பாரம்பரியப் பட்டை பராமரிப்பது எப்படி

ஆறுகஜம் நீள்வடிவ ஆடையின்
ஒருமுனையை வலதிடை சொருகி
ஒருமுறை இடுப்பில் தொடராய் சுற்றி
மடலாய் மறுமுனை விசிறியாக்கி
முந்தானியாய் பின்புறம் விட்டு
முன்புற மீதியை கொசுவமாக்கி சொருகி
கண்ணியத்துடன் பெண்ணழகைக் கூட்டும்
பாரிடை சிறந்த உடை புடவை
அதுவே நம் பாரம்பரியத்தின் முகவை....
புடவையில் பல வகைகள் இருப்பினும் , திருமணம் அதை சார்ந்த சுப காரியங்கள், பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில் பெண்கள் விரும்பி அணிவது பட்டுப் புடவையே.
பனாரஸ் பட்டு,மைசூர் பட்டு ,கொன்ராட் பட்டு, காஞ்சிப் பட்டு, போச்சம்பள்ளி பட்டு, செட்டிநாடு பட்டு, டஸ்ஸர் பட்டு,கட்வல் பட்டு, சுங்குடிப் பட்டு, சின்னாளம் பட்டு என பட்டுக்களில் இத்தனை வகைகள் இருப்பினும் காஞ்சிப் பட்டே நம் தமிழர் மனம் கவர்ந்தப் பட்டு.
“காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வர வேண்டும்
அந்தத் திருமகளும் உன்னழகை பெறவேண்டும்” என்ற கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகள் சொல்லும் காஞ்சிப் பட்டின் அழகையும் பெருமையையும்.பட்டின் விலை கூடக் கூட, அதன் தரம் அதிகரிக்கும். அதிக விலைகொடுத்து வாங்கும் பட்டுப் புடவைகளை தன்மை மாறாது பொலிவுடன் வைத்து பராமரிப்பது அவசியமாகும்.
பட்டுப் புடவைகளை பராமரிப்பது எப்படி...?
“புதுப் பொண்ணு ஒரு பிள்ளைக்கு
புதுப்பட்டு ஒரு துவைப்புக்கு” என்பது பழமொழி. அதாவது எவ்வளவு விலைக்கூடிய பட்டுப்புடவை வாங்கினாலும், ஒருமுறை துவைத்துவிட்டால் அதன் பொலிவு குறைந்துவிடும். கூடுமானவரை பட்டுப்புடவைகளை துவைக்கும் நிலை வராமல் பாதுகாத்துக் கொள்வதே ஆகச் சிறந்தது. அதற்கு நாம் செய்ய வேண்டியவை...
(1) புடவையை அணிந்து கழட்டியவுடன் , அதை நன்றாக விரித்து நிழலில் அல்லது மின்விசிறிக்கு அடியில் சிறிது நேரம் உலர வைக்கவேண்டும்.அதில் வேர்வை வாடை நீங்கியவுடன் மடித்து துணிப்பைகளில் வைப்பது நல்லது.
(2) விருந்து உண்ணும்போது உணவுப் பொருட்கள் சிதறி புடவையில் விழாமல் பார்த்துக் கொள்வது நல்லது.தவறி விழுந்து புடவையில் உணவின் கறைபட்டால்,புடவையை முழுதாய் துவைக்காமல், கறைபட்ட இடத்தில் மட்டும் ஈரக் கைக்குட்டையால் நன்றாகத் துடைத்து சிறிது நேரம் காயவைத்து மடித்து விடலாம்.எண்ணெய் கறை பட்டால், அந்த இடத்தில் மட்டும் சிறிதளவு திருநீறை தடவி , 10 - 15 நிமிடம் கழித்து ஈரக் கைக்குட்டையால் துடைத்து உலர்த்தலாம்.
