எழுத்தாளர் கந்தர்வன்
நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் கந்தர்வன் இராமநாதபுரம் (முகவை ) மாவட்டம் சிக்கல் என்ற ஊரில் பிறந்தவர் . புதுக்கோட்டை அரசு வருவாய்த்துறையில் உயர்பதவியில் இருந்ததோடு தீவிர இடதுசாரியாக , தொழிற்சங்கம் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றெல்லாம் இயங்கியவர் . இவற்றையெல்லாம் தாண்டி , தன் சித்தாந்தம் , அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை தன் படைப்புத்திறனை சிதைத்து விடாமல் பார்த்துக்கொண்டவர் கந்தர்வன் .
அழகான கலைப்படைப்புகள் மூலம் தன்னைத் தமிழின் சிறந்த இலக்கியகர்த்தாக்களில் ஒருவர் என நிலைநாட்டிக் கொண்டவர் என்பது எல்லோரும் அறிந்தது . கண்ணதாசனால் நடத்தப்பட்ட இலக்கிய இதழான "கண்ணதாசனில் " இலக்கிய விமரிசனம் எழுதியதன் மூலம் தமிழ் இலக்கிய உலகில் மெல்ல பிரவேசித்தவர் . பின்னர் சிறுகதைகள் , கவிதைகள் என தன் படைப்பாற்றலை பரவலாக்கி வெளிப்படுத்திய ஆளுமை கொண்டவர் . சுபமங்களா , தாமரை போன்ற சிற்றிதழ்களிலும் எழுதியிருக்கிறார் .
" மைதானத்து மரங்கள் " எனும் இவரது உருக்கமான சிறுகதை " ஜெயகாந்தனால் இலக்கிய சிந்தனை " விருதுக்காக தெரிவு செய்யப்பட்டது எனில் இவரது எழுத்தின் தரத்தை அறிந்துகொள்ளலாம் . இவருடைய சிறுகதைகள் கலைநுட்பமானவை . மனித உணர்வுகளை ஆழத்தில் சென்று வருடுபவை .
தன் வாழ்நாளில் சாரமான ஒரு நாவல் எழுத ஆசைப்பட்டார் கந்தர்வன் . ஆனால் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் உடல் நலம் குன்றியிருந்தார் .நாவல் ஆசை நிறைவேறாமல் 2004 ஆம் வருடம் தனது அறுபதாவது வயதில் சென்னையில் மகள் வீட்டில் மறைந்தார் .
கந்தர்வனின் படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
சாசனம்
அப்பாவும் மகனும்
கொம்பன்
ஒவ்வொரு கல்லாய்
கந்தர்வன் சிறுகதைகள் (வம்சி நூலகம் வெளியீடு )
கவிதை நூல்கள்
மீசைகள்
சிறைகள்
கந்தர்வன் கவிதைகள் (அன்னம் நூலகம் வெளியீடு )
கந்தர்வன் ஒரு கவிஞரும் கூட , திறமையான பேச்சாளருமாகவும் செயல் பட்டிருக்கிறார் . மக்களோடு தன் நேரடி உரையாடலுக்கு கவிதையை பயன்படுத்தியவர் . கந்தர்வனின் சிறுகதைகளில் காணப்பட்ட கலானுபவம் கவிதைகளிலில்லையே எனும் விமரிசனம் வந்தபோது , அதை ஒத்துக்கொண்டு இப்படி சொல்லியிருக்கிறார் " எனக்கு அது வேறு , இது வேறு . கவிதை நேரடியாக களத்துல ஜனங்களோட பேசறதுக்கு என்று . புழங்கு மொழியில் நேரடி சொல்லாடலில் கவிதை சொன்ன கந்தர்வன் , கேட்கும் சராசரி மனிதர்களை சிந்திக்கவைத்திருக்கிறார் , சீண்டியிருக்கிறார் , சிரிக்கவும் வைத்திருக்கிறார் .
நன்றி !