மாயக்கண்ணாடி

***************************************************************************

உண்மைதனை உரைத்திடுவாய்
உள்ளதை உள்ளபடிக் காட்டிடுவாய்
என்று நம்பித்தானே
உன் முன்னால் வந்து நின்றோம்

ஆனால்..
நீ செய்திடும் வேலைகளோ
அந்த சூனியக்காரியின்
மாயக்கண்ணாடியையும் விஞ்சி நிற்கிறதே!...

அன்பும் அழகும் அறிவும்
ஒருங்கே கொண்ட​ பெண்ணொருத்தி
அலங்கரித்து உன்முன் வந்தால்
அன்பையும் அறிவையும் கபளீகரம் செய்துகொண்டு
தான்தான் பேரழகு என்னும் கர்வத்தை
அவளுக்கு நீ பரிசளிக்கின்றாய்.

தகுமா இது?

சிவந்த​ மேனிதான் உயர்வு அழகு
என்பது போன்ற​ ஒரு படிமத்தை
உன்முன் நிற்போருக்குள் ஏற்படுத்திவிடுகின்றாய்..
விளைவு..
கருப்புகள் இங்கே காலில் மிதிக்கப்பட்டு
கொல்லப்படும் கொடுமையைப் பார்​..

கருங்குயிலும் அழகுதான் இளமையிலே..
கருப்பென்ன​ சிவப்பென்ன முதுமையிலே..
சொல்வதில்லையா அவர்களுக்கு?
சிவப்பு தோலுக்குள்ளும் மறைந்திருப்பது
இரத்தமும் சதையும்தானே..
இந்த​ உண்மைதனை ஏனோ அவர்களுக்கு
நீ வேண்டுமென்றே மறைத்துவிடுகிறாய்..

நகைகள் கொண்டு அலங்கரித்து
உன் முன் வருவோர்க்கு
பெருமை என்னும் மயக்கத்தைப் பரிசலிக்கின்றாய்..
மண்ணில் விழுந்தாலும் மதிப்பு குறையாததால்
அந்த​ நகைகள் வேண்டுமானால் பெருமைப்படலாம்.
மண்ணாய் போகும்
உனக்கு வீண்பெருமை எதற்கென்று
ஏன் நீ கேள்வி கேட்பதில்லை?

கொஞ்சமும்​ சரியில்லை..

நரை கண்டு தோல் சுருங்கி
ஆறுதலுக்காக​ உன்முன் வருவோர்க்கு
கவலையையும் ஏமாற்றத்தையுமே பரிசலிக்கின்றாய்.
அரசனோ அறிஞனோ
அழகனோ அழகியோ
முதுமையும் மரணமும் எவருக்கும் விதிவிலக்கல்ல​
என்ற​ உண்மையை
ஏன் நீ அவர்களுக்கு உணர்த்துவதில்லை?

நிலையான​ வாழ்க்கையிது
என்ற​ பொய்யான​ பிம்பத்தை
உன்னிடம் வருவோர்க்கு தருவதால்தான்
உனக்கு நிலைக் கண்ணாடி என்று பெயரிட்டனரோ?..

பைத்தியக்காரத்தனம்!

*
*
*

மன்னிக்க​ வேண்டும்..

உள்ளத்தைக் காட்டிடும் சக்தியது உனக்கில்லை
உண்மைதனை நன்கு நானறிவேன்.
ஆயினும்
மனிதர்யாம் செய்யும் தவறுக்கு யார்மீது பழிபோட
ஆற்றாமையால்
ஊமையாம் உன்மீது பழிபோட்டேன்..

நானும் மனிதன்தான்..


***************************************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (23-Jul-20, 4:38 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
Tanglish : maayakkannaadi
பார்வை : 374

மேலே