கற்றுக் கொடுத்திருக்கிறது

நாம் வாழும் நாடுகளும்
நம்பியிருந்த மதங்களும்
இனங்களும்—ஏன்
இறைவன் ஒருவனே என்ற
ஆண்டவனாலும்
இனிமேல் வாழும் மக்களைக்
காப்பது எளிதல்ல என்று
கற்றுக் கொடுத்த கொரோனா
கற்றறிந்த ஆசானானது

அறம் தவறியவர்களென இகழ்தலுக்கு
ஆளான மருத்துவர்களும், காவலர்களும்
உயிரை பணயம் வைத்து மக்களின்
உயிரைக் காக்க போராடுகிறார்கள்,
தாள் பணிந்து
துப்புறவுத் தொழிலாளர்களின்
பாதங்களைக் கழுவி
பாதபூஜை செய்து, வணங்கி
பாராட்டுகிறோம், நன்றிக் கடனாக

எண்ணில் அடங்கா சொத்துக்கள்
ஏராளம் இருந்தாலும்-அவைகள்
ஒன்றுக்கும் உதவாது உனக்கு,
ஒருவரின் உடலில் எவ்வளவு
எதிர்ப்பு சக்திகள் இருக்கிறது
என்பது தான் முக்கியம்
என்று புரிய வைத்த கொரோனாவுக்கு
பசியால் ஏழைகளைக் கொன்றது
பெரும் பாவமல்லவா ?

அறிவியல் கண்டுபிடிப்புகளால்
இறுமாந்திருந்த உலக நாடுகள்
கொரோனா நோய்க்கு மருந்து ஏதும்
கண்டுபிடிக்க முடியாததால்
கொத்து,கொத்தா உலக மக்கள்
செத்து மடிந்தார்கள்,
அறிவியலில் எட்டாத உயரத்திற்கு
இன்னும் நீங்கள் செல்லவில்லை
என்று கொரோனா
கற்றுக் கொடுத்திருக்கிறது

எழுதியவர் : கோ. கணபதி. (7-Aug-20, 8:58 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 44

மேலே