நவரச நாடகம் வாழ்க்கை

சிலநேரம் பூரித்து மனம் மகிழ்வில் திளைக்கிறது
பலநேரம் புலம்பி அழுது நனைகிறது

சிலநேரம் இதழ்கள் புன்னகை பூசுகிறது
பலநேரம் வெதும்பி வெறுப்பை வீசுகிறது

தானாய் உறுதி கொண்டு உள்ளம் எழுகிறது
தானாய் துவண்டும் பள்ளத்தில் வீழ்கிறது

பலநேரம் இயந்திரமாய் உடல் சுழன்று இயங்குகிறது
சிலநேரம் சக்தியற்று சடலமாய் சாய்கிறது

மனம் தனக்குத்தானே மண்டியிடுகிறது
இறுமாந்து ஏதேச்சையாய் பின் ஆணையிடுகிறது

பனித்து பார்வையில் கண்டதற்கு பரிவுகாட்டுகிறது
சினந்து செவிபடும் யாவைக்கும்
சீறி விழுகிறது

தவித்து தவமாய் அன்பு விழைகிறது
சலித்து சவமாய் பின்னர் விலகுகிறது

ஏன் நமக்குள் இத்தனை மாற்றம்...?
எதற்காய் இத்தனை எதிரெதிர் சிந்தனைகள்..?
எப்படி நம்மை நாம் மாற்றுவது...?
ஏதேதோ கேள்விகள் தொடராய் மனதில் எழ...

சுற்றம் துறந்து
சுக துக்கங்கள் மறந்து
பற்றற்று துறவு கொள்
பண்பட்டுவிடும் மனம்
என்றே எனக்குள் விடை வந்தது....

உதிர உறவுகளை உதர இயலுமா ...?
உற்ற உறவுகளை தள்ள முடியுமா...?
கற்ற கல்வி மறந்து மழுங்கிடுமா..?
நற்றமிழ் ஆவல் உதிரம் விட்டு ஒழியுமா...?
எதையும் எதையும் துறப்பதற்கில்லை...??
எதையும் எதையும் மறுப்பதற்கில்லை...??

பின்னே எதற்கு இத்தனை யோசனை ...?
இதுதான் வாழ்க்கை மேடை...
ஏற்ற வேசத்தை நடித்துவிட்டுப் போ...
நவரசம் இருந்தால் தானே நாடகம் சுவைக்கும்....

ஆனால் ஏற்ற வேடத்தில் தனிமை காட்டு
எல்லோர் இதயத்திலும் ஒரு சிறு இருக்கையேனும் பெற்றிடு...

எழுதியவர் : வை.அமுதா (6-Aug-20, 8:05 pm)
பார்வை : 63

மேலே