புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 31---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௩௧
301. உன் வீட்டு வாசலை இன்று கூட்ட மறந்தால்
நாளை வீடு குப்பையாகும்
அதுபோல தான் உன் மனமும் வாழ்க்கையும்.
302. விட்டுக் கொடுத்து வாழ் இல்லை என்றால் விட்டு விலகி வாழ்
உன் வாழ்க்கையில் பாதிப் பிரச்சனைகள் குறைந்துவிடும்.
303. பறவையின்றிக் காடில்லை காடின்றி நீரில்லை
நீரின்றிச் சேறில்லை சேறின்றிச் சோறில்லை
மனிதா இவையின்றி நாளை நீயில்லை.
304. மிருகம் தன் பசிக்காக மற்ற விலங்குகளை வேட்டையாடுகிறது
மனிதன் தன் சந்தோசத்திற்காக மற்றவர்களை வேட்டையாடுகிறான்.
305. வீட்டு வாசலில் பறவைகள் காத்திருப்பது போல்
நாட்டின் வீதிகளில் மனிதர்கள் இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்
ஒரு வேளை உணவுக்கு.
306. துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்குக்
தூக்கம் என்பது ஒவ்வொரு இரவிலும் காலம் கடந்தே கிடைக்கிறது.
307. சாறு பிழிந்த எலுமிச்சம் பழமாய் வீதியில் தொழிலாளி
அந்தச் சாறை உறிஞ்சிக் குடித்துக் கோபுரத்தில் முதலாளி.
308. உன்னைச் சுற்றி சூழ்ச்சி மேகங்கள் சூழ்ந்து கொண்டே இருக்கும்
நீ விழித்துக் கொள்ளாத வரை உனக்கு விடியல் கிடைக்காது.
309. உனக்கு ஒரு வேலை நடக்க வேண்டும் என்பதற்காக
ஒருவரின் புகழ்பாடி குணிந்து நடக்காதே
அதையே நீ ஒவ்வொரு நாளும் பின்பற்ற நேரிடும்.
310. வழி தடுக்கும் முள்ளில் இருக்கின்ற பயம்
வலி கொடுத்த முள்ளில் இருக்காது.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..