(3) புடவையை வெகுநேரம் அணிந்திருக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், வியர்வை வாடையை போக்க ,தூய நீரில் ஒரு தேக்கரண்டி கிளிஸரின் சேர்த்து, அதில் புடவையை கசக்காமல் அலசி நிழலில் உலர்த்த வேண்டும்.இதனால் புடவையில் சுருக்கம் ஏற்படாது.பட்டு இழைகளும் விலகாமல் இருக்கும்.
(4) நன்றாக துவைக்க வேண்டுமெனில் , பார்டரை தனியே நனைத்து ,லிக்குவிட் சோப்பில் நனைத்தக் கைக்குட்டையை பார்டரில் மெதுவாய் தேய்த்து அழுக்கை நீக்கி மிதமான சுடுநீரில் அலசி நீரை வடியவிட்டு, பின்னர் அதைப்போலவே உடல் பகுதியை தனியாக துவைக்க வேண்டும் . அடித்து கசக்கிப் பிழியக்கூடாது.வாஷிங் மெஷினில் துவைக்கவே கூடாது. துணி நன்கு உலர்ந்தப்பின், மிக லேசான ஈரப்பதம் இருக்கும்போது அயர்ன் செய்தால் புடவை பொலிவு குறையாமல் இருக்கும்.
(5) புடவையின் அடிப்பகுதி தரையில் உராய்ந்து கிழியாமல் இருக்கவும், மெட்டி கொலுசுகளில் சரிகை மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும், புடவை வாங்கியவுடன் நல்ல தரமான ஃபால்ஸ் வைத்து தைப்பது நல்லது.
(6) கூடுமானவரை புடவையுடன் இணைந்திருக்கும் பிளவுஸ் பகுதியை வெட்டி எடுத்து பிளவுஸ் தைக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் பிளவுஸை கட்டாயம் துவைக்கும் நிலை ஏற்படும்.ஓரிரு முறை துவைத்தப்பின் ,அதை அணியும்போது புடவை பொலிவாக இருக்கும் , பிளவுஸ் பழைய தோற்றம் தரும்.மேலும் அதை வெட்டாதிருப்பின் புடவையின் நீளம் அதிகமாக இருக்கும் . அதனால் முன்புறம் கொசுவமும் சற்று அதிகமாகி, புடவைக்கட்டு கூடுதல் அழகைத் தரும்.
(7) புடவையின் உள்பகுதியுடன், அதே நிறத்தில் அரை மீட்டர் சேட்டின் துணியை இணைத்து தைத்தால் , புடவையின் நீளம் அதிகரிக்கும்.அத்துடன் புடவை கட்டும்போது, முதல் சுற்று சேட்டின் துணியாக இருப்பதால் , உடலின் வியர்வை நேரடியாய் புடவையில் படாது.
(8) எக்காரணம் கொண்டும் பட்டுப்புடவைகள் மீது வாசனை திரவியங்களை தெளிக்கக்கூடாது.வார்டுரோப்புகளில் வைக்கும்போது , புடவைகளின் மீது நேரடியாக பாச்சான் உருண்டைகளை வைக்கக்கூடாது. இப்போது சிறு துணிப் பைகளில் சந்தனத்தூள் மற்றும் சவ்வாது தூள்கள் கிடைக்கின்றன. அவற்றை வார்டுரோப்களில் வைத்தால் வாசனை புடவைகளில் பரவும்.
(9)நீங்கா கறை ஏற்பட்டால் டிரைக்ளீனிங்கிற்கு கொடுப்பதே சாலச் சிறந்தது.இப்போது பட்டுப்புடவைகள் வைக்க பிரத்யேகப் பைகளும் கிடைக்கின்றன.

பட்டுப்புடவைகளை எவ்வளவுநாள் துவைக்காமல் பாதுகாக்கின்றோமோ அதுவரை அதன் பொலிவு குன்றாது. தரமான பட்டுப்படவைகளை எவ்வளவு நன்றாக பராமரிக்கின்றோமோ அந்த அளவிற்கு அதன் ஆயுள் கூடும்.

எழுதியவர் : வை.அமுதா (6-Aug-20, 8:08 pm)
பார்வை : 151

சிறந்த கட்டுரைகள்

மேலே