எதுவரையில் போகும் இது
சீனத்தில் பிறப்பெடுத்த தீநுண்மி உரிமையுடன்
தேகம் தீண்டும் !
ஊனுடம்போ(டு) உறவாடி உலகெங்கும் தான்பரவி
உச்சம் எட்டும் !
மானுடர்க்குச் சவால்விட்டு மாசற்ற மேனியையும்
மாய்த்துச் சாய்க்கும் !
நானென்றே மார்தட்டும் வல்லரசு நாட்டினையும்
நடுங்க வைக்கும் !
காசினியைச் சுற்றிவந்து கட்டுக்குள் அடங்காமல்
கலங்கச் செய்யும் !
நாசிவழி தான்நுழைந்து நச்சென்று தொண்டைகவ்வி
நலத்தைக் கொய்யும் !
நேசிக்கும் உறவுகளை நேர்சென்று காணாத
நிலைக்குத் தள்ளும் !
பூசிக்கும் கடவுளையும் போய்வணங்க வியலாமல்
பூட்டச் செய்யும் !
தந்திரமாய்த் தொட்டவுடன் தயங்காமல் சட்டென்று
தாவிக் கொள்ளும் !
முந்திவந்து சளிஇருமல் மூச்சிறைப்பைப் பரிசளித்து
மூச்ச டக்கும் !
கந்துவட்டிக் காரன்போல் கழுத்தழுத்தித் துடிக்கவைக்கக்
காத்தி ருக்கும் !
அந்தகனாய் உயிர்சுருட்டும் ஆவலுடன் தொடர்ந்துவந்தே
ஆட்டம் போடும் !
அனைவரையும் அச்சமின்றி அதனோடு பழகிவாழ
அரசு சொல்லும்!
தனித்திருந்து விழித்திருந்தும் தைரியமாய்த் தானிருந்தும்
தவிப்பே மிஞ்சும்!
மனவழுத்தம் காரணமாய் மருத்துவரை நாடுதற்கும்
மனமே அஞ்சும்!
இனியென்று நம்வாழ்வில் இயல்புநிலை திரும்புமென
ஏங்க வைக்கும்!
விடக்கிருமி இரக்கமின்றி விழிகட்குப் புலப்படாமல்
வேட்டை யாடும்!
முடுக்கிவிட்ட இயந்திரம்போல் முள்முடிநுண் தொற்றிஃது
மோதிப் பார்க்கும்!
குடும்பத்து விழாக்களிலும் கூடமுடி யாதுமனம்
குமைய வைக்கும்!
தொடரிழப்பால் படுந்துயரைச் சொல்லியழ வியலாமல்
துக்கம் கூட்டும்!
அழகராற்றில் இறங்கவில்லை ஆலயத்தேர் ஓடவில்லை
அகம்க சிந்தோம் !
உழைப்பதற்கும் முடியாமல் ஊரடங்கால் வீடடங்கி
உள்ளம் வேர்த்தோம் !
பிழைப்பதற்கே வழியில்லா பெரும்பாடு படும்வறியோர்
பிதற்றல் கண்டோம் !
இழப்புகளால் கவலுற்று இரவுபகல் தூக்கமின்றி
இதயம் நொந்தோம் !
அப்பப்பா என்செய்ய அதிரவைக்கும் கொரொனாவை
அழிப்பார் யாரோ ?
தப்பாட்டம் போட்டிங்கே தலைதெறிக்க அலைகிறதே
தடுப்பார் யாரோ ?
நிப்பாட்ட வியலாமல் நிம்மதியும் தொலைகிறதே
நெறிப்பார் யாரோ ?
எப்படியும் ஒடுக்கிவிட இவ்வுலகே துடிக்கிறதே
எரிப்பார் யாரோ ?
உதவிசெய நினைத்தாலும் உயிர்பயத்தால் உறவுகளை
உதறச் செய்யும் !
கதிகலங்க வைக்குமிதைக் கனவினிலே நினைத்தாலும்
கத்தத் தோன்றும் !
எதுவரையில் போகுமிந்த இடர்த்தொற்றின் நச்சாட்டம்
யாரைக் கேட்க ?
அதுவரையில் இறைவாவுன் அரவணைப்பில் எமையிருத்தி
அமைதி தாராய் !!
சியாமளா ராஜசேகர்
( கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களின் தலைமையில் பைந்தமிழ்ச் சோலை இலக்கியக் கூடல் இணையவழிக் கவியரங்கில் வாசித்த என் கவிதை ! இலந்தை ஐயா அவர்களுக்கும் , வாய்ப்பினை நல்கிய பாவலர் அவர்களுக்கும் , இந்த ஏற்பாட்டைச் சிறப்பாகச் செய்த அன்புமகன் விவேக் பாரதிக்கும் மனம் நிறைந்த நன்றி )