்
வர்ணக் கோலம்
புரண்டு வந்தனையோ?
உன் காதலன்தான்
ஒவியனோ தீட்டிவிட்ட
வர்ணங்களோ?
இல்லைக்
காதலனைக்
கண்டு வர
நீ செய்த ஒப்பனையோ?
வண்ண வண்ண
மலர்த் தாவி
ஒட்டிக் கொண்ட வர்ணங்களோ?
இல்லை உன்
எண்ணங்களில் வாழுகின்ற
கவித்துவத்தின் காட்சிகளோ?
ஆயிரம் வண்ணப்
புடவைகளும்
உந்தன் அழகினுக்கு
நிகரில்லை!
உயிருள்ள ஓவியமே
அழகு சொல்ல வார்த்தையில்லை!
உன் அழகு சொல்ல வார்த்தையில்லை!
***************************************************************
பா வகை: கலித்தாழிசை
***************************************************************