நலங்கள் நல்கிடவே
ஆடி பிறந்ததும் அன்னையைப் போற்றி அகங்குளிரக்
கூடி யிருகரம் கூப்பி வணங்கிக் குலவையிட்டுப்
பாடி யழைத்தால் பரிவுடன் கேட்டுப் பரவசத்தில்
நாடி வருவாள் நமக்கு நலங்களை நல்கிடவே !
மஞ்சள் முகத்தில் மங்கலப் பொட்டு மலர்ந்திருக்கக்
கொஞ்சும் சிரிப்புடன் கோல விழிகளும் குளிர்ந்திருக்க
நெஞ்ச முருகி நெகிழ்ந்து தொழுது நினைப்பவர்க்குத்
தஞ்ச மளித்துத் தயவுடன் காத்திடும் தாயவளே!
கால்களில் தண்டை கலகல வென்று கவியிசைக்கச்
சேல்விழிப் பார்வை செறிவா யருளைத் தினம்வழங்கப்
பால்முகப் புன்னகை பாச வுணர்வைப் பரிசளிக்க
நால்வரும் பாடிய நாயக னோடுறை நாயகியே !
வளைகள் குலுங்க வலம்வரும் செவ்விய மாதரசி
திளைக்க திளைக்கச் செவிக்கமு தீந்திடும் தேனரசி
களைப்பை விரட்டிக் களிப்பை யளிக்குங் கலையரசி
ஒளிருஞ் சுடர்தனில் ஓவிய மாக உயிர்ப்பவளே !
இடையொடு மேகலை இன்பந் ததும்ப இணைந்திருக்கச்
சடையினிற் சூடிய சம்பங்கிப் பூச்சரம் தான்மணக்கக்
கடைவிழி யாலே கரோனாவை ஓட்டிக் கருணையுடன்
துடைத்திடு வாளே துயர்தனை நாமும் சுகம்பெறவே !
கூழினை யூற்றக் குடித்து மகிழ்ந்து குளிர்ந்திடுவாள்
தோழியைப் போல்நம் சுமைகளைத் தோளில் சுமந்திடுவாள்
வாழுமிப் பூமியை வாட்டிடும் நுண்மியை மாய்த்திடுவாள்
ஏழுல கெங்கு மிசைந்தே நிறையு மிவளருளே !!
சியாமளா ராஜசேகர